
“அமெரிக்கா போறச்சே ஜீன்ஸ் போட்டுண்டு நைட் க்ளபுக்கெல்லாம் போவாராமே.”
“நம்மள எல்லாம் ஜன்னல தொறக்கச் சொல்லிட்டு அவர் கதவ சத்திக்கிட்டார்.”
“தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ். லக்கி சாப்.”
ரவி தன் முன்னால் திறந்து வைத்திருந்த டிஃபன் பாக்சிலிருந்து ஒரு கரண்டி தயிர் சதாம் எடுத்து வாயில் போட்டுவிட்டு ஒரு மாங்காய் பற்றையை கடித்துக்கொண்டான். சுற்றிலும் பேசப்பட்டுக்கொண்டிருந்த எல்லா பேச்சுக்களின் பேசும்பொருள் அந்த இளஞ்சாமியாராயிருந்தார். படித்தவற்றையும், பார்த்தவற்றையும், சொந்தச் சரக்கையும் இறக்கிவைத்தவாறு தக்காளி சாதம் எலுமிச்சை சதாம் என்று சாப்பிடுக்கொண்டிருந்தார்கள் அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் குப்பை கொட்டுபவர்கள்.
“மூடர்கள் இருக்கிரவரை இந்த மாதிரி ஆசாமிகளுக்குக் கொண்டாட்டம் தான். கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு மீடியேட்டர்?” மூன்று மேஜை தள்ளி அமர்ந்திருந்த ஜகத்ரட்சகன் கேள்வி கேட்க ரவிக்கு தயிர்சாதம் தொண்டையை அடைத்தது.
“சரியாய் சொன்னீங்க தலைவரே. யாருக்கு புரியுது இந்த காலத்துல. வாழ்க்கைய அதனோட ஏற்ற இறக்கத்தோட சந்திக்கத் துணிவில்லாம ஒரு சங்கடம்னு வரும்போது சாய ஒரு தூண் அழ ஒரு தோள்னு போய் ஒட்டிக்கராங்க. சாமியார்களும் மனுஷங்க தானே. அவங்க கூட்டம் கூடும்போது அத பொருளாதார ரீதியாவும் மற்ற ரீதிகளிலும் உபயோகிச்சுக்கராங்க. அவங்கள சொல்லி பிரயோசனமில்ல. நாம மாறணும்.” குருமூர்த்தி ஜகத்ரட்சகனை வழிமொழிந்து பேசினார்.
ரவி டிஃபன் பாக்சில் மிச்சமிருந்த தயிர் சாதத்தை வழித்து வாயில் போட்டுக்கொண்டு எழுந்தான்.
மதியத்திற்கு மேல் வேலையில் மனம் ஒட்டவில்லை. அவன் மனைவி சத்யப்ரேமா ஸ்ரீ ஸ்ரீ சக்ரகலாதரரின் அதிதீவிர பகத்தை. திருமணத்திற்கு பின் தான் ஆஷ்ரமம் போகத் தொடங்கினாள். முதலில் ஒரு பொழுதுபோக்கு வேலையாயிருந்தது பின்பு ஒரு அதிதீவிர ஈடுபாட்டு விஷயமானது. ரவிக்கு கடவுள் நம்பிக்கையே கூட ஜுரம் போல் வந்துவந்து போகும் சமாச்சாரம். சாமியர்களெல்லம் சுத்த அலர்ஜி. ஒருமாதிரியாய் ஆறு மணியானதும் கடையை சாத்திவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். வாசல் கதவில் பூட்டு போடப்பட்டிருந்தது. பூந்தொட்டிக்குப்பின்னால் கை விட்டுத்தழாவி சாவி எடுத்துக் கதவை திறந்து நுழைந்தன். சத்யப்ரேமா ஆஷ்ரமம் போயிருக்கவேண்டும். புதன் கிழமைகளில் தவறாது போய் குரு பூஜையில் கலந்து கொள்ளுவாள்.
ரவி கொஞ்சம் நேரம் பத்திரிகை படித்து நாற்காலியில் உட்கார்ந்தபடியே கண் அயர்ந்தான். அரை மணிநேரம் கழித்து வாசல் கதவு தட்டப்படும் சப்ததில் எழுந்துகொண்டு திறந்து பாராக்க சத்யப்ரேமா நின்றிருந்தாள்.
“என்ன கதவு திறக்க இத்தனை நேரம்? தூங்கிட்டிருந்தீங்களா?”
“உம்.”
“இன்னைக்கு குரு பூஜைல புதுசா ஒரு பட்டு பாடினா. அப்பப்பா சிலிர்த்துக்கிச்சு.” சொல்லியபடி அவள் உடை மாற்றிக்கொண்டு சமையலறையில் நுழைந்தாள்.
“ஜெய ஜெய ஸ்ரீ சக்ரகலாதராய. ஜெய ஜெய ஸ்ரீ குருவே நம.” பாடிக்கொண்டே பூரிக்கு மாவு பிசைந்தாள்.
ரவியும் சமையலறையில் நுழைந்து மேடையில் சாய்ந்து நின்றுகொண்டான்.
“இந்த ஆஷ்ரம போக்குவரத்து கொஞ்சம் குரைச்சுக்கோயேன் ப்ரேமா. சாமியார்கள் பற்றி ஊரெல்லாம் ஒரே சிரிப்பா சிரிக்கிராங்க. உன்னோட சுவாமி பத்தி எதுவும் பேச்சு இல்லை. இருந்தாலும் நாம ஜாக்ரதையா இருக்கணமோலியோ? ரவி அவளிடம் கேட்க அவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துப்பார்த்தாள்.
“அதுக்கில்லை ப்ரேமா. ஆன்மீகம்ங்கறது ஒரு அந்தரங்கமான விஷயம். கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு மீடியேட்டர்?”
“அனா ஆவனா கத்துத்தரதுக்கே குரு தேவைப்படும்போது ஆன்மீகம் காத்துக்க குரு வேண்டாமோ? சமையல் மாதிரி புஸ்தகம் பார்த்துச் செய்யற வேலையா இது? நிறைய சூட்சுமங்கள் இருக்கு. அத எடுத்துச் சொல்ல தான் குரு சாமியாரெல்லாம். ஒரு ஆசிரியர் அயோக்யனா போயிட்டதாலே கல்வி முறையே தப்புன்னு ஆயிடுமா? நாமளாவே வீட்ல உக்காந்து எல்லாத்தையும் கத்துக்கலாம்னு பள்ளிக்கூடம் போகாம இருந்திர முடியுமா?”
அவள் கேள்விக்கு ஜகத்ரட்சகன் என்ன பதில் சொல்லுவான் என்று யோசித்துப்பார்த்தான் ரவி. உன்னிடம் பேசி ப்ரயோசனமில்லை என்பது போல் வந்து ஹாலில் அமர்ந்துகொண்டான்.
“இப்படி மோட்டுவளைய பார்த்துண்டு உட்கார்ந்திருகறதுக்கு ரெண்டு பூரி தேச்சு தரலாமோலியோ?” அவள் சமையலறையிலிருந்து கத்த அவன் காதில் போட்டுக்கொள்ளாமல் தொலைகாட்சியை உயிர்ப்பித்தான்.
இரவு படுக்கையில் ‘தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ்.’ மதியம் சாப்பாட்டு மேஜையில் யாரோ சொன்னது நினைவிற்கு வந்தது. இவள் வேறு கொழுகொழுவென்றிருகிறாள். யோகா கற்றுத்தருகிறேன் என்று தோளில் கைபோட்டால் கூட விலக்கிவிடத்தெரியாத அப்பாவிப் பெண்ணாயிருகிறாள். சனிக்கிழமை ஒரு எட்டு சக்ரகலாதரரின் ஆஷ்ரமம் வரை போய் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனான்.
அன்றிரவு அவன் கனவில் வெள்ளை வெளேரென்ற ஒரு அறை வருகிறது. அந்த அறையின் தரை முழுவதும் மெத்தென்ற படுக்கை விரிக்கபடிருகிறது. அறை கதவு திறந்து கொள்ள கண்கூசும்படியாய் வெளிச்சம் அறை முழுவதும் நிறைகிறது. சக்ரகலாதரர் ஜீன்ஸ் பான்டும் பனியனும் அணிந்தபடி உள்ளே நுழைய தொடர்ந்து சத்யப்ரேமா நுழைகிறாள். சக்ரகலாதரர் படுக்கையில் படுத்துக்கொள்ள சத்யப்ரேமா ஒரு டிஃபன் பாக்ஸ் திறந்து அதிலிருந்த பூரியை விண்டு விண்டு ஊட்டி விடுகிறாள். தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாய் இல்லையா என்று சக்ரகலாதரர் கேட்க சப்தமாக சிரிக்கிறாள் அவள். சக்ரகலாதரர் அவள் இடுப்பை கிள்ள அவள் ஜெய ஜெய ஸ்ரீ சக்ரகலாதராய. ஜெய ஜெய ஸ்ரீ குருவே நம என்று பாடுகிறாள். அறையின் ஒரு மூலையில் அமர்ந்து பூரிக்கு மாவு பிசைந்தபடி ரவி இதை பார்த்துக்கொண்டிருகிறான்.
அடுத்த நாள் காலையில் எழுந்து கொண்ட ரவி இரவில் கண்ட கனவினால் உந்தப்பட்டு உடனே சக்ரகலாதரரின் ஆஷ்ரமம் வரை போய் பார்த்துவிடுவதென்று முடிவு செய்து அலுவலகம் கூப்பிட்டு விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பினான். சிறுவாணி செல்லும் சாலையிலிருந்து பரிந்து மலைபாம்பின் உடல் போல நீண்டு கிடந்த மண் பாதையில் நாற்பது நிமிடம் பயணிக்க ஜீவன் முக்தி பீடம் கண்ணுக்குக் கிடைத்தது.
மலை அடிவாரத்தில் நான்குபுறமும் உயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு நடுவே ஒரு உயர்ரக ரிஸார்ட் போல் நின்றிருந்தது ஆஷ்ரமம். வாரநாளானதால் அதிகம் கூட்டமில்லை. வாகனத்தை பார்க்கிங்கில் போட்டு விட்டு உள்ளே நுழைய வெள்ளை உடையில் கொஞ்சம் ஆட்கள் மேலும் கீழுமாய் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. எல்லோரும் தலைமுடியை சுத்தமாய் மழித்திருந்தர்கள். இவனை பார்த்து அமைதியாய் சிரித்தபடி நகர்ந்தார்கள். ரவி இலக்கில்லாமல் ஆஷ்ரமத்தை வலம் வந்தான். சிலர் தூண்களில் சாய்ந்து தியானத்திலிருந்தர்கள். அதில் கொஞ்சம் பேர் சாமி வந்தது போல் முன்னும் பின்னுமாய் மெதுவாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை கவனமாய் கடந்து செல்ல ஒரு பெரிய தெப்பக்குளம் தெரிந்தது. ஐம்பது படிகள் இறங்கிப்போகவேண்டிய குளம். குளத்தின் நடுவே செம்பினாலான ஒரு சிவலிங்கம் மூழ்கிக்கிடப்பது தெரிந்தது. இரண்டு பேர் அந்த லிங்கத்தைப் பற்றி நீரில் மிதந்தபடி குப்புற படுத்துக்கிடந்தார்கள்.
இன்னும் கொஞ்சம் தூரம் நடக்க ஒரு ராட்ஷச பானையை கவிழ்த்துப்போட்டது போல் ஒரு கட்டிடம் தெரிந்தது. அதற்கு வலதுபுறம்ச் சிறைச்சாலைகளில் இருப்பது போல் பனிரெண்டு அடி உயர சுவரொன்றிருந்தது. சுவரின் மறுபக்கத்திலிருந்து உடுக்கையின் சப்தம் போல் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சுவரிலிருந்த வாயிலருகே நெருங்க ஒரு வெள்ளையுடை அணிந்த பெண்ண நெருங்கி வந்து “சுவாமிஜி த்யானத்தில் இருக்கிறார். உள்ளே அனுமதி இல்லை.” என்று சிரித்தவாறு சொன்னாள். இவன் சற்று தயங்கிவிட்டு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் நடந்துவிட்டு அந்த சுவற்றின் திசையில் திரும்பிப் பார்க்க நான்கு பெண்கள் அந்த வாயிலின் வழியே உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். ‘தட் கய் ஹாஸ் எ குட் டேஸ்ட் பார் வுமன். எல்லாமே வொளப்சஸ் லேடீஸ்’ மீண்டும் அந்த வாக்கியம் நினைவிற்கு வந்தது. அந்த பெண்கள் எல்லோருமே சதைபிடிப்பாயிருந்தார்கள்.
ரவி ஒருமணிநேரம் அந்த ஆஷ்ரமத்தில் மேலும் கீழுமாய் நடந்து விட்டு பத்து ரூபாய் கொடுத்து கொஞ்சம் புளியோதரை வங்கிச் சாப்பிட்டு விட்டு கிளம்பினான். உடுக்கையின் சப்தம் இப்பொழுது பலமாய் கேட்டுக்கொண்டிருந்தது. தாளம் கொஞ்சம் பிசிரடிப்பதாய் பட்டது அவனுக்கு.
அடுத்தநாள் அலுவலகத்தில் மீண்டும் சாப்பாட்டுக் கடை விரிக்கப்பட்டது. ஒபாமா, ஒசாமா, மாஓயிஸ்ட் என்று பலதும் பேசித்தீர்த்து மீண்டும் சாமியார்கள் பக்கமாய் பேச்சு திரும்பியது.
“எல்லாருமே கம்மனாட்டிகள் தான். கொஞ்சம் பேர் மட்டிக்கரான். மத்தவங்க மாட்டிக்கல்லை. அதுதான் வித்யாசம்.” ராமநாதன் உரக்கச் சொல்ல இவன் அருகே அமர்ந்திருக்கும் வினோத் “அப்படி சொல்லறது சரியில்ல ராமநாதன் சார். நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா நாம ரொம்பவே நம்பியிருக்கரவங்க தப்பு பண்ணும்போது இப்படி ஒரு பொதுப்படையான அபிப்ராயம் வந்திருது.” என்று விட்டு இவன் பக்கம் திரும்பி “ஸ்ரீ ஸ்ரீ சக்ரகலாதரர் பத்தி கேள்விப்படிருக்கிங்களா?” என்றான்.
ரவி உள்ளே திடுகிட்டலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இல்லை” என்பது போல் தலையசைத்தான்.
“ஒரு வாரம் முன்ன அவரோட ஆஷ்ரமம் சம்பந்தப்பட்ட சிடி ஒண்ணு எடிட்டோரியலுக்கு வந்துச்சு. ஆஷ்ரமத்தோட முன்ன தொடர்பிலயிருந்த ஒரு நபர் ஸ்பை காம் வச்சு எடுத்த சமாசாரம். ஸ்ரீ ஸ்ரீ யோட சீடராயிருந்த அவர் தனக்கு தீட்சை அளித்து ப்ரதம சீடராக்கல்லை அப்படிங்கற கடுப்புல ஸ்ரீ ஸ்ரீ பக்தர்களோட தனிமைல பேசற அறைல காமராவ வச்சிட்டார்.”
ரவியின் இருதயத்துடிப்பு அதிகரித்தது. வினோத் ஒரு சிறு இடைவேளை விட்டு சப்பாத்தியை மாடு அசை போடுவது போல் மெதுவாக மென்று விழுங்தி தண்ணீர் குடித்துவிட்டு தொடர்ந்தான்.
“மூன்று நாட்களோட அன் ஏடிடட் ஃபுடேஜ் இருந்தது அந்த சிடில. ஏறக்குறைய ஐம்பது பேரை தனிமைல சந்திக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ. அதுல நிறைய பெண்கள். ஒரு இடத்துல கூட ஒரு தப்பான பார்வையோ தப்பான பேச்சோ இல்லை. பேசற விஷயங்களெல்மே ஆன்மீக முத்துக்கள். தொகுத்து புஸ்தகமா போடலாம். இரண்டாவது நாள் சாயந்தரம் ஸ்ரீ ஸ்ரீ யோட ப்ரதம சீடர் ஒருவர் அந்த அறையில் ஒரு பெண்மணியை சந்திகிறார். அவங்க கொஞ்சம் சில்மிஷத்துல ஈடுபடறாங்க. ஆசிரியருக்கு ஸ்ரீ ஸ்ரீ மேல நல்ல மதிப்பு. கூப்பிட்டு விஷயம் சொல்ல ஸ்ரீ ஸ்ரீ சம்பந்தப்பட்ட நபர ஆஷ்ரமத்தை விட்டு நீக்கிடரார். பத்திரிகையும் விஷயத்தை பெரிசுபடுத்தலை. அதனால தான் சொன்னேன். எல்லருமே கம்மனாட்டிநு பொதுப்படையா சொல்றது சரியில்லை. ஸ்ரீ ஸ்ரீ போல நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க.” சொல்லிவிட்டு அவன் சப்பாத்தியை அசை போடுவதை தொடர்ந்தான்.
சாப்பிட்டு திரும்பும் வழியில் “இது தான் அந்த சிடி. போட்டுப் பாருங்க. ஸ்ரீ ஸ்ரீ பேசற ஒவ்வொரு விஷயமும் அத்தனை ஆழமானது. கான்பிடென்ஷியலா வச்சுக்குங்க.” என்று விட்டு ஒரு சிடி யை தந்தான். ரவி அதை வாங்கிக்கொண்டு தன் மேஜைக்கு வந்தான்.
ஆறரை மணிக்கெல்லாம் வீடு திரும்ப சத்யப்ரேமா இருக்கவில்லை. உடை மாற்றி முகம் கழுவிவிட்டு முதல் வேலையாய் வினோத் தந்த சிடி யை ப்ளேயரில்ப் போட்டு தொலைகாட்சியை உயிர்ப்பித்தான். நிறைய நேரத்திற்கு ஆள் இல்லாத ஒரு அறையை ஒரே கோணத்திலிருந்து கட்டிகொண்டிருக்கிறது கேமரா. ஸ்ரீ ஸ்ரீ அறைக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் பக்தர்கள் வந்து போகிறார்கள். எல்லோரும் தங்களது ப்ரச்சனைகளை சொல்லி அழ ஸ்ரீ ஸ்ரீ பொறுமையாய் கேட்டுவிட்டு கருணை நிறைந்த குரலில் ஆறுதல் சொல்கிறார். வேதம், உபநிஷத் என்று சரளமாய் மேற்கோள் காட்டி பேசுகிறார். மனதை லேசாகும்படியான பேச்சு. சிலருக்கு தியானம் கற்றுத்தருகிறார். இடையிடையே மிக மிக மெதுவாக கட்சிகள் நகர்கின்றன.
இரண்டாம் நாள் மாலை. அறையில் ஆளில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் அறைக்குள் ஒரு நபர் காவியுடையில் நுழைகிறார். தொடர்ந்து ஒரு பெண்ணும் நுழைகிறாள். பெண்ணின் முகம் மாஸ்க் செய்யப்பட்டிருக்கிறது. இருவரும் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் ஆறத்தழுவிக்கொள்கிறார்கள். தழுவியபடியே நகர்ந்து கேமராவின் வட்டத்திற்கு வெளியே போகிறார்கள். ரவி அந்த கட்சியைத் திருப்பிப்போட்டுப் பார்கிறான். வெளிர் நீல சேலையில், அவனுக்கு மிக மிக பரிச்சயமான உடல்வாகில் இருக்கும் அந்த பெண் சத்யப்ரேமா.