Monday, March 22, 2010

மேக்னா





விக்டர் ஹீரோ ஹோண்டவை ஒரு சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். காற்றை எதிர்த்துப்பயணித்துக்கொண்டிருந்ததால் குளிர் காற்று உடலைத்தொட்டு சிலிர்க்கச்செய்தது. பில்லியனில் அமர்ந்திருந்த ப்ரகாஷ் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தில் பார்வை போட்டான். நேரம் இரவு ஒன்பதை கடந்திருந்தது.

“நம்ம எங்க போயிட்டிருக்கோம்?” என்றான் ப்ரகாஷ் விக்டரிடம்.

“க்ராண்ட் ரோட்.” என்றான் விக்டர். திரும்பி ப்ரகாஷை பார்த்துக் கண் சிமிட்டினான்.

“க்ராண்டு ரோடா?”

“ஆமாம். க்ராண்ட் ரோட் தான். பம்பாயின் சிவப்பு விளக்குப் பகுதி.”

ப்ரகாஷ் எதுவோ கூற முற்பட்ட விநாடி சாலையின் மத்தியில் அந்த இளைஞர் கும்பல் தோன்றியது. கைகளை நீட்டி வலுக்கட்டாயமாய் இவர்கள் வண்டியை நிறுத்தியது. எக்கச்சக்கமாய் அழுக்கேறிய ஜீன்சும் காதில் கடுக்கனும் அணிந்திருந்த இளைஞர்கள் அவர்களை நெருங்கி வந்தார்கள். “Happy New Year” என்று நரம்பு புடைக்கக் கத்தினார்கள். ஒவ்வொருவராய் கைகுலுக்கினார்கள். அனைவரின்மீதிருந்தும் பீரின் வாடையும் நிக்கோடீனின் நாற்றமும் அடித்தது. பலூன்களை ஊசியால் குத்தியுடைத்து உல்லாசமாய் ப்ரகஷையும் விக்டரையும் வழியனுப்பிவைத்தார்கள். விக்டர் வண்டியை உயிர்ப்பித்து செலுத்தினான். சாலையின் இருமருங்கிலும் நிறைய இளைஞர்களும் இளைஞிகளும். இவர்கள்மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தார்கள்.

விக்டர் வாகனத்தை க்ராண்ட் ரோட் நோக்கிச் செலுத்தினான்.

“வேண்டாம் விக்டர். தப்பு.” என்றான் பிரகாஷ்.

“Everything is fair on a New Year’s eve.” என்றான் விக்டர்.

ப்ரகாஷ் மறுக்க முயன்றான். அவன் இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கோஹால் அவனைத்தடுத்தது. எதுவும் பேசவிடாமல் செய்தது. விக்டர் சற்று சப்தமாக ப்ரகாஷிற்கு கேட்கும்படியாக தன் லீலைகளை விவரித்துக்கொண்டிருந்தான்.

“இதவரை மூன்று முறை போயிருக்கேன். முதல் தடவை ஒரு பெங்காலி பெண். கடுகெண்ணை நாற்றம் என்றால் அப்படி ஒரு கடுகெண்ணை நாற்றம் அவள் மேல். மூக்கை பிடித்து கொண்டே ...” உரக்கச் சிரித்தான் அரை வாக்கியத்தில் நிறுத்தி.

“இரண்டம் முறை ஒரு தெலுங்கத்தி. பலமாதமாய் தண்ணீர் காணாத உடல். மட்டமான பவுடர் வாடை. இது போதாதென்று நம் பாஷையும் தெரியாதவள். எது பேசத்துவங்கினாலும் பாதியில் குறுக்கிட்டு ஒரு ‘ஏவண்டி’ போடுவாள். அவளை ஒரு வழியாய் புரியவைத்துப் படுக்கசெய்யவே பாதி நேரம் ஆயிடுச்சு. வரும்போது நான்கு தமிழ் கெட்டவார்த்தை சொல்லிகுடுத்திட்டு வந்ததேன் அவளுக்கு.”

“அடுத்த முறை ஒரு தமிழ் பெண். ஆயிரம் தான் சொல்லு தமிழ் பெண் தமிழ் பெண்தான். பேருகூட கவிதாவோ கலாவோ என்னவோ சொன்னா. கொடுத்த காசிற்கு ஈடான திருப்தி. அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன். தமிழுக்கு மாறிட்டேன். இந்த விஷயத்திலயாவது இனப்பற்று காட்டுவோமே.” மீண்டும் உரக்கச் சிரித்தான்.

“அத்தனை மாநிலமும் இருக்கும். உனக்கு வேண்டியதை தேர்ந்தெடுதுக்கலாம்.”

விக்டர் வாகனத்தை திருப்பி கிராண்டு ரோட்டில் நுழைத்தான்.


அவர்கள் க்ராண்ட் ரோடிற்குள் நுழைந்ததுமே ‘மாமாக்கள்’ அவர்கள் வாகனத்தைச்சூழ்ந்து நிறுத்த முற்படுகிறார்கள்.

‘கேரளா. ஆந்திரா. தமிழ்நாடு. நார்த் இந்தியா.’ என்று லாட்டரி வியாபாரிகள் போல கூவி அழைக்கிறார்கள்.

சாலையின் இருபுறமும் பாதியுடையில் மட்டமான பவுடர் பூச்சும் அடர்த்தியான உதட்டுச்சாயமுமாய் பெண்கள் நிற்கிறார்கள். கண்ணடித்தும் கீழுதட்டை கடித்தும் இவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

விக்டர் அவர்களை புறக்கணித்துவிட்டு ஒரு இரண்டு மாடிக்கட்டிடத்தை சமீபித்து வாகனத்தை நிறுத்தினான். ப்ரகாஷ் பில்லியனிலிருந்து இறங்கிக்கொள்ள சில பெண்கள் வந்து அவன் கரத்தை பற்றியிழுக்க முற்படுகிறார்கள். விக்டர் அவர்களை தோள்மேல் கைவைத்து எக்கித் தள்ளிவிட்டு ப்ரகாஷை இழுத்துக்கொண்டு அந்த கட்டிடத்திற்குள் நுழைகிறான். புறக்கணிக்கப்பட்ட வேசிகள் முடுகுக்குபின் கதம்பமாய் பல மொழிகளில் கெட்ட வார்த்தை பேசி இவர்கள் மேல் காறி உமிழ்கிறார்கள்.

விக்டர் அந்த விசாலமான அறைக்குள் நுழைகிறான். ப்ரகாஷும்.

“வாங்கோஜி. வாங்கோ.” ஒரு தடித்த பெண்மணி வெற்றிலை சாற்றினால் சிவபேறியிருந்த வாயால் இவர்களை அழைக்கிறாள்.

“என்ன பார்க்கவே முடியல?” என் விக்டரை உரிமையுடன் கடிந்துகொள்கிறாள்.

“இது யாரு தோஸ்தா?” மழையில் நனைந்த கோழி போல் நின்றிருக்கும் ப்ரகாஷைப் பார்த்துக் கேட்கிறாள். “உம்.” என்றான் விக்டர்.

“ஆந்திராவா? கேரளாவா? தமிழ்நாடா?” விக்டர் கிசுகிசுப்பாய் ப்ரகாஷின் காதில் கேட்டான். ப்ரகாஷ் பதில் பேசவில்லை.

விக்டர் அந்த தடித்த பெண்மணியை நோக்கி “இரண்டு தமிழ்நாடு.” என்றான் ஹோட்டலில் நாஷ்த்தா ஆர்டர் செய்வது போல.

“புதுசா ஒரு பெங்காலி பொண்ணு வந்திருக்கு. பதினஞ்சு வயசுதான்.” தடித்த பெண்மணி விக்டரை பார்த்துக் கண்சிமிட்டிக் கூறினாள்.

விக்டர் அந்த வலையில் விழப்பார்த்தான். இனப்பற்றும் அதற்க்கு மேலாக அந்த கடுகெண்ணைகாறியின் நினைவுகளும் அவனை தடுக்கலாயின.

“இல்லை. தமிழ்நாடு போதும்.” என்றான்.


“ஜலஜா. மேக்னா.” அந்த பெண்மணி மாடியை நோக்கிக் குரல் கொடுத்தாள். பத்தாவது வினாடியின் முடிவில் மாடியில் இரண்டு பெண்கள் தோன்றினார்கள் படியிறங்கி வந்து இவர்களை சமீபித்தார்கள்.

“சார நல்லா கவனிச்சு அனுப்பு. நம்ம ரெகுலர் கஸ்டமர்.” என்றாள் அந்த பெண்மணி. விக்டர் ஜலஜாவின் இடுப்பை வளைத்து அவளை தொடக்கூடாத இடங்களில் தொட்டான். அவள் சிரித்தாள்.

“Have a nice time.” விக்டர் ப்ரகாஷிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மேக்னா நடக்கத்துவங்கியிருந்ததை உணர்ந்து ப்ரகாஷ் அவளை தொடர்ந்தான்.

அவள் அவனை ஒரு எட்டுக்கு எட்டு அறைக்குள் அழைத்துச்சென்றாள். அவன் உள்ளே நுழைய அவள் கதவை அடைத்துத்தழிட்டாள். அந்த அறையில் ஒரு சின்ன கட்டிலிருந்தது. கட்டிலில் அதிகமாய் கசங்கிய ஒரு போர்வை. கட்டிலின் பக்கவாட்டில் ஒரு குட்டை மேஜை. அதன் மேல் அழுக்கேறிய வாட்டர் ஜக். அதற்குள் தண்ணீர்.

அந்தப் பெண் கட்டிலைச் சுட்டிக்காட்டி ‘உட்கார்’ என்பது போல் பாவனை செய்தாள். அவன் உட்கார்ந்தான். புழுக்கமாகவும் படபடப்பாகவும் உணர்ந்தான். தொப்பலாய் வியர்த்திருந்தது. அவள் அவனது சட்டையை இலாவகமாய் அகற்றினாள்.

ப்ரகாஷ் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் மெலிதாய் புன்னகைத்தாள். வசீகரமான கண்களுக்கு மைதீற்றியிருந்தாள். சின்னதாய் பொட்டு வைத்திருந்தாள். பொட்டின் மேல் ஒரு சந்தன கீற்று. கூந்தலை வகிடெடுத்து வாரி கொண்டயாய் போட்டிருந்தாள். சிவப்பு நிறத்தில் சேலையும் அதே நிறத்தில் இரவிக்கையும் அணிந்திருந்தாள்.

அவள் ப்ரகாஷை படுக்கையில் சாய்த்தாள். ப்ரகாஷின் கரம் அருகே மேஜைமேலிருந்த ஜக்கைத் தட்டிவிட அது சப்தமாய் சரிந்து விழுந்து தரையை ஈரமாக்கியது. அவள் அதுகுறித்து கவலை கொள்ளாதவளாய் ப்ரகாஷின் மார்பில் விரலால் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். தன் மார்புச்சேலையை விலக்கிக்கொண்டு அவன் மேல் சரிந்து அவன் முகத்தை நெருங்கி முத்தமிட முயன்ற வினாடியில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அவர்கள் இருந்த அறையின் கதவு படபடவென சப்திக்கபட்டது. ப்ரகாஷ் திடுக்கிட்டான்.

அந்தப் பெண் சப்தத்தைச் சட்டை செய்யாமல் அவனை மேலும் நெருங்கினாள். பட் பட் பட். சப்தம் தொடர்ந்து கேட்டது. ப்ரகாஷ் அவளை விலக்கிவிட்டு எழுந்தான். சட்டையை அணிந்துகொண்டு கதவை நெருங்கினான். இருதயத்துடிப்பு அதிகரித்திருந்தது. கதவை மெல்ல திறந்தான். வெளியே ஒரு நடுத்தர வயது ஆள் நின்றிருந்தான். அவன் கை ஒரு பெண்ணின் இடுப்பை வளைத்துப் பற்றியிருந்தது. அறைக்குள் கஸ்டமர் இருப்பதை உணர்ந்து அவன் ‘சாரி’ சொல்லிவிட்டு நகர்ந்தான். ப்ரகாஷ் கதவை சாத்தித்தாழிட்டுவிட்டு கட்டிலில் படுத்திருந்த மேக்னாவை நெருங்க அவள் அவனை அணைத்துக்கொண்டாள். அவனுக்குச் சூடான முத்தங்கள் தந்து பின் ச்ப்ரிசத்தால் குளிரவைதாள். அவளது தீண்டல் ஏற்றிய போதை உடலின் உள்ளே புகுந்து ஆல்கோஹாளின் போதையுடன் சண்டை போட்டது. எங்கிருந்தோ ஒரு பெண்ணின் அலறல் சப்தம் கேட்டது. மேக்னா முத்தத்தில் மும்முரமாய் இருந்தாள். அரை மணி நேர சில்மிஷத்திற்குப்பின் அவர்கள் சங்கமிதார்கள்.

ப்ரகாஷும் அவளும் படுக்கையில் வேறு வேறு திசைபார்த்துப் படுத்தவாறு சற்று நேரம் இளைப்பாறினார்கள். கதவு சப்திக்கப்படும் ஓசை கேட்டது. விக்டரின் குரல் அவன் பெயரை அழைப்பது கேட்டது. ப்ரகாஷ் எழுந்து சட்டை அணிந்து கொண்டான். மேக்னாவும் எழுந்து உடையை சரிசெய்துகொண்டாள். ப்ரகாஷ் அவாளை பார்த்தான். அவள் புன்னகைத்தாள். ப்ரகஷிற்கு அவளிடம் பேசவேண்டும்போலிருந்தது. என்ன பேசுவதென்று பிடிபடவில்லை. விக்டரின் குரல் இப்பொழுது உயர்ந்திருந்தது. ப்ரகாஷ் சில வினாடிகள் தயங்கிவிட்டு எதுவும் பேசாமல் கதவை திறந்து வெளியேறினான்.


இரண்டு நாட்கள் கடந்து சென்றன. ஒரு மதியப்பொழுதில் ப்ரகாஷும் விக்டரும் அவர்களது மான்ஷன் அறையிலிருந்தார்கள். விக்டர் கண்ணாடி குவளையில் பீர் குடித்துக்கொண்டிருந்தான். ப்ரகாஷ் கட்டிலில் குப்புறப்படுத்து விரலிடுக்கில் இருந்த அழுக்கை தீக்குசியால் நிமிண்டி எடுத்துக்கொண்டிருந்தான். கட்டைவிரலின் அழுக்கைக்களைந்த ப்ரகாஷ் தீக்குச்சியைத் தூர எறிந்து விட்டு விக்டரின் பக்கம் திரும்பினான்.

“விக்டர்.”

“உம்.”

“எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கு.” ப்ரகாஷ் உள்ளங்கையை உற்றுப்பார்த்தபடி சொன்னான்.

“யாரை?” விக்டர் சுரத்தில்லாமல் கேட்டன்.

“அவதான். அண்ணைக்கு போயிட்டு வந்தமே. முப்பத்தொண்ணாம் தேதி. க்ராண்ட் ரோட்ல.”

“அப்படி வாடா விஸ்வாமித்ரா. அண்ணைக்கு என்னமோ டயலாக் விட்டே. இப்ப ருசி கண்ட பூனை அடுப்பை தேடுதோ? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனா அடிக்கடி விளையாடினா உடம்பு கெட்டுடும். அப்புறம் குற்றம் புரிந்தவன் வாழ்கையில் நிம்மதி பெறுவதென்பதேது காந்தா கதைதான். அளவோடு சுவைத்து இன்புற்றிருக்கணும்.”

“அதெல்லாம் இல்ல விக்டர். அவளை மறக்க முடியலை. மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு அவளோட நினைப்பு. பார்த்துப்பேசணும் போல இருக்கு.

விக்டர் பதில் பேசாமல் அவனை பார்த்தான்.

“அந்த கண்ணு. அந்த சிரிப்பு. இந்த இரெண்டு நாளா அவ நினைப்புதான் முழுசா. பாவம் விக்டர் அவ. இந்த தொழில்ல வந்து மட்டியிருக்கா. என்ன கஷ்டமோ. நெத்தில சந்தனப்பொட்டு வச்சிருந்தா.”

“கண்ணு அழகாயிருந்திருக்கலாம். சிரிப்பு அழகாயிருந்திருக்கலாம். சந்தனப்பொட்டு வச்சிருந்திருக்கலாம். ஆனா அவ ஒரு வேசி. பணத்துக்காக உடம்பை விக்கறவ.”

“தெரியும் விக்டர். ஆனா மனசு அவளைப் பார்க்கணும்னு அடம் பிடிக்குது. என்னை கூட்டிட்டு போவியா?”

விக்டர் பதில் சொல்லும்முன்னரே ப்ரகாஷின் மனதில் மின்னலாய் அந்த எண்ணம் தோன்றியது.

“விக்டர்.”

“சொல்லு.”

“நமக்கு அவளை அங்கிருந்து மீட்டிடு வரமுடியுமா?”

“மீட்டிட்டு வரது போயி அப்படி ஒரு எண்ணத்தோட அங்க போனாலே கைய கால உடைச்சிடுவாங்க அங்க காவலுக்கு இருக்கற அலிகள்.”

“பணம் குடுக்கலாம். அவங்க கேக்கர பணம்.”

“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. அந்த கட்டிடத்துக்குள்ள நுழைஞ்சிட்ட பெண்ணுக்கு விமோசனமே கிடையாது. மறந்திடு அவளை.”

“வேற ஏதாவது வழில முயற்சி பண்ணினா என்ன? கஸ்டமர்களை வளைக்க அந்த ரோட்டோரமா பொண்ணுங்க நின்னிட்டிருந்ததை பார்த்தோமே. அது மாதிரி ஒரு குறிப்பிட்ட நாள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில அவளை வந்து நிக்கசொல்லுவோம். வண்டியை எடுத்துட்டு போயி அவளை கடத்திட்டு வந்திருவோம்.”

“வந்து?”

“வந்து அவ கைல கொஞ்சம் பணம் கொடுத்து எங்கயாவது போயி நிம்மதியா இருக்கச் சொல்லி அனுப்பிவைப்போம்.”

விக்டர் பிடிகொடுத்துப் பேசவில்லை.

“நல்ல பொண்ணா தெரிஞ்சா. வரக்கூடாத இடத்துல வந்து அகப்பட்டிருக்கா. எத்தனையோ பாவம் பண்ணறோம். இது ஒரு ப்ராயச்சித்தமா இருக்கும்.”

ப்ரகாஷின் மன்றாடல்களும் அவன் காட்டிய தீவிரமும் விக்டரின் மனதை மாற்றின.

“அலிகள் கையால அடிபட்டுச் சாகணும்னு தலைல எழுதியிருயந்தா அத யாரால மாத்த முடியும்.” என்றான் விக்டர் முடிவாக. பச்சைக் கொடி.

அடுத்த நாள் இரவு அவர்கள் மீண்டும் க்ராண்ட் ரோட் சென்றார்கள்.

“விஷயத்தை தெளிவா சொல்லிப் புரியவை அவளுக்கு. வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணி. வெள்ளை அம்பாசிடர். தோ அந்த பீடா கடை பக்கத்தில. புரிஞ்சிதா?” விக்டர் ப்ரகாஷை தாயார் படுத்தினான்.

“உம்.” என்றான் ப்ரகாஷ்.

ரெகுலர் கஸ்டமர் என்பதால் பெண்ணை தேர்ந்தெடுக்கும் உரிமை விக்டருக்கு தரப்பட்டது.

“மேக்னா.” என்றான் விக்டர். அவள் வந்ததும் ப்ரகாஷுடன் அனுப்பி வைத்தான்.

இன்று அவள் ப்ரகாஷை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவை தாழிட்டுவிட்டு அவன் சட்டையை கழட்ட முற்பட்டவளை அவன் தடுத்தான்.

“வேண்டாம். இன்னைக்கு நான் வந்திருக்கிறது வேற விஷயமா. இந்த நரகத்தில இருந்து உன்னை மீட்டுப்போக வந்திருக்கேன். என்னோட வந்திடு.”

அவன் அவளுக்கு திட்டத்தை விளக்கி முடித்தான். அவள் எதுவும் பேசவில்லை. அவள் முகத்தில் ஒரு சோர்வு தெரிந்தது. கண்களில் வேதனை தெரிந்தது. அவன் சற்று நேரம் படுக்கையில் அவள் எதிரே அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான். இன்றும் சந்தனப்பொட்டு வைத்திருந்தாள்.

விடைபெற்று வரும்பொழுது அவள் மெலிதாய் புன்னகைத்தாள்.


ஐந்து நாட்களின் இடைவெளி ப்ரகஷிற்கு ஐந்து ஆண்டுகள் போலிருந்தது. அவன் மேக்னாவுக்கு ஒரு சேலை வாங்கியிருந்தான். கொஞ்சம் பணம் கடன்வாங்கி வைத்திருந்தான் அவளுக்கு கொடுப்பதற்கு.

வெள்ளிகிழமை. விக்டர் உடன் வந்தான். ஒரு வாடகை கார் அமர்த்திக்கொண்டு அவர்கள் க்ராண்ட் ரோட் போனார்கள். காரை ஓரமாய் போடாச்சொன்னான் விக்டர். நேரம் 9:25. பத்து நிமிடத்தை காத்திருப்பில் விரயமக்கினார்கள்.

“போலாமா?” என்றான் விக்டர்.

“உம்.” என்றான் பிரகாஷ்.

வாகனம் அந்த சாலையில் நுழைய மாமாக்கள் நெருங்கிவந்தார்கள். ஜன்னலில் தட்டினார்கள். விக்டர் அவர்களை விரட்டினான். சாலையின் ஓரமாய் பெண்கள் கூட்டம். சிறிது தூரம் பயணிக்க கூட்டம் குறைந்தது. அங்கங்கே தனித்தனியாய் ஓரிரு பெண்கள் நீச்சலுடை அளவிலான ஆடை உடுதி நின்றிருந்தார்கள். இவர்களை பார்த்துக் கீழுதடு கடித்தார்கள்.

அந்த பீடா கடை இருந்த இடம் இருட்டியிருந்தது. ப்ரகாஷ் அதனருகே பார்வைபோட்டான். அவள் இருக்கவில்லை.

“காணமே.” என்றான் ப்ரகாஷ் விக்டரை பார்த்து.

“எனக்கு தெரியும் அவ வரமாட்டானு. ஆரம்பத்துல தான் கொடுமையா இருக்கும். அதுக்கப்புறம் பழகிடும். வெளிய வரணும்னு நெனச்சாலும் பணத்தாசை விடாது.”

“அசிங்கமா பேசாதே விக்டர். ஏதாவது தேவடியா மகன்கிட்ட மட்டியிருப்பா.” ப்ரகாஷ் ஆத்திரமாய்ச் சொன்னான்.

“கொஞ்சம் நேரம் நின்னு பாப்போம்.” என்றான் ப்ரகாஷ். வாகனத்தை திருப்பிப்போட்டார்கள்.

“போலாமா?” என்றான் விக்டர் ஒரு மணி நேர காத்திருப்பிற்குப்பின். ப்ரகாஷ் தலை அசைத்தான். இன்னும் அவளை தேடிக்கொண்டிருந்தான்.

வண்டியை உயிர்ப்பித்துச் செலுத்த மீண்டும் மாமாக்கள் கூட்டம். கொத்துக்கொத்தாய் பெண்கள். அந்த கூட்டத்திலும் அவள் ப்ரகாஷின் பார்வையில் தெள்ளத்தெளிவாய் பட்டுவிட்டாள். சாலையோரமாய் அடர்த்தியான உதட்டுச்சாயம் பூசி நின்றிருந்தாள். சந்தனப்பொட்டு வைத்திருந்தாள்.

“தேவடிய மக.” என்றான் ப்ரகாஷ்.

விக்டர் உரக்க சிரித்தான்.

ஐந்து மாதங்களுக்குப்பின் ஒரு பௌர்ணமி இரவில் ப்ரகாஷ் படுக்கையில் மல்லாக்கப்படுத்திருந்தான். அவனது நினைவுக்கோர்வையில் சட்டென அவள் நினைவு வந்து இணைந்ததுகொண்டது. மேக்னாவின் நினைவு. இத்தனை நாட்கள் முழுவதுமாய் மறந்துபோயிருந்தவள் நினைவு அவன் ஆச்சர்யப்படும்படியாய் அவன் மனதில் வந்து உட்கார்ந்துகொண்டது. அவளது புன்னகையும் சந்தனப்பொட்டும் நினைவில் வந்தன. அவள் கண்களும். அந்த கண்கள் அவனிடம் எதுவோ கூற முற்படுவதைப்போல் பட்டது.

அவனுக்கு அவர்கள் முதன்முறை சந்தித்த அறை நினைவிற்கு வருகிறது. அந்த அறையில் அவன் கைபட்டு தண்ணீர் ஜக் சப்தமாய் தரையில் விழுகிறது. அவளிடம் அசைவு இல்லை. கதவு பலமாய் சப்திக்கப்படுகிறது. அவளிடம் அசைவு இல்லை. இரண்டாவது சந்திப்பில் அவன் அவளை அங்கிருந்து விடுவிப்பதை சொன்ன பொழுதும் கூட அவளிடம் எந்தவித பாவமாற்றமும் இல்லை.

ப்ரகாஷிற்கு யாரோ எதிர்பாராத தருணத்தில் ‘பளீர்’ என்று அறைந்ததுபோல அந்த உண்மை உறைத்தது. அவள் காது கேளாதவள். அவசரமாய், உறங்கிக்கொண்டிருந்த விக்டரை எழுப்பிச்சொன்னான்.

“தப்பு பண்ணிட்டேன் விக்டர். அவளை தப்பா பேசிட்டேன்.” ப்ரகாஷ் முகத்தில் அறைந்துகொண்டான்.

அடுத்த நாள் அவர்கள் மீண்டும் க்ராண்ட் ரோட் போனார்கள். ஒரு நடுத்தர வயது ஆள் நெருங்கி வந்து ‘கேரளா. ஆந்திரா. தமிழ்நாடு. நார்த் இந்தியா’ என்றான். இவர்கள் பதில் பேசாதிருந்ததைத் தொடர்ந்து “தமிழா?” என்றான். ப்ரகாஷ் விக்டரை தனியே அழைத்துச்சென்று “இவனிடம் கேட்போமா?” என்றான்.

“இனி அந்த பொம்பளகிட்ட போய் அதே பொண்ணை கேட்டா சந்தேகப்படுவா. அப்புறம் ப்ரச்சனை ஆயிடும்.” என்றான் விக்டர்.

அந்த நடுத்தர வயது ஆள் இவர்களை நெருங்கினான்.

“மேக்னானு ஒரு பொண்ணு. கிடைக்குமா?” விக்டர் கேட்டன்.

“இதுக்கு முந்தி வந்திருக்கீங்களா? இன்னா பேரு சொன்னீங்க?”

“மேக்னா.”

“கரெக்ட் பேராயிருக்காது சார். ஒவ்வொரு தபா ஒவ்வொரு பேரு சொல்லுவாளுக. அதுலயெல்லாம் நெறைய விஷயமிருக்கு. அப்பால ராங்காயிடும்.”

“கொஞ்சம் யோசிச்சு பாருங்க. தோ இந்த உயரம் இருப்பா. நீளமான முடி. முகத்துல இந்த இடத்துல ஒரு மச்சமிருக்கும்.” ப்ரகாஷ் அடையாளங்களை சொன்னான். அவளை பரிச்சயப்படுத்திய பெண்மணியின் பெயரை விக்டர் சொன்னான்.

“ஓ. அந்த பொண்ணா? நெத்தில சந்தனம் கூட வச்சிருக்குமே?”

ப்ரகஷிற்கு உயிர் வந்தது.

“அவளே தான்.” என்றான் அவசரமாய்.

“அது பேரு கல்பனாங்க. ஊரு திருச்சி. அவ மாமனோ பெரியப்பனோ தான் இங்க இட்டாந்து வந்தான். முதல்லலாம் ரொம்ப பேஜார் பண்ணிச்சு. அண்டர்க்ரௌண்ட் ரூம்ல பட்டிணியோட அடைச்சுப்போட்டு கொடுமை பண்ணினாங்க. அப்பால கரெக்ட் ஆயிடிச்சு. அல்லாமே அப்படிதாங்க மொதல்ல ராங் பண்ணும. அப்பால ஓகே ஆயிடும். அதுக்கு காது கேக்காது. வாயும் பேசமுடியாது. இந்த தொழிலுக்கு அதெல்லாம் முக்கியம் கிடையாது. நல்லா அம்சமா இருக்கும்.”

“இன்னைக்கு கிடைப்பாளா?” ப்ரகாஷ் கேட்டன்.

“அந்த பொண்ணு இனி கிடைக்காதுங்க. இந்த தொழில்கரிங்களுக்கே வரக்கூடாத சீக்கு வந்திருச்சு. அப்படி சீக்கு வந்ததுகளை இங்க வச்சிருக்க மாட்டாங்க. பக்கத்துல தாராவி சாக்கடையாண்ட கொண்டுபோய் விட்டிருவாங்க. ஏதானு சமூகசேவைகாரங்க கூட்டிகினு போவாங்க. கொஞ்ச நாள்ல சீக்கு முத்திபோயி செத்துப்போயிடுங்க. அவங்க வாழ்க்கை அவ்வளவுதான். வேற நிறைய தமிழ்நாட்டு பொண்ணுங்க இருக்கு. இந்த ஆல்பத்தை பாருங்க.” அவன் நீட்ட ப்ரகாஷும் அவனை தொடர்ந்து விக்டரும் நகர்ந்து செல்கிறார்கள்.

“சார். சார்” என்று அவன் முதுகுக்கு பின்னால் கூப்பிடுவது கேட்டத்து.

விக்டர் ப்ரகாஷின் கரத்தை ஆதரவாய் அழுத்திக்கொடுத்தான். ப்ரகாஷிற்கு அவள் நினைவு வருகிறது. அவள் புன்னகையும் சந்தனப்பொட்டும். அவன் கண்கள் நிறைந்து வழிகின்றன.