வித்யாசாகரும் வாசுதேவனும் பயணித்துக்கொண்டிருந்த கார் சிம்ஸ் பார்க்கைக்கடந்து விரைந்துகொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே டிசம்பர் மாதக்குளிரில் உறைந்து குன்னூர் ஒரு புகைப்படம் போல தெரிந்தது.
முன்தின மதியம் விமானத்தில் சென்னையிலிருந்து கோவை வந்து இரவை ஐந்து நட்சத்திர
விடுதியொன்றில் கழித்துவிட்டு அந்த உயர்ரக காரில் அன்று காலை குன்னூருக்கு கிளம்பியிருந்தார்கள்
இருவரும்.
வாசுதேவன் வண்டியோட்டிக்கொண்டிருக்க வித்யாசாகர் டாஷ்போர்டில் தாளம் போட்டவாறு
சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
"என்ன யோசிக்கறே வித்யா?" என்றான் வாசுதேவன் பாதையில் வந்த ஒரு
வளைவை லாவகமாய் கையாண்டவாறு.
"எல்லாமே கொஞ்சம் விநோதமா இருக்கு வாஸ். குன்னூர்ல இருந்து ஒரு ஃபோன் கால். ஒரு கேஸ் விஷயமா
சந்திக்க முடியுமான்னு. கூப்பிட்டவரைபத்தியோ கேஸ்பத்தியோ எந்த தகவலும் தராம குன்னூர்
வரும்படியா அழைப்பு. ஃப்லைட் டிக்கெட் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் கார்னு பலமான ஏற்பாடு.
இவ்வளவு பணம் இருக்கற ஒரு ஆளு பக்கத்துல இருக்கற கோயம்பத்தூர்ல ஒரு ஏஜென்சியை அணுகாம
எதுக்கு சென்னைல இருந்து நம்மள இவ்வளவு செலவு பண்ணி கூட்டிட்டுவரணும்?"
"அதுதான் இன்னும் கொஞ்சநேரத்தில தெரிஞ்சிடப்போகுதே."
"இந்த ஒரு பயணத்துக்கான செலவே நம்ம ஒரு கேஸுக்கு வாங்கற பீஸ் தொகையளவுக்கு இருக்கும். இத்தனைக்கும்
நம்ம சென்னைலயும் பெருசா ஒண்ணும் அறியப்படாத ஏஜென்சி. சம்திங் டஸ் நாட் ஆட் அப்."
"ரொம்ப கொழப்பிக்காதே வித்யா. போய் பேசிட்டா தெரிஞ்சிடும். பக்கத்துல
வந்திட்டோம். அவர் ஷேர் பண்ணிருக்கற டெஸ்டினேஷன் நூறு மீட்டர்ல இருக்கறதா காட்டுது
மேப்ல." என்றான் வாசுதேவன் வாகனத்தின் வேகத்தைக்குறைத்தவாறு.
சாலையில் மீண்டுமொரு கொண்டையூசி வளைவு வந்தது. அதை கடந்து சிறிது தூரம் முன்நகர்ந்ததும் இடதுபுறம் ஒரு
உயரமான மதிற்சுவரும் வெள்ளை நிற கேட்டும் தெரிந்தது. வாசுதேவன் வாகனத்தை அந்த கேட்டின்
முன் நிறுத்தத்திற்குக் கொண்டுவந்தான்.
அவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கி கேட்டைச்சமீபித்தார்கள்.
"திறந்து தான் இருக்கு." என்றான் வாசுதேவன்.
கேட்டைத்திறந்து
உள்ளே நுழைய மிகப்பெரிய புல்தரைப்பரப்பொன்று
தெரிந்தது. அதன் குறுக்கே வளைந்து சென்ற டைல்ஸ் பாதையின் முடிவில் விஸ்தாரமான காட்டேஜ்
அடக்கமாய் அமர்ந்திருந்தது.
குளிர் மிகுதியாயிருக்க கைகளை உராய்ந்தவாறு சற்று வேகமாய் நடந்து காட்டேஜின்
முகப்பை அடைந்தார்கள். வாசுதேவன் அழைப்பு மணியை
அமிழ்த்தினான்.
முப்பது வினாடி காத்திருப்பிற்குப்பின் கதவு திறக்க கதவு திறந்தவரை பார்த்து
இருவரும் மெலிதாய் அதிர்வுற்றார்கள்.
"கம். கம்." என்று அவர்களை உள்ளே நுழைத்து அவர் கதவைத்தாழிட்டார். மெலிதாய்
புன்னகைத்தவாறு அவர் கரத்தை நீட்ட வித்யாசாகரும் வாசுதேவனும் பெயர் சொல்லி கைகுலுக்கினார்கள்.
அவர் சுட்டிக்காட்டிய வசதியான இருக்கையில் இருவரும் அமர்ந்துகொள்ள
"என்ன சாப்பிடறீங்க? டீ?" என்றார் அவர். வித்யாசாகர் வாசுதேவனை பார்த்துவிட்டு
ஆமோதிக்க அவர் எழுந்து அருகிலிருந்த மேஜைக்குச்சென்றார். இவர்களுக்கு
முதுகுகாட்டி நின்றவாறு ஒரு பிளாஸ்க்கிலிருந்து தேநீரை மூன்று கிண்ணங்களில் ஊற்றியவாறு
"யு மஸ்ட் திங்க் ஐ அம் கிரேசி!" என்றார்.
இரண்டு கோப்பைகளுடன் அவர் திரும்பியபொழுது மெலிதாய் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
"சாப்பிடுங்க." என்றுவிட்டு தனக்கான கோப்பையையும் எடுத்துக்கொண்டு
எதிரே அமர்ந்தார்.
"ஐ சப்போஸ் தி மாஸ்க் இஸ் ஆஃப் நௌ. நான் யாருனு தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். உங்களுக்கு தமிழ் சினிமா பார்க்கிற பழக்கம் இருக்காதபட்சத்துல லெட் மீ
இன்ட்ரோடியூஸ் மைசெல்ஃப். ஐ ஆம் கெளதம் நாயர். திரைப்பட இயக்குனர்."
"வி நோ." என்றவாறு புன்னைகைத்தான் வித்யாசாகர்.
"எல்லா படமும் பார்த்திருக்கோம். குறிப்பா உங்க க்ரைம் த்ரில்லர்ஸ்."
என்றான் வாசுதேவன்.
அவர் மெலிதாய் வெட்கப்பட்டது போலிருந்தது.
"யூ மஸ்ட் பி வண்டரிங் வாட் திஸ் இஸ் ஆல் அபௌட். எதுக்காக
சென்னைலயிருந்து உங்கள இங்க வரவழைச்சிருக்கேன்னு நீங்க குழம்பியிருக்கலாம். ஐ ஹவ் காட்
எ பெக்யூலியர் அசைன்மென்ட் ஃபோர் யு. ஒரு வினோதமான வழக்கு."
வித்யாசாகரும் வாசுதேவனும் ஆர்வத்துடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
தேநீரை குடித்துமுடித்ததும் கெளதம் நாயர் "வாருங்கள். உள்ளே ஸ்டடியில்
அமர்ந்து பேசலாம்." என்றுவிட்டு முன்னால் நடக்க வாசுதேவனும் வித்யாசாகரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அவர்கள் நுழைந்த அறை விஸ்தாரமாகவும் கதகதப்பாகவும் இருந்தது. வாசுதேவன் விழிகளைச் சுழற்ற அந்த அறையின்
சுவர்கள் முழுவதுமாகவே புத்தகங்களால் மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். ஹிச்காக்கின் படமொன்று சட்டமிடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்தது. மூவரும் அமர்ந்துகொள்ள கெளதம் நாயர் ஒரு லெதர் ஃபோலியோவை
அருகிலிருந்த மேஜையின்மேலிருந்து எடுத்து அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளுக்கு நடுவிலிருந்த
சென்டர் டேபிள் மேல் வைத்துவிட்டு மெலிதாய் தொண்டையைச் செருமிக்கொண்டார்.
"வெல். லெட் மீ கட் டு த சேஸ். தனிப்பட்ட முறையிலும் என்னுடைய திரைப்படங்களுக்காகவும்
நாளிதழ்கள்ள வர குற்றச்சம்பவங்களை தொடர்கிற ஒரு பழக்கம் இருக்கு என்கிட்டே. இட் ஈஸ்
ஆல்மோஸ்ட் அன் அப்செஷன். கொலை, கடத்தல், கற்பழிப்பு, ஆட்கள் தொலைந்துபோவது மாதிரியான
குற்றங்கள் சம்பந்தமா வருகிற எல்லாச் செய்தியையும் மிக
கவனமாவும் நுணுக்கமாவும் பின்தொடர்கிற ஒரு மாதிரியான கம்பல்ஸிவ் பிஹேவியர்.
அப்படி நான் ஃபாலோ பண்ணின நூற்றுக்கணக்கான சம்பவங்கள்ல ஒண்ணுதான் கோயம்பத்தூர்ல
எட்டு வருஷம் முன்னால பரபரப்பா
பேசப்பட்ட பீளமேடு ஜெயராஜ் கேஸ். உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். ஒன்பதுபேரை கொன்னதாய் நம்பப்பட்ட ஒரு சீரியல் கில்லர்."
"நாளிதழ்கள்ள படிச்ச ஞாபகமிருக்கு." என்றான் வித்யாசாகர்.
"ரைட். எட்டு வருஷங்களுக்கு முன்னால
மனைவியையும் அவளோட தங்கையையும் கொன்னுட்டு ஜெயராஜும் தூக்குல தொங்கி இறந்துபோன இடத்துல
தொடங்குது கதை. ஏதோ குடும்பப் பிரச்சனைங்கிற அளவோட முடிஞ்சிருக்கவேண்டிய
சம்பவம் அடுத்தடுத்த நாட்கள்ல வந்த தகவல்களால மெதுவா உருமாற தொடங்குது."
கெளதம் நாயர் ஒரு திரைப்படக் கதையை விவரிப்பதுபோல ஆர்வமாய் பேசிக்கொண்டிருக்க வித்யாசாகரும் வாசுதேவனும்
கொஞ்சம் குழப்பத்துடனும் நிறைய ஆர்வத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
"லெட் அஸ் டூ திஸ் எ பிட் டிஃபரன்ட்லி. ஜெயராஜ் சம்பவத்தைப்பத்திப் பேசறதுக்கு முன்னால லெட் மீ டெல் யூ சம்திங் எல்ஸ்."
என்றுவிட்டு கெளதம் நாயர் அவர்களை பார்க்க வித்யாசாகர் மெலிதாய் தலையசைத்தான்.
"ரெண்டாயிரத்து பதினொண்ணு மார்ச் மாசம் பதிமூணாம் தேதி தினத்தந்தி மூணாவது பக்கத்துல ஒரு செய்தி.
சென்னைல ஒரு இருபத்தியிரண்டு வயசு பொண்ணோட சடலம் கண்டெடுக்கப்பட்டதா. அதுக்கப்புறம்
ரெண்டு வாரத்துக்கு அதுபத்தி எந்த செய்தியும் எந்த பத்திரிகைலயும் வரல.
ரெண்டு வாரம்கழிச்சு மகளோட கொலையை போலீஸ்
சரியாய் விசாரிக்காததாய் சொல்லி அவளோட அப்பா கோயம்பத்தூர் கலெக்டர் ஆபீஸ்ல
தீக்குளிக்க முயற்சி பண்ணினதா ஒரு செய்தி. அந்த தற்கொலை முயற்சிக்கப்புறம் அந்த
பொண்ணோட கொலைச்சம்பவதுக்கு மீடியா கவனம் கிடைக்குது.
கோயம்புத்தூர்ல ஒரு கீழ்நடுத்தரவர்க்கக் குடும்பத்துல பொறந்த பொண்ணு. அப்பாவுக்கு
பிரின்டிங் பிரஸ்ல வேலை. அம்மா ஹவுஸ்வைப். ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த ஒரு தம்பி.
இந்த பொண்ணு இன்ஜினியரிங் படிச்சிட்டு சென்னைல ஒரு கம்பெனில
வேலைபண்ணிட்டிருந்திருக்கா. நல்ல அழகு.
ஒரு பக்கம் போலீஸ் விசாரணை நடந்திட்டிருக்க
இன்னொருபக்கம் மீடியால நெறைய யூகங்கள் வரத்தொடங்குது அந்த கொலையை பத்தி. சென்னைல
அந்த பொண்ணுக்கு ஒரு அரசியல் பிரமுகரோட தொடர்பிருந்ததாவும் அந்த உறவில ஏற்பட்ட ஏதோ
சிக்கலால கொல்லப்பட்டதாவும் ஒரு தியரி. அவளுக்கு ட்ரக்ஸ் எடுத்துக்கற பழக்கம்
இருந்ததாவும் அதுதொடர்பான கொடுக்கல்வாங்கல் தகராறுல கொல்லப்பட்டதா ஒரு தியரி. அவ
வேலைபார்த்திட்டிருந்த ப்ராஜெக்ட்ல ஏதோ சென்சிட்டிவான டேட்டா அவ கைக்குவந்ததாவும்
அது கசிஞ்சிடாம இருக்க அதுசம்பந்தப்பட்டவங்களால கொல்லப்பட்டதா ஒரு தியரி. அவளுடைய
அப்பாவே அவளை பலாத்காரம் செய்ய முயற்சிபண்ணினதாவும் இவ அதுபத்தி வெளிய சொல்ல போறதா
மெரட்டினதாவும் அந்த கோவத்தில அப்பாவே மகளை கொண்ணுட்டத்தவும் ஒரு தியரி. அவளுடைய
உடலுறுப்புகளுக்காக செய்யப்பட்ட கொலைனும் அதுல சில இலங்கை குழுக்களுக்கு
தொடர்பிருக்கறதாவும் ஒரு தியரி. இப்படி ஏறக்குறைய ஒரு மாசத்துக்கு பலவகையான
யூகங்கள். அப்புறம் ஒருநாள் அப்படியே இந்த செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு
மறக்கப்படுது.”
கெளதம் நாயர் பேச்சிற்கு நடுவே ஒரு
இடைவெளிவிட்டு எழுந்துசென்று அருகிலிருந்த மேஜைமேலிருந்து ஒரு சிகரெட்
பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக்கொண்டுவந்து அமர்ந்துகொண்டார். வித்யாசாகரும்
வாசுதேவனும் மறுக்க அவர் அவர்களுடைய அனுமதிபெற்று ஒரு சிகரெட்டை
பற்றவைத்துக்கொண்டார்.
"புலனாய்வுங்கிற பேர்ல இட் வாஸ் எ கேரக்டர் அசாசினேஷன்.
தாங்க்ஃபுள்ளி ஒரு கட்டத்துல எல்லாருக்கும் அந்த செய்தி அலுத்துப்போக த பேமிலி
வாஸ் ஸ்பேர்ட். போலீஸ் தரப்பிலேயிருந்து ஆதாரபூர்வமா சொல்லும்படியா பெரிய தகவல்கள்
எதுவும் வரலை அந்த காலகட்டத்துல. போஸ்ட்மோர்டேம் ரிப்போர்ட்ல மாத்திரம் தேர் வாஸ்
சம்திங் ஸ்ட்ரேஞ். அந்த புள்ளில தான் இந்த வழக்கும் பீளமேடு ஜெயராஜ் வழக்கும்
இணையுது.”
பேச்சை நிறுத்திய கெளதம் நாயர் மணிக்கட்டைப் பார்த்துவிட்டு
"பேசிட்டிருந்ததுல நேரம் போனது தெரியலை. யூ மஸ்ட் பீ ஹங்ரி. சாப்பிட்டுவிட்டு
தொடரலாமே." என்றவாறு வித்யாசாகரையும் வாசுதேவனையும் ஏறிட்டுப்பார்த்தார்.
அவர்கள் தயங்க "ஐ ஆம் ஹங்கிரி டூ." என மெலிதாய் புன்னகைத்தார்.
"எனக்கு இங்க சமைக்கிற வழக்கம் இல்லை. இங்கே வரும்போ ஐ லைக் டு பீ பை
மைசெல்ஃப். பசிக்கிறப்போ ஐ எய்தர் கோ அவுட் இல்லைனா ஐ ஆர்டர் சம்திங். வாட் வுட்
யு ப்ரீபர்?" என்று அவர்களை பார்க்க வித்யாசாகர் "உங்கள் சௌகர்யம்." என்றான்.
"இன் தட் கேஸ் லெடஸ் கோ அவுட். தாஜ் இங்கேயிருந்து பக்கம் தான்.
வாருங்கள்." என்றுவிட்டு கெளதம் நாயர் எழுந்துகொள்ள வித்யாசாகரும்
வாசுதேவனும் எழுந்துகொண்டார்கள்.
***
கெளதம் நாயரின் வாகனம் தாஜ் கேட்வேயின் போர்டிகோவிற்குள் நுழைந்தமாத்திரத்தில்
ரிசெப்ஷனிலிருந்து ஒரு இளைஞன் ஓட்டமும் நடையுமாய் காரைநோக்கி வந்தான். அவர்
வாகனத்தினின்றும் இறங்கி சாவியை அந்த இளைஞனின் நீட்டிய கரத்தில் வைத்துவிட்டு "லஞ்ச்
ஃபார் த்ரீ ஜோசஃப். இன் தி யூஷுவல் ஸ்பாட்." என்று விட்டு வித்யாசாகரையும்
வாசுதேவனையும் பார்த்து "வாருங்கள்" என்றவாறு நடக்கத்தொடங்கினார்.
புல்தரையொன்றின் குறுக்கே நடந்து எதிர்ப்பட்ட படிக்கட்டுகளில் இறங்கி ஒரு
பெரிய மரத்தினடியில் போடபட்டிருந்த வெண்ணிற மேஜை நாற்காலிகளை நோக்கி கெளதம் நாயர்
நடக்க அவர்கள் பின்தொடர்ந்தார்கள். வானில் சூரியன் கண்ணுக்குத்தென்பட
காலையிலிருந்த அளவிற்கு இப்பொழுது குளிர் இருக்கவில்லை. மூவரும் அமர்ந்து
கொண்டார்கள். சிறிது நேரத்தை அவர்கள் பொதுவான விஷயங்களை பேசிக்கழித்திருக்க தொலைவில்
நான்கு வெயிட்டர்கள் உணவுவகைகளுடன் இவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
எல்லாவற்றையும் மேஜைமேல் சப்தமெழாமல் வைத்துவிட்டு அவர்கள் நகர்ந்துகொண்டார்கள்.
சாப்பிடும்பொழுது ஓரிரு விருந்தோம்பல் வார்த்தைகளைத் தவிர்த்து கெளதம் நாயர் எதுவும்
பேசவில்லை. தொலைவிலிருந்து ஆட்களின் பேச்சொலியும் சிரிப்பொலியும் இடையிடையே
கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் ஏறக்குறைய அமைதியாகவே சாப்பிட்டுமுடித்தார்கள்.
மூவரும் சாப்பிட்டுமுடித்த மாத்திரத்தில் மாயமாய் மீண்டும் அந்த நான்கு
வெயிட்டர்களும் தோன்றி உணவுப்பாத்திரங்களை அப்புறப்படுத்தி மேஜையை சுத்தம்செய்து
தேநீரும் கோப்பைகளும் வைத்துவிட்டு நகர்ந்தார்கள்.
கெளதம் நாயர் அவர்களுடைய அனுமதியை பெற்றுவிட்டு சிகரெட்டை
பற்றவைத்துக்கொண்டார்.
இன்னும் சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது. வித்யாசாகர் கெளதம் நாயரின் முகம்
சற்று இறுகுவதைக் கவனித்து அவர் பேசப்போகிறார் என்பதை யூகித்த வினாடி அவர்
தொண்டையை மெலிதாய்ச் செருமிக்கொண்டார்.
"வெல். லெட்ஸ் கெட் பேக் டு ஒர்க் ஷால் வீ?' என்றுவிட்டு மெலிதாய்
புன்னகைத்தார். வித்யாசாகர் "ஷுவர்." என்றான்.
"பீளமேடு ஜெயராஜ் ஒரு இன்டெரெஸ்ட்டிங் கேரக்டர். ரெண்டாயிரத்து பதிமூணுல தற்கொலை செய்துக்கிட்டப்போ நாற்பத்தியைந்து வயது. பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர்லதான். எலக்ட்ரிகல் என்ஜினீரிங்ல டிப்ளோமா. இறக்கிறவரை ஏறக்குறைய இருபத்தியைந்து வருடம் வடவள்ளில ஒரு யூபிஎஸ் தயாரிக்கிற நிறுவனத்துல சர்வீஸ் என்ஜினீயர் வேலை. பீளமேட்ல அவங்க குடும்பம் பரம்பரையா வாழ்ந்து வந்த வீட்ல மனைவியோட நடுத்தரவர்க்கக் குடித்தனம். குழந்தைகள் இல்லை. மிகவும் சராசரியான வாழக்கை. வழக்கம்போல பத்திரிகைகள் நிறைய தோண்டிப்பார்த்திருக்காங்க சுவாரஸ்யமான தகவல்களுக்காக. ஆனா அவனோட வாழ்க்கைல எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்கவில்லை. அவனோட தோற்றம் உட்பட எல்லாமே சலிப்புரவைக்கிற அசுவாரஸ்யமாய் இருந்திருக்கிறது. சராசரி உயரம். லேசான முன்வழுக்கை. மெலிதான மீசை. மாநிறம். குறிப்பிடும்படியா எதுவுமில்லாத ஒரு ஆளுமை. மனைவியையும் அவளோட தங்கையையும் கொலைபண்ணிட்டு தற்கொலைபண்ணிக்கிட்டது உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்துக்காரங்களுக்கும் பெரிய அதிர்ச்சியாயிருந்திருக்கு. குடும்ப தகராறோ பண நெருக்கடியோ எதுவும் இருந்திருக்கலை. முதல் நாள் பத்திரிகைகள்ல செய்தியும் இந்தளவுக்குத்தான் வந்திருந்தது. கடன் பிரச்சனை பற்றின சில யூகங்களோட. அடுத்தடுத்த நாட்கள்லதான் விஷயம் கொஞ்சம்கொஞ்சமா வெளிவர தொண்டங்கிச்சு. வெளிவந்த தகவல்கள் எல்லாமே ரொம்பவே அதிர்ச்சிகரமானதாவும் அறுவறுக்கத்தக்கதாவும் இருந்துச்சு."
தொலைவிலிருந்த ரெஸ்டாரெண்டிலிருந்து கரவொலியும் சிரிப்பும் எழுந்து சற்று
நேரத்தில் அடங்கி அந்த இடம் மீண்டும் அமைதியில் ஆழ்ந்தது.
***
நேரம் மாலை ஐந்து மணி. அவர்கள் இப்பொழுது கெளதம் நாயரின்
ஸ்டடியிலிருந்தார்கள். அறையின் மூலையில் அமர்ந்து இயங்கிக்கொண்டிருந்த ஹீட்டர்
அறையை கதகதப்பாய் வைத்திருந்தது. கெளதம் நாயர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை
ஆஷ்ட்ரேயில் கிடத்திவிட்டு தொண்டையைச்
செருமிக்கொண்டார்.
"அந்த கொலைகளும் தற்கொலையும் நடந்த நான்காவது நாளைக்கு இந்த செய்தி மூன்றாவது
பக்கத்திலேயிருந்து முதல் பக்கத்துக்கு நகருது. போஸ்ட்மோர்டெம்ல ஜெயராஜோட மனைவி
மற்றும் அவளோட தங்கையோட உடல்கள் அறுக்கப்பட்டு சில உள்ளுறுப்புகள் எடுக்கப்பட்டு மறுபடியும்
தைக்கப்பட்டிருப்பது தெரியவருது. இந்தக் கட்டத்துல பணப்பிரச்னையால நடந்த
குடும்பத்துயரம் என்கிற யூகத்திலேயிருந்து உடல் உறுப்புகளுக்காக நடந்த திட்டமிட்ட
கொலை அப்படினு சம்பவம் திசைமாறுது. அந்த காலகட்டத்தில சில ஸ்ரீலங்கன் குரூப்ஸ்
ஆர்கன் ட்ராபிக்கிங்ல ஈடுபட்டிருந்தாங்க தமிழகத்துல. அதனால அந்தக்
கோணத்திலேயிருந்து நிறைய செய்திகள் வந்தது ஃபார் அபௌட் த்ரீ டேஸ். சரியாய் ஒரு
வாரம் கழிச்சு ஜூனியர் விகடன்ல ஒரு இன்வெஸ்டிக்டிவ் ரிப்போர்ட் வெளியாகுது.
ஜெயராஜோட பீளமேடு வீட்ல நடந்த சோதனைல பேஸ்மெண்ட்ல இருந்த அறைல இரண்டு
இண்டஸ்ட்ரியல் சைஸ் மற்றும் மூன்று வீடுகளில் உபயோகப்படுத்தற
குளிர்சாதனப்பெட்டிகள் இருந்ததாவும் அதில் நிறைய உடல் உறுப்புகள் கிடைத்ததாகவும்.
இந்த ரிப்போர்ட் வெளிவந்த அடுத்தநாளைக்கு கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் ப்ரெஸ்
கான்ஃபரன்ஸ்ல ஏறக்குறைய இதே தகவல்களை தெரிவிக்கறாரு. குளிர்சாதனப்பெட்டிகளிலிருந்த
உறுப்புகலில் சில பாதிக்கும் மேல் அறுத்தெடுக்கப்பட்டிருந்ததாவும் சொல்லறாரு.
ரிப்போர்ட்டர்ஸ் கேட்ட தொடர் கேள்விகளுக்குப்பின்னால இந்த வழக்குல ஒரு கானிபலிசம்
ஆங்கில் இருக்க வாய்ப்பிருக்கலாம்னும் போலீஸ் அந்த கண்ணோட்டத்தில வழக்கை
விசாரித்துவருவதாவும் சொல்லறாரு.”
கெளதம் நாயர் ஆஷ்ட்ரேயிலிருந்து சிகரெட்டை எடுத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டு
பேச்சைத்தொடர்ந்தார்.
"கிட்டத்தட்ட ஒரு வருஷம் தமிழக குற்றப்புலனாய்வுத்துறையும் அதுக்கப்புறம்
இரண்டு வருஷம் சிபிஐயும் இந்த வழக்கை விசாரிக்கறாங்க. ஜெயராஜோட மனைவி மற்றும்
அவளோட தங்கை தவிர இன்னும் ஏழு கொலைகள் இந்த வழக்கோட இணைக்கப்படுது. அந்த ஏழு
கொலைகளும் இரண்டு வருட இடைவெளில நடந்து அதுவரைக்கும் துப்புதுலங்காம இருந்த
கொலைகள். எல்லா கொலைகள்லயும் கொலைசெய்யப்பட்ட பிறகு உடல் கிழிக்கப்பட்டு சில உள்ளுறுப்புகள்
எடுக்கப்பட்டிருக்கு. மரபணு சோதனை மூலமா ஜெயராஜ் வீட்டிலேயிருந்து கிடைச்ச
உறுப்புக்கள் இந்த ஏழு சடலங்களிலிருந்து எடுக்கப்பட்டதுதான்னு
நிரூபிக்கப்படுது. அதனடிப்படைல ஜெயராஜ்
இந்த கொலைகளோட தொடர்புபடுத்தப்படறான். கொல்லப்பட்ட ஒன்பதுபேரும் இருபதுலயிருந்து
நாற்பது வயதுக்குட்பட்ட பெண்கள். அந்த ஒன்பது கொலைகள்ல ஐந்தாவதா ஜெயராஜால
செய்யப்பட்டதா நம்பப்பட்டதுதான் நாம முன்னாடி பேசின அந்த இருபத்தியிரண்டு வயசு
பொண்ணு. ஹியர் இஸ் வேர் இட் கெட்ஸ் இன்டரஸ்டிங். கான்டரெரி டு வாட் தி போலீஸ் தாட்
அந்த ஐந்தாவது கொலையை பண்ணினது ஜெயராஜ் இல்லை. இட் வாஸ் சம்வன் எல்ஸ். இங்க தான்
எனக்கு உங்க உதவி தேவை. அந்த ஐந்தாவது கொலையை பண்ணினது யாருனு நீங்க
கண்டுபுடிக்கணும்.
இது என்னோட
உள்ளுணர்வு மட்டும் தான். ஜஸ்ட் ஏ ஹன்ச். ஏன் இண்ட்யூஷன் . ஆனா ரொம்ப நாளா இது
என்னை தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கு. ஐ காண்ட் சீம் டு கெட் ஓவர் இட். நானா
கொஞ்சம் ரிசர்ச் பண்ணியும் பார்த்தேன். பட் ஐ ஆம் நாட் ஏ ப்ரொஃபஷனல். ஐ ஆல்சோ ஹாவ்
மை லிமிடேஷன்ஸ் பிகாஸ் ஆஃப் ஹூ ஐ ஆம். ரொம்ப யோசிச்ச பின்னாடிதான் ஐ தாட் ஆஃப்
ஹயரிங் சம்படி.
போலீசும்
சீபிஐயும் விசாரிச்ச வழக்குல புதுசா என்ன பண்ணமுடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா
அரசு இயந்திரங்களுக்கு அவற்றிற்கான தடங்கல்களும் தடைகளும் இருக்கும். சோ தே மிஸ்
திங்ஸ். ஐ ஆம் ஷுவர் யூ நோ தட் டூ. எனக்கு நீங்க இந்த முழு குற்றத்தையும் ஒரு புது
கண்ணோட்டத்துல பார்க்கணும். புயலுக்கு நடுவில ஒரு பொருளைத் தேடறதுக்கும் புயல்
ஓஞ்ச பின்னாடி தேடறதுக்குமான வேறுபாட்டோட இந்த வழக்கை அணுகணும்.
பத்திரிக்கை
செய்திகளில்லாம என்னோட தொடர்புகளை வைத்து இந்த வழக்கு சம்பந்தமான நிறைய
ஆவணங்களையும் சேகரிச்சிருக்கேன். எஃப்ஐஆர் போஸ்ட் மோர்டெம் ரிப்போர்ட்ஸ் கால்
ரெகார்டஸ் இப்படி. இதையெல்லாம் கவனமா ஆராய்ஞ்சு பார்த்திட்டு ஐ வாண்ட் யூ டு கிவ்
மீ யுவர் டேக். மூணு மாசம் வரை எடுத்துக்கொள்ளுங்கள். ஐ வில் கவர் தி காஸ்ட் அண்ட்
அதர் சார்ஜஸ்.
நான் ஒரு பெரிய
நிறுவனத்துக்கு படம் இயக்க ஒப்பந்தமாயிருக்கேன். அதற்க்கான முதல்கட்ட வேலைகளை முடிக்கத்தான்
குன்னூர்ல தங்கியிருக்கேன். ஐ டூ நாட் வண்ட் டு கெட் புல்ட் இண்டு எனி
காண்ட்ரவர்ஸி பிகாஸ் ஆஃப் திஸ். அதனால நீங்க இதுல ஃபீல்டு வர்க் கூட பண்ணவேண்டாம்.
மூணு மாசம் குன்னூர்லயே தங்கியிருந்து லுக் அட் ஆல் தி மெட்டிரியல். நாம அடிக்கடி
சந்திச்சு விவாதிக்கலாம். அண்ட் லெட்டஸ் சீ வேர் இட் கெட்ஸ் அஸ்."
பேச்சை
நிறுத்திவிட்டு கெளதம் நாயர் மெலிதாய் புன்னகைத்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்து
இருட்டியிருந்ததையுணர்ந்து மாணிக்கட்டைப்பார்த்தார்.
"இன்னைக்கு நிறைய பேசிட்டோம். டேக் தி நைட் டு திங்க் அபவுட்
இட். நாளைக்கு மத்தியானம் இரண்டு மணியோட தாஜ்ல சந்திக்கலாம். அப்போ உங்க முடிவை
சொல்லுங்க. இன்னைக்கு தாஜ்லயே தங்கிக்குங்க. இன் கேஸ் யூ டிசைட் டு மூவ்
ஃபார்வேர்ட் ஐ வில் ஃபைண்ட் யூ ஏ ப்ளேஸ் டு ஸ்டே ஃபார் த்ரீ மன்த்ஸ்."
***
இரவு பதினோரு மணி. வித்யாசாகரும் வாசுதேவனும் தாஜ் கேட்வேயின் விசாலமான
அறையொன்றிலிருந்தார்கள். மாலை வெகுநேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு
கெளதம் நாயர் அவர்களை தாஜில் விட்டுச்சென்றிருந்தார். சிறிது நேரம் ஹோட்டலைச்
சுற்றியிருந்த புல்வெளிப்பரப்பில் நடந்துவிட்டு குளிர் அதிகரிக்கவும் அறைக்குள்
வந்திருந்தார்கள். கெளதம் நாயரிடம் உரையாடியதிலிருந்து கிடைத்த தகவல்களை இருவரும்
மௌனமாக தமக்குள்ள தொகுத்துக்கொண்டிருந்தார்கள். கெளதம் நாயர் ஜெயராஜ் வழக்கு
தொடர்பாக நாளிதழ்களிலும் வாரயிதழ்களிலும் வந்திருந்த தகவல்களனைத்தையும் லெதர்
ஃபோலியோவொன்றில்போட்டுத்தந்திருந்தார். அதை கையிலெடுத்துப்பார்த்தான் வாசுதேவன்.
உள்ளே சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கணக்கில் கத்தரிக்கப்பட்ட காகிதங்களிருந்தன.
ஆழ்ந்த சிந்தனையிலிருந்த வித்யாசாகரை ஏறிட்டுப்பார்த்தான்.
"வினோதமான வழக்கா இருக்கே வித்யா."
"ஹும்."
"பாதிக்கப்பட்டவங்களோட எந்தவித நேரடித்தொடர்புமில்லாத ஒரு நபர். ஒரு
செலிப்ரிட்டி. தன்னுடைய க்யூரியாசிட்டியை தணிச்சுக்கறதுக்காக பத்து வருஷங்களுக்கு
முன்னாடி நடந்த ஒரு குற்றத்தை விசாரிக்கச்சொல்லரார். அதுவும் பல வருஷங்கள்
போலீசும் சீபிஐயும் விசாரிச்ச ஒரு வழக்கை."
"ஹும். கெளதம் நாயர் சொல்லுறபடி ஜெயராஜ் வழக்கோட தொடர்புபடுத்தப்பட்ட எந்த
கொலைபற்றியும் வேற யாரும் இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியதாயும் தெரியலை."
"அவரையே
பொறுத்தவரைக்கூட இது ஒரு உள்ளுணர்வு மட்டும்தான்னும் சொல்லறாரு. அந்த பொண்ணை
கொன்னது ஜெயராஜ் இல்லை என்கிற அவரோட சந்தேகத்துக்கு எந்த விதமான அடிப்படையும்
இல்லை."
"ஜெயராஜ்
தரப்பிலேயிருந்து யாரும் பெரிசா இந்த வழக்குல ஆர்வம் காட்டியிருக்க வாய்ப்பில்லை.
ஜெயராஜுக்கு நண்பர்களோ நெருங்கிய உறவினர்களோ இருந்ததா தெரியலை. அப்படி இருக்கிறப்போ போலீஸ் தரப்புல
தே மே ஹாவ் டேக்கன் சம் லிபர்டீஸ். அதுக்கான வாய்ப்பில்லாமல் இல்லை."
"அப்படியே
இருந்தாலும் தமிழ்நாட்டுல துப்புத்துலங்காத எவ்வளவோ வழக்குகளிருக்கும். எதுக்கு
குறிப்பா இந்த பொண்ணோட கொலையை இதுல இணைக்கணும்?"
"கெளதம்
நாயர் சொன்னபடி அந்த பொண்ணோட அப்பா தற்கொலை முயற்சி செஞ்சுக்கிட்டதுல அந்த
கொலைக்கு ஊடக கவனம் கிடைச்சிருக்கு. அதனால போலீஸ் தரப்புல வழக்கை சீக்கிரம்
முடிக்க அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்."
"நேரடி
விசாரணையும் வேண்டாம்னு சொல்லறாரு. அவர் சேகரிசிச்சுவச்சிருக்கிற ஆவணங்களை மட்டும்
வச்சு முழு குற்றத்தையும் ரீகிரியேட் பண்ணனும். அப்புறம் அதுல எங்கயாவது
பிசிறடிக்குதான்னு பாக்கணும். மூணு மாசம் வரை குன்னூர்லயே தங்க வேண்டியிருக்கும்.
எடுத்துக்கணுமா?"
"வித்தியாசமான
அனுபவமாதான் இருக்கும். எதுக்கும் காலைல முடிவெடுக்கலாம். அந்த பொண்ணோட பேர் என்ன
போட்டிருக்கு?" என்றான்
வித்யாசாகர்.
வாசுதேவன் கையில் வைத்திருந்த காகிதங்களை புரட்டி
அதனின்றும் ஒன்றையெடுத்து வித்யாசாகரிடம் நீட்டினான். வாரயிதழொன்றிலிருந்து
கத்தரிக்கப்பட்டிருந்த அந்த காகிதத்தில் புகைப்படமொன்று அச்சாகியிருந்தது. அழகாக
சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம். படத்தின் கீழே மாயா என்று
அச்சடப்பட்டிருந்தது.
***
வித்யாசாகரும் வாசுதேவனும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் எழுந்து
அறைக்குவெளியேயிருந்த புல்வெளிப்பரப்பில் இடப்பட்டிருந்த நாற்காலிகளில்
அமர்ந்திருந்தார்கள். சுற்றியிருந்த
எல்லாவற்றையும் மெலிதான பனி மறைத்திருந்தது. நன்றாக குளிர்ந்தது. கிழக்கில்
சூரியன் எழுவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. சர்வர் ஒருவன்
வந்து குட்மார்னிங் சொல்லி தேநீரும் நாளிதழும் மேஜைமேல் வைத்துவிட்டு நகர்ந்தான்.
"இந்த கானிபலிசம் ஆங்கில் ரொம்ப விசித்திரமாயிருக்கே வித்யா. அப்படி
நடந்திருக்க வாய்ப்பிருக்கா?"
"இந்த வழக்குல ஜெயராஜ் தற்கொலை செஞ்சுகிட்டு இறந்திட்டதாலே அவனோட வாக்குமூலம்
கிடைச்சிருக்காது. அதனால அது ஒரு யூகமா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். நிஜத்தில்
என்ன நடந்தது எதுக்காக அந்த உடலுறுப்புகளையும் மாமிசத்தையும்
எடுத்துவச்சிருந்தான்னு உறுதியா சொல்லமுடியாது. குற்றத்தை ஏதோ ஒரு வகைல
திசைதிருப்பரத்துக்காகவும் செய்திருக்கலாம்."
"டெல்லிக்கு பக்கத்துல நோய்டால இது மாதிரி ஒரு குற்றம் நடந்ததில்ல அதே
காலகட்டத்துல."
"ஹும். அதிகமும் இந்த மாதிரி குற்றங்கள்ல ஈடுபடறவங்களுக்கு ஏதோ மனப்பிழழ்வு
இருக்கும். அதனால வாக்குமூலம் கெடச்சாக்கூட எதுக்காக செய்தாங்கனு சரியா
தெரியவராது. வரலாற்றுலயே கூட மனித மாமிசம் மாமிசத்துக்காக தின்னப்பட்டதா தெரியலை.
ஒரு மனிதனோட உறுப்புகளையோ மாமிசத்தையோ திங்கறதால அந்த மனிதனோட ஏதோ ஒரு தன்மை
திங்கறவங்களுக்குள்ள கலக்கும்னு நம்பப்பட்டிருக்கு. அதுதான் அடிப்படையில
கானிபலிசத்துக்கான மோட்டிவேஷனா இருந்திருக்கு. ஜெயராஜ் வழக்குல அவனக்கு அதிகம்
தொடர்பில்லாத அவங்களுக்குள்ளயும் அதிகம் தொடர்பில்லாதவங்கதான்
கொல்லப்பட்டிருக்கிறமாதிரி தெரியுது. அதனால அப்படியே அவன் அவங்க உறுப்புகளை
சாப்பிட்டிருந்தாலும்கூட எதுக்ககங்கறது கடைசிவரைக்கும் ஒரு யூகமாவேதான் இருக்கும்.
அன்லெஸ்...." பேச்சை நிறுத்திவிட்டு சிறிது தேநீர் அருந்தினான் வித்யாசாகர்.
"அன்லெஸ்?" என்றான் வாசுதேவன் அவனை ஏறிட்டுப்பார்த்து.
"அன்லெஸ் தேர் வாஸ் சம்வன் எல்ஸ் ஆல்சோ இன்வால்வ்ட். அண்ட் இஃப் தி பெர்சன் இஸ் ஸ்டில் அலைவ்."
***
காலையுணவிற்குப்பின் வித்யாசாகரும் வாசுதேவனும் குன்னூரின் குறுகலான
தெருக்களில் ஒரு நடைபோய்வந்தார்கள்.
அறைக்குத்திரும்பியபின் கெளதம் நாயர் தந்திருந்த ஆவணங்களைச் சிறிது நேரம்
வாசித்தார்கள். ஒன்றேமுக்காலிற்கெல்லாம் கெளதம் நாயர் தாஜ் வந்துவிட்டார்.
ஹோட்டலின் வடகோடியிலிருந்த அவருடைய நிரந்தரமான அமருமிடத்தில் மூவரும்
உணவருந்தினர்கள். வழக்கம்போல் உணவருந்தும்பொழுது கெளதம் நாயர் குறைவாகவே பேசினார்.
உணவருந்திவிட்டு சிறிதுநேரம் அங்கே அமர்ந்திருந்தபின் அவருடைய காரில் அவர்
தங்கியிருந்த காட்டேஜிற்குத் திரும்பினார்கள்.
'இஃப் யூ டோன்ட் டோண்ட் மைண்ட் லெட் மீ மேக் ஏ க்விக் கால் அண்ட் ஜாயின் யூ' என்றுவிட்டு
வித்யாசாகரையும் வாசுதேவனையும் முன்னறையில் அமரசச்செய்துவிட்டு கெளதம் நாயர்
அவருடைய ஸ்டடியில் நுழைந்து கதவை மூடிக்கொண்டார். ஐந்து நிமிடங்களுக்குப்பின்
கதவைத்திறந்து அவர்களை உள்ளே வரும்படி சைகைசெய்தார். 'ரைட் த்யானேஷ். லெட்ஸ்
ப்ளான் டு ஹிட் த ஃப்ளோர் இன் லேட் ஜூன்' என்றுவிட்டு தொலைபேசியை அனைத்து மேஜைமேல் வைத்தார். 'சாரி. ஸிட் ஸிட்' என்று அவர்களை அமரவைத்து
அவரும் எதிரில் அமர்ந்துகொண்டார்.
வித்யாசாகரையும் வாசுதேவனையும் ஏறிட்டுப்பார்த்து மெலிதாய் புன்னகைத்தவாறு 'வெல்?' என்றார்.
'இது எங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவம்' என்று வாசுதேவனையும்
கெளதம் நாயரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வித்யாசாகர் தொடர்ந்தான்.
"குற்றம் நடந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளாகிவிட்டன. நம்முடைய விசாரணையையும்
நாம் குற்றம் நடந்த இடங்களுக்குப்போகாமல் மிகத்தொலைவிலிருந்து
ஆவணங்களினடிப்படையில் செய்யவிருக்கிறோம். ஸோ வீ வில் பி ரிமூவ்ட் நாட் ஜஸ்ட்
ஃப்ரம் ஏ டைம் பட் ஆல்சோ ஏ ஸ்பேஸ் பெர்ஸ்பெக்ட்டிவ். இதில் சில சாதகங்களும்
இருக்கக்கூடும். முடிவைப்பற்றி எங்களால் எந்த உறுதியும் தரமுடியாது ஆனால் வழக்கை
எடுத்துக்கொள்ள நாங்கள் தயார்."
"குட் டு நோ." என்றுவிட்டு புன்னகைத்த கெளதம் நாயர் சிகரெட் ஒன்றை
பற்றவைத்துக்கொண்டார்.
"என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோல். இதை முற்றிலும் ஒரு தியரடிக்கல் அசைன்மெண்டா
பார்க்கவேண்டாம். ஜஸ்டிஸ் ஹாஸ் இட்ஸ் ஓன் வியர்ட் வேஸ். ஹூ நோஸ். இதன்மூலமா ஏதோ
ஒரு தப்பு சரிசெய்யவும்படலாம். ஸோ."
"ஷுவர். ஷுவர்." என்றான் வித்யாசாகர்.
"நான் உங்களிடம் ஜெயராஜால அஞ்சாவதா கொல்லப்பட்டதா நம்பப்பட்ட மாயாங்கற பொண்ணை
கொன்னது ஜெயராஜ் இல்லேங்கறது என்னுடைய உள்ளுணர்வுன்னு சொல்லியிருந்தேன். பட் தென்
ஐ ஹாவ் மை ரீசன்ஸ் டூ. முதலாவதா பெண்ணென்கிறவகைல கொல்லப்பட்டவங்களோட
ஒற்றுமையிருந்தாலும்கூட திஸ் கேர்ள் வாஸ் தி யங்கஸ்ட் அமங் தெம். கொலைசெய்யப்பட்ட
மற்ற எல்லா பெண்களுமே இருபத்தியொன்பது முதல் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள். இந்தப்
பெண் கொல்லப்பட்டபொழுது அவளுடைய வயது இருபத்தியிரண்டு. இரண்டாவதா எல்லா
விக்டிம்சயும்போல இந்தப்பொண்ணும் கோயமுத்தூரைச் சேர்ந்தவள். ஆனா இவள் மட்டும்தான்
கோவைக்கு வெளியில கொல்லப்பட்டிருக்கா. அட்லீஸ்ட் ஹர் பாடி வாஸ் ஃபவுண்ட்
அவுட்சைட். மூன்றாவதா இந்தப் பெண்ணோட மரணத்துல மட்டும்தான் லைக் ஐ டோல்ட தாங்க்ஸ்
டு தி மீடியா ட்ரையல் வேற நிறைய வகையான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. நான்கவதா
இந்தப்பெண் கொல்லப்படறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தொலைஞ்சுபோயிருக்கா. ஒரு வாரம்
கழிச்சுத்தான் சடலம் கிடைச்சிருக்கு. மான் மிஸ்ஸிங் கேஸா தொடங்கி பின்னாடி மர்டர்
கேஸானது இது மட்டும்தான். மற்ற எந்த கொலைகளையும் இவ்வளவு நீண்ட கால இடைவெளியில்லை.
இது எல்லாத்தையும் போலீசும் கவனிக்கமாயிருந்திருக்கமாட்டாங்க. இருந்தாலும்
இங்கதான் என்னோட சந்தேகம் தொடங்கிச்சு. ஜெயராஜ் வழக்குல ஒட்டவச்ச ஒரு பொருள்மாதிரி
உறுதிக்கிட்டேயிருக்கு இந்தப்பொண்ணோட மரணம்."
"நாங்கள் இதையெல்லாம் கவனத்தில் வைத்து இந்த வழக்கை அணுகுகிறோம்." என்றான்
வித்யாசாகர்.
"குட். இங்க எங்களுக்கு ஷூட்டிங் லொகேஷன்செல்லாம் அரேஞ் பண்ணற ஒருத்தர்
இருக்கார். அவர்கிட்ட பேசி உங்களுக்குத் தங்கறதுக்கு இடம் ஏற்பாடுசெய்யச்
சொல்லறேன். ஹீ வில் கால் யூ டைரெக்ட்லி. மனோகர்னு பேரு. வேற தேவைகள் ஏதாவது
இருந்தாலும் அவர்கிட்டயே கேட்டுக்கலாம் நீங்க. இன் டேர்ம்ஸ் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ்.
நான் படத்தோட ஸ்கிரிப்ட் வேலைல இருக்கும்போ ஐ மே நாட் பி அவைலபிள் ஓன் ஃபோன். வி
வில் கீப் மீட்டிங் தோ."
அடுத்த அரைமணிநேரத்தில் அவர் வழக்குதொடர்பாய் சேகரித்திருந்த அத்தனை
ஆவணங்களையும் ஒழுங்குபடுத்தி அட்டைப்பெட்டியொன்றில் போட்டு வித்யாசாகரிடம்
தந்தார்.
"ரிமெம்பர் ஆல் திஸ் இஸ் ஸ்ட்ரிக்ட்லி கான்ஃபிடென்ஷியல். என்னுடைய பெயர் எந்த
வகையிலும் இதில் இழுபடாமல் பார்த்த்துக்கொள்ளுங்கள். இந்த வழக்கைப்பற்றி இப்படி
ஒரு விசாரணை நடப்பதாயும் யாருக்கும் தெரியவேண்டாம்."
"டெஃபினிடெல்லி." என்றான் வித்யாசாகர்.
அவர் 'குட் லக்' சொல்லி இருவருக்கும் கைகுலுக்கினார்.
வித்யாசாகரையும் வாசுதேவனையும் அவர் தாஜின்முன் இறக்கிவிட்டபொழுது நன்றாக
இருட்டியிருந்தது. குளிரும் அதிகமாகவேயிருந்தது.
"நல்ல ஸ்வெட்டர் ஒண்ணு வாங்கணும்." என்றான் வாசுதேவன் கைகளை உராய்ந்தவாறு.