Tuesday, October 26, 2021

ஐந்தாவது கொலை - Chapter 4

வித்யாசாகரும் வாசுதேவனும் சிம்ஸ் பார்க்கில் அமர்ந்திருந்தார்கள். வாசுதேவன் கனமான ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்திருந்தான். டிசம்பர் மாதக் குன்னூரில் குளிர் அவனை வேரோடு உலுக்கிக்கொண்டிருந்தது. வித்யாசாகர் கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருந்தான். கண்ணெட்டும் தூரம்வரை புல்வெளிப்பரப்பு நீண்டுகிடந்தது. அதிகமாய் கூட்டமிருக்கவில்லை. குன்னூருக்குள் எங்குபோனாலும் தொடர்ந்துவந்து அவர்களின் எதிரே அமர்ந்துகொண்டு விழித்துப்பார்க்கும் நீலநிற மலை இங்கேயும் வந்திருந்தது. 


"ஜெயராஜ் வழக்குல கொல்லப்பட்ட பெண்கள் தோன்றின படங்களோட கிரெடிட்ஸையெல்லாம் எடுத்தேன் வித்யா." என்றவாறு ஸ்வெட்டருக்குள் கைவிட்டு சட்டை பாக்கட்டிலிருந்து காகிதமொன்றையெடுத்து வித்யாசாகரிடம் நீட்டினான். 


"அந்த படங்கள்ல இன்ஃப்லுவென்ஸ் இருக்கக்கூடிய ஆட்கள். தயாரிப்பாளர்கள் அஸிஸ்டண்ட்ஸ் ப்ரொடக்ஷன் மேனேஜர். இப்படி ஏதோ ஒரு வகைல அந்த பெண்களோட தேர்வுல பங்கிருக்க வாய்ப்புள்ளவங்க."


"குட்." என்றவாறு அந்தக் காகிதத்தில் பார்வைபோட்டான் வித்யாசாகர். 


"கௌதம் நாயரோட படங்கள்ல பெரும்பாலும் முக்கிய பொறுப்புக்கள்ளயிருப்பவங்கயெல்லாம் அவரோட பெருபாலான படங்கள்ல சேர்ந்து வேலைபார்த்திருக்காங்க."


"ஹும்."


"இந்த ஆறு பெண்களும் தோன்றியிருக்கற படங்களை மட்டும் எடுத்துப்பார்தப்போ ஒரு மூணு பேரு கிடைச்சுது. ஒரு இசையமைப்பாளர். ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர். அப்புறம் ஒரு ப்ரொடக்ஷன் மானேஜர். இந்த மூணு பேர்ல யாருக்கு வேணும்னாலும் அந்தப் பெண்களோட தேர்வுல தொடர்பிருக்கலாம்."


"இண்டரெஸ்டிங். இசையமைப்பளருமா?"


"மீட்டூ மூவ்மென்ட்லயெல்லாம் பேரு அடிபட்ட ஆள்." என்று கண்ணைச் சிமிட்டினான் வாசுதேவன். 


"ஹும். ஜெயராஜுக்கு ஏதாவது சினிமா தொடர்பு இருந்திருக்குமா?"


"சினிமா பார்க்கிறதைத்தவிர வேற எந்தத் தொடர்பும் இருந்ததா தெரியல்லை. கௌதம் நாயரோட சொற்கள்ள சொல்லணும்னா ஒரு சராசரி ஆளுமை. கோயமுத்தூரைவிட்டு சென்னைக்கேகூட அதிகம் போயிருக்கறதுக்கான வாய்ப்பு கம்மி."


"அப்படினா சினிமா துறைல இருக்கற ஒரு ஆள் ஏதோ வகைல ஜெயராஜால கொல்லப்பட்ட எல்லா பெண்களோடயும் தொடர்புலயிருந்திருக்கான். அவனுக்கும் ஜெயராஜுக்கும் என்ன தொடர்புன்னு பாக்கணும் இல்லையா?"


"ஆமாம். ஆனா அதே நேரத்துல இது முழுக்கவே ஒரு கோயின்ஸிடென்ஸாவும் இருக்கலாம். இந்த ஆறு பெண்களைத்தவிரவும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. வேற ஏதோ ஒரு அடிப்படையில ஜெயராஜ் அவனோட விக்டிம்ஸை தேர்ந்தெடுத்தப்போ ஒரு ரேண்டம் கோயின்ஸிடென்ஸாவும் இந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்."


                                                                            ***


அவன் படுக்கையில் படுத்திருந்தான். அஞ்சியபடியே கண்களைத்திறந்து சுவரைப்பார்த்தான். எதிர்புறச்சுவரிலிருந்து யாரோ டார்ச்லைட் அடிப்பதுபோல ஒரு ஒளிவட்டம் தெரிந்தது சுவற்றில். இருண்டிருந்த அறையை எந்தவிதத்திலும் ஒளியூட்டவில்லை அந்த வட்டம். இருந்தும் கண்களை வலிக்கச்செய்யும் ஒளியைப்பார்த்துவிட்டதைப்போல அவன் கண்களை இறுகமூடிக்கொண்டான். போர்வையை இழுத்து தலையை முழுவதுமாய் மூடிக்கொண்டான். எடைமிகுந்த மௌனம் அந்த அறையில் நிறைந்திருந்தது. அவனால் நிறையநேரம் அப்படியிருக்கமுடியவில்லை. போர்வைக்குள் மூச்சுமுட்டுவதாயுணர்ந்தான். போர்வையை அகற்றச்சொல்லி அவனுடைய உள்ளுணர்வு மெதுவாக அவனை உலுக்கத்துவங்கியது. உடலில் வியர்வைத்துளிகள் எதுவும் இருக்கவில்லை. இருந்தும் வியர்ப்பதுபோலிருந்தது. உடலின் அசவுகர்யங்களெல்லாம் வெறும் சாக்குகளென்பதையும் அவனுக்குள் கண்களைத்திறந்து சுவற்றைப்பார்ப்பதற்கான ஆர்வம் கூடிக்கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருந்தான். அவனுடைய அச்சமே ஒரு வகையில் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை தூண்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தோற்கப்போகிறோம் என்பதை அறிந்திருந்தும் அவன் அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான். கண்களை இறுக மூடி போர்வைக்குள் புதைந்துகிடந்தான். நேரமும் நகராமல் அவனுடைய அடுத்த அசைவிற்காய் காத்திருப்பதுபோலிருந்தது அவனுக்கு. தோற்றுவிட்ட பாவனையுடன் அவன் மெதுவாக போர்வையை கழுத்துவரை இறக்கிவிட்டான். மிகமெதுவாக கண்களைத்திறந்து சுவற்றைப்பார்த்தவன் அதிர்வுற்றான். சுவர் இருண்டிருந்தது. எந்த ஒளிவட்டமுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அவன் தன்னை ஒரு கோழைபோலுணர்ந்தான். ஒளிவட்டதை அஞ்சி நிறையநேரம் போர்வைக்குள் புதைந்துகிடந்த கோழைத்தனத்தின்மேல் அருவருப்பு எழுந்தது. இரவு முழுவதும் கண்ணடைக்கப்போவதில்லையென்று உறுதிபூண்டான். இனி காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.


                                                                    ***


"வாஸ். கௌதம் நாயர் ஒருவேளை மாயாவைக் கொண்ணது ஜெயராஜ் இல்லை இன்னொறாள்னு நம்ம ஆர்வத்தைக்கூடறதுக்காகவும் சொல்லியிருக்கலாமில்லயா? நிஜத்தில் அவருக்குத்தெரியவேண்டியது எப்படி மாயா ஜெயராஜ்கிட்ட மாட்டினாங்கறதா இருக்கலாமில்லயா?"


"எதுனால அப்படி சொல்லறே?"


"நம்மளோட இந்த ரெண்டாவது ஆள் தியரி கௌதம் நாயர் எழுப்பின சந்தேகத்தோட அடிப்படைலதான் பலமா நிக்கறமாதிரி தெரியலையா?


"ஆனா இந்த கொலைகள்ல ஒரு சினிமா ஆங்கிள் இருக்கே வித்யா. அதை வேற எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும்?"


"சினிமா ஆங்கிலே கூட இந்த வழக்கு கௌதம் நாயர் மூலமா வந்ததாலதானே நம்ம கண்ணுல பட்டுச்சு. கௌதம் நாயர் ஒரு திரைத்துறை ஆளுமையா இல்லமாயிருந்திருந்தா நாம இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்துக்கு வந்திருப்போமா இந்த வழக்குல?"


"மே பி நாட். ஆனா இது இதுவைரக்கும் நமக்குதெரிஞ்சு யாரும் பார்க்காத ஒரு கோணம்தானே இந்த கேஸ்ல?"


"இது ஒரு தப்பான கோணம்ங்கறதாலயும் யாரும் பார்க்கமாயிருந்திருக்கலாமில்லயா?


                                                                        ***


ஓபராய் ஷெராட்டனின் பால் ரூமில் வருடாவருடம் தென்னிந்தியாவில் நவம்பர் மாதத்தில் நடக்கும் வைர நகை தயாரிப்பளர்களின் இரண்டு நாள் எக்ஸ்போ நடந்துகொண்டிருந்தது. இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்வான ஃபாஷன் ஷோ முடிந்திருக்க மதுபான விநியோகம் தொடங்கியிருந்தது. மங்கலாக ஒளியூட்டப்பட்டிருந்த அறையில் போடப்பட்டிருந்த மேஜைகளும் நாற்காலிகளும் பள்ளிக்குழந்தைகளைப்போல் வெள்ளையுடையணிந்து உட்கார்ந்திருந்தன. நன்றாக மழித்த முகங்களுடனும் பெரிய தொப்பைகளுடனுமிருந்த வடநாட்டு வைர நகைத் தயாரிப்பாளர்கள் ஃபாஷன் ஷோவில் பங்கெடுத்த சில பெண்களுடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். பால் ரூமிற்க்கு வெளியேயிருந்த காரிடோரில் நின்று கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த மாயாவை அவள் நெருங்கிவந்தாள். கையில் புன்கைந்துகொண்டிருக்கும் சிகரட். 


"ஹலோ."


"ஹாய்."


"சேட்டுங்கப்பூரா உன்னையே சுத்திசுத்தி வந்தாங்க. நீ இங்க தனியா ஃபோன பார்த்திட்டு நிக்கறே?" என கண்ணடித்தாள் அவள். மாயா மெலிதாய் புன்னகைத்தாள். 


அவள் சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து கீழுதட்டைச் சற்று வலப்புறமாய் நகர்த்திவிட்டு புகையை வெளியேற்றினாள். பால் ரூமின் தடித்த கதவை யாரோ திறக்க உள்ளிருந்து இசை கேட்டு கதவு அடைபட்டதும் நின்று அந்த இடம் மீண்டும் அமைதியில் ஆழ்ந்தது. 


"உன்னை மாடலிங் இவண்ட்ஸ்ல அதிகம் பார்த்ததில்லையே? பை தி வே ஐ ஆம் வாமிகா." அவள் நீட்டிய காரத்தைப்பற்றி "மாயா" என்றாள் மாயா. அவள் தலைமுடிக்கு தங்கநிறச்சாயம் அடித்திருந்தாள்.


"நான் சென்னைக்கு வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது."


"ஓ. வேர் ஆர் யூ ஃப்ரம்?"


"கொயம்பத்தூர்."


"வாட்? இட்ஸ் ஸச் ஏ டெட் சிட்டி. அங்க என்ன பண்ணிட்டிருந்தே?" மாயா புன்னகைத்தாள். 


"பொறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். படிப்பு முடிச்சிட்டு இப்போ வேலை கிடைச்சு சென்னை வந்தேன்."


"என்ன வேலை?"


"ஹெச்பீல ப்ரொக்ராமர்."


"வாட் த ஃபக்! அப்புறம் எதுக்கு ஐயாயிரம் ரூபாய்க்காக இந்த சேட்டுங்ககிட்ட லோல்பட வந்தே?"


"என்னக்கு படத்துல நடிக்கணும். ஆட்ஸ் அப்புறம் இந்த மாதிரி ஷோஸெல்லாம் பண்ணினா அந்த எக்ஸ்போஷர்ல சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க."


"யார் சொன்னாங்க?" அவள் மாயாவின் முகத்தினருகே நெருங்கிவந்து கேட்க அவள் வாயிலிருந்து வோட்காவின் மணம் வந்தது. மாயா புரியாமல் அவளைப் பார்த்தாள்.


"அதெல்லாம் பெருமாள் கோவில்ல காச்ச்சேரி பண்ணிகிட்டே ஏ ஆர் ரஹ்மான் அதைக் கேட்டு அவரோட படத்துல பாடக் கூப்பிடுவாருனு வெயிட் பண்ணறமாதிரி. சினிமா ஒரு தனி உலகம். அந்த உலகமும் வெளி உலகமும் சந்திச்சுக்கறது ரொம்ப ரேர். உனக்கு சினிமா ஆசையிருந்தா சினிமா உலகத்துக்குள்ளபோய்த்தான் வாய்ப்பு தேடணும். இப்படி சம்பந்தமில்லாத எடத்துல நின்னுட்டிருந்தேனா உன்னோட நேரம்தான் வீணாகும். யூ சீம் லைக் ஏ குட் கிட்." மாயாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 


"என்னோட ஸ்நேகிதி ஒருத்தி இருக்கா. சினிமால சின்ன சின்ன வேஷம் பண்ணறவ. அவ ஒருத்தனப்பத்தி சொல்லியிருக்கா. துரைபாகத்துல இருக்கான். கஞ்சா கேஸ். ஆள புடிச்சுப்போச்சுன்னா உதவி பண்ணுவான். பெரிய டைரக்டர்ஸ்ட்ட எல்லாம் அசிஸ்டண்டா வர்க் பண்ணறவன். உன்னோட நம்பர் குடு. நான் அவளைக் கூப்பிட்டுப்பேசச் சொல்லறேன். யூ சீம் லைக் ஏ குட் கிட்." என்றாள் அவள் இரண்டாவது முறையாக மாயாவின் கன்னத்தை மெதுவாக வருடியவாறு. 


Monday, October 25, 2021

ஐந்தாவது கொலை - Chapter 3

அந்தச் சிறிய அறைக்குள்ளிருந்த எதுவுமே கண்ணுக்குத் தெரியாதபடி அந்த அறையில் கண்கூசச்செய்யும் ஒளி நிறைந்திருந்தது. அவன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் சுவற்றோடுஒட்டிப் படுத்திருந்தான். கால்மூட்டுகளை நெஞ்சோடு அணைத்து இறுகப்பற்றியிருந்தான். கண்களை மூடியிருந்தும் அந்த ஒளி அவனுடைய இமைகளைத்துளைத்துக்கொண்டு கண்களுக்குளே ஊடுறுவுவதுபோல் உணர்ந்தான். இமைகளே இல்லாததுபோலிருந்தது. வெண்மையான அந்த ஒளி மெல்ல நிறம்மாறி சிகப்புவண்ண ஒளியானது. கண்களைத்திறக்காமலேயே அவனால் அந்த வண்ணமாறுதலை உணரமுடிந்தது. செந்நிற ஒளிக்கடலில் இப்பொழுது வெள்ளைக் குமிழ்கள் தோன்றின. தோன்றிய குமிழ்கள் இணைந்து சதுரங்களும் வட்டங்களும் செவ்வகங்களும் முக்கோணங்களுமாயின. பின் அந்த வடிவங்களெல்லாம் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதுபோல் சுழன்று சுழன்று ஒளிக்கடலில் மிதந்தன. சிறிது நேரத்தில் இல்லாத அந்தக் காற்று சட்டென்று ஓய்ந்ததுபோல எல்லா வடிவங்களும் உறைந்துபோய் அந்தரத்தில் நின்றன. அவன் அடுத்து என்ன நடக்கபோகிறதென்பதை அறிந்திருந்தான். அதை ஒரே நேரத்தில் அஞ்சுவதுபோலவும் எதிர்நோக்குவதுபோலவும் மாறியது அவன் முகம். இப்பொழுது தொலைவில் மிகத்தொலைவில் எங்கோயிருந்து அவனுக்கு மட்டும் ஒரு ஒலி கேட்டது. இரண்டு பித்தளைக்கிணங்களை முட்டவைத்ததுபோலான ஒலி. அந்த ஒலி அவன் படுத்திருந்த தரைக்குகீழேயிருந்து வருவதுபோல அதைக்கேட்க தரையோடு காதை மெல்ல அழுத்தினான். பத்து வினாடிகளுக்கு ஒன்றென்று சீராகவும் மிகமென்மையாகவும் ஒலித்ததை கேட்டவாறு அவன் படுத்திருந்தான்.


சிவந்த ஒளிக்கடலில் தோன்றிய வடிவங்களும் அந்தரத்தில் நின்றபடி அவனுடன் அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாய் தோன்றியது அவனுக்கு. பத்துவிநாடிகளுக்கு ஒருமுறை ஒலித்துக்கொண்டிருந்த ஒலி இப்பொழுது இடைவெளிகுறைந்து ஒலிக்கத்தொடங்கியது. ஒன்பது எட்டு ஏழு ஆறு ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மண்டையைப் பிளக்கச்செய்யும் ஒலியாய் அது மாறுமென்பதையும் அவன் அறிந்திருந்தான். இருந்தும் அவனுடைய வலக்காதை பலமாக தரையில் அழுத்தினான். ஒலிகளுக்கு இடையேயான இடைவெளி இப்பொழுது மிகமிகக் குறைந்திருந்தது. ஒரு வினாடிக்கு நூறு முறையென ஒலித்தது. அந்த நூறையும் அவனால் துல்லியமாய் கேட்கமுடிந்தது. ஒலி கனத்து கனத்து வந்து முடிவாய் ஒலியும் ஒரு வடிவமாய் மாறியது. வடிவமாய் மாறிய ஒலி ஒரு நெற்றிப்பொட்டைப்போலிருந்தது.

 

சிவந்த ஒளிபரப்பில் அசைவற்று நின்றிருந்த வடிவங்கள் இப்பொழுது மெல்ல அசையத்தொடங்கின. மேலும் கீழுமாய் இடவலமாய் நகர்ந்தன. எந்த வடிவமும் இன்னொரு வடிவத்தை தொட்டுவிடாதபடி மிகக்கவனமாக நகர்ந்தன. நேரம் கடக்கக்கடக்க நகர்தலின் வேகம் அதிகரித்துவந்தது. ஒரே விதமாய் நகர்ந்துகொண்டிருந்த வடிவங்கள் இப்பொழுது ஒழுங்கற்று நகர்ந்தன. ஒன்றோடொன்று முட்டிக்கொண்டன. வினாடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் என நீண்டது அந்த நகர்தல். அவன் கண்களை இறுகமூடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒளிவடிவங்களின் காலத்திற்கு வெளியேயுள்ள ஒரு பரப்பில் முடிவற்றதாய் நடந்துகொண்டிருந்த ஒளிவடிவங்களின் நடனம் சட்டென்று நின்றது.

 

எல்லாவற்றையும் இருள் தின்றுவிட்டிருந்தது. தரைப்பரப்பிற்குக்கீழே மிகமிக ஆழத்தில் ஒளியும் ஒலியும் நுழையமுடியாத ஒரு இடத்தில இப்பொழுது இருந்தான் அவன். பல நாட்கள் புலன்களின் சலனமேயில்லாத வெளியொன்றில் காத்துக்கிடந்தான். மிக மெலிதாய் மீண்டும் பித்தளைக்கிணங்கள் முட்டிக்கொள்ளும் ஒலி எழதுவங்கியபொழுது புளிப்பான எதையோ கடித்துவிட்டதுபோல் அவனுடைய முகம் இறுகியது. ஒலிகளுக்கிடையேயான இடைவெளி குறைந்துகொண்டும் சப்தம் கூடிக்கொண்டும்வர சிவந்த ஒளிப்பரப்பில் வெள்ளைநிறக்கோடுகளாலான ஒரு பெண்ணுருவம் கொஞ்சம் கொஞ்சமாக உருவம்பெறத்துவங்கியது. சிம்ஹத்தில் இடக்காலின்மேல் வலங்காலிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணுருவம். நான்கு கரங்களில் மூன்றில் ஆயுதங்களைப்பற்றி ஒன்றை செந்நிற உள்ளங்கை தெரியும்படியாய் வைத்திருக்கும் பெண்ணுருவம். அவன் மார்புக்கூட்டின் எலும்புகள் நொறுங்கிவிடும்படியாய் கால்மூட்டுகளை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான். அந்தப் பெண்ணுருவுவம் இரண்டாய் நான்காய் பதினாறாய்ப் பல்கி அவனைச் சூழ்ந்தது. முதலில் அவன் நிலையாயிருந்து உருவங்கள் சுழலுவதுபோலவும் பின் உருவங்கள் நினலயிருந்து அவன் சுழலுவதுபோலவும் உணர்ந்தான். வினாடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் இப்படிக்கழிந்தபின் மீண்டும் சட்டென்று ஒளியும் ஒலியுமற்ற வெளியொன்றில் வீசப்பட்டான். பல ஆண்டுகள் அங்கேயே படுத்திருந்தான்.

 

***

 

இரவு அதற்குப்பின் வித்யாசாகரும் வாசுதேவனும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. வாசுதேவன் படுத்ததும் உறங்கிவிட்டான். வித்யாசாகர் நிறைய நேரம் விழித்திருந்தான். முடிவாக அவனுக்கு உறக்கம் தட்டியபொழுது மெல்ல விடிந்துகொண்டிருந்தது. மதியம் பனிரெண்டு மணியைக் கடந்தபின் தான் வித்யாசாகர் எழுந்தான். வாசுதேவன் மடிக்கணினியில் ஆழிந்திருந்தான். மதிய உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்குவெளியே புல்வெளிப்பரப்பில் அமர்ந்துகொண்டார்கள். முன்தினம் இரவு பெய்த மழைக்குப்பின் குளிர் சற்றுக் குறைந்திருந்தது.

 

"இது என்ன வித்யா கதையே மொத்தமா கெளதம் நாயரை சுத்தி திரும்பிடுச்சு?" என்றான் வாசுதேவன்.

 

"முதல்ல எனக்கும் குழப்பமாத்தான் இருந்துது வாஸ். ஆனா யோசிச்சுப் பார்த்ததுல எதுவோ ஒரு வகைல இது எதிர்பார்ததுதான்னு தோணிச்சு. சொல்லப்போனா தனக்கு எந்தவித தொடர்புமில்லாத ஒரு வழக்குல கெளதம் நாயர் இவ்வளவு ஆர்வம் கட்டியிருந்தாருன்னாதான் நாம ஆச்சர்யப்படணும்."

 

"ஆனா இது என்ன வகையான தொடர்பயிருக்கும்? நாம இதுவரைக்கும் படிச்ச பத்திரிக்கைச் செய்திகள் எதுலயும் கொல்லப்பட்டவங்களுக்கு இப்படி ஒரு திரைப்படத்துறைத் தொடர்பு இருப்பதா படிச்ச ஞாபகமில்லை."

 

"அதுக்குக்காரணம் எல்லாருமே ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ்தான். சின்ன சின்ன வேஷங்கள்ல மூணோ நாலோ படங்களுக்குமேல நடிச்சிருக்கறதா தெரியலை. அப்படி நடிச்சவங்களுக்குக்கூட சினிமால நடிக்கறதுக்கான நிஜமான ஆசை இருந்துதா இல்லை அவங்களுக்கு சினிமாத்துறைலயிருந்த ஏதாவது தொடர்புமூலமா வெறுமனே ஒரு ஆர்வத்துல ஒரு விளையாட்டுபோல இந்தப் படங்கள்ல தோன்றியிருக்காங்களானும் தெரியலை."

 

"ஹும். எப்படியிருந்தாலும் இவங்க எல்லாருக்குமே ஏதோ வகைல சினிமாத்துறையோட ஒரு தொடர்பிருந்திருக்கு."

 

"ஹும்." 

 

கௌதம் நாயர் இதுல எங்க வரார்?”

 

"தெரியலை. அந்த ஆறு பெண்களும் தோன்றியிருக்கற படங்கள்ல அவங்க வெறுமனே கிரௌட் ஷாட்ஸ்ல பாக்கிரௌண்ட்லதான் நிறுத்தப்பட்டிருக்காங்க. டயலாக்ஸ் எதுவும் இல்லை. அதனால அவங்களோட தேர்வுல கௌதம் நாயருக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு குறைவுதான். அதுல சில ஷாட்ஸெல்லாம் அவர் இயக்கியிருக்கறதுக்கான வாய்ப்பு கூட இல்லை. அதெல்லாம் பொதுவா அஸிஸ்டண்ட்ஸ் பண்ணற வேலை."

 

"அப்படினா ஜெயராஜ் வழக்குல கொல்லப்பட்ட ஏறக்குறைய எல்லா பெண்களுமே அவரோட படத்துல தோன்றியிருக்காங்கங்கறது அவருக்கு தெரிஞ்சிருக்காதுனு சொல்லறியா?"

 

"தெரியமாயிருக்கறதுக்கான வாய்ப்பு இல்லாமயில்லைனு சொல்லறேன்."

 

"அவர்கிளிடயே கேட்டுப்பார்த்திடலாமே?"

 

"கேக்கலாம். அவராவே தொடர்புல வரேன்னு சொல்லியிருக்காரு. இப்போதைக்கு நாமளா இதைப்பத்திப்போய் கேட்கவேண்டாம். அவரா கூப்பிடும்போது பார்த்துக்கலாம். அவர் குடுத்திருக்கற மெட்டீரியல்ஸ் இன்னும் பாதி கூட படிச்சு முடிக்கல்லை. அதையெல்லாம் முழுசா படிச்சு முடிச்சப்புறம் அதுவரைக்கும் அவர் தொடர்புல வரலைனா நாமளாப்போய்ப் பேசலாம். நீ ஆன்லைன்ல கொஞ்சம் தேடிட்டிரு இந்த சினிமாத்துறை ஆங்கில்லே."

 

வெயில் சற்றுக்கூடியிருக்க அவர்கள் வீட்டிற்குள் வந்தார்கள். வித்யாசாகர் உள்ளறைக்குச்சென்று செய்திவாசிப்பில் மூழ்கினான். வாசுதேவன் முன்னறையில் வந்து மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.

 

***

 

துரைப்பாக்கம் குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் திரைபடப்படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. காலை ஒன்பதரைக்கெல்லாம் முடிந்திருக்கவேண்டிய வேலை இன்னும் துவங்கியிருக்கவில்லை. தொலைபேசியை எடுக்காத கதாநாயகியைத் தேடி ப்ரொடக்ஷன் வாகனம் போயிருந்தது. கேட்டிற்கு வெளியேயும் மதிற்சுவரின் மேலேயும் கூட்டம் கூடியிருந்தது. உதவிவேலைகளுக்கு வந்திருந்தவர்களும் ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் ஷாமியான பந்தலுக்கடியில் அமர்ந்து பொங்கலும் உளுந்துவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ப்ரொடக்ஷன் ஆள் ஒருவன் அவர்களை அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்.

 

"சீக்கிரமா முடிங்கப்பா. லைட்டிங் சரிபார்க்க கேமராமேன் கூப்பிடுறாரு."

 

"உக்கும். மதியானம் மூணு மணிக்கு நடக்கப்போற கூத்துக்கு நிம்மதியா சோறு துண்ணவிடாம இம்சை பண்ணறானுங்க." என்றவாறு பேப்பர் தட்டில் மிஞ்சியிருந்ததை அள்ளி வாயில்போட்டுக்கொண்டு கைகழுவ விரைந்தார்கள்.

 

ஃபிரேமை மானிட்டரில் சரிபார்த்துக்கொண்டிருந்த தடித்த கண்ணாடியணிந்த ஒருவன் எழுந்து சத்தம் போட்டான்.

 

"யாருய்யா ப்ரொடக்ஷன் மேனேஜர்? இப்படி எல்லா ஷாட்லயும் பாக்கிரௌண்ட்ல எதுக்குயா ஒரே ஆளுங்களா நிப்பாட்டி எழவெடுக்கறீங்க? டைரக்டர் கவனிச்சிட்டாருன்னா என்னோட தலியறுப்பாரு."

 

"ரெகமெண்டேஷன்ல வந்த ஆளுங்க சார்."

 

"என்ன மயிறு ரெகமெண்டேஷன்? காலேஜ் ஷாட்ல பின்னாடி பூரா பெரிய பொம்பளைங்களா நிப்பாட்டி வச்சிருக்கே. அறிவு வேண்டாமா? அனுப்பிவிட்டிட்டு சின்ன பொண்ணுங்களா கூட்டியா டக்குனு. உசுர எடுக்காதே. ஓடு."

 

சட்டென்று வேலையில்லாமல் ஆனதில் அவளுக்கு அன்றைய மிச்சப்பொழுதை என்ன செய்வதென்று பிடிபடவில்லை. பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது எழுப்பிவிட்டிருந்தார்கள். பசித்தது. கையில் பணமும் அதிகம் இருக்கவில்லை. அங்கேயே சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்தவளுக்கு சீக்கிரமே அலுத்துப்போனது. கூட்டத்தைக்கண்டந்து வெளியே ரோட்டிற்கு வந்தாள். அவள் ரோட்டைத் தொட்ட அதே வினாடியில் அவளருகே ஷேர் ஆட்டோவொன்று நிறுத்தத்திற்கு வர அதிகம் யோசிக்காமல் ஏறி அமர்ந்து ஒக்கியத்தில் இறங்கிக்கொண்டாள். அதுவரை காரிலேயே வந்திருந்த அந்தத்தெரு பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரியாய்த் தெரிந்தது. மேலும் கீழுமாய் மூன்று நான்கு முறை நடந்த பிறகுதான் ஒருமாதிரி பிடிகிடைத்தது. இரண்டு திருப்பங்கள் திரும்பி ஐந்து நிமிடம் நேராக நடந்து அந்தக் காட்டிடத்தையடைந்தாள். பதினைந்து அபார்ட்மெண்ட்களைக் கொண்ட சிறிய குடியிருப்பு. கேட் திறந்துகிடந்தது. வாட்ச்மேனைக் காணவில்லை. அவள் விரைவாய் கேட்டைக் கடந்து உள்ளே போனாள். லிஃப்ட் நான்காவது தளத்திலிருந்து. காத்திருக்காமல் படியேறத்துவங்கினாள். முதல் தளத்தில் எதிர்ப்பட்ட ஒரு நடுத்தர வயது ஆள் இவளை மேலும்கீழுமாய்ப் பார்த்தவாறு கடந்து சென்றான். இரண்டாவது மாடியில் வலப்புறம் கடைசியாயிருந்த பிளாட்டிற்குமுன் நின்று அழைப்புமணியை அமிழ்த்தினாள். இரண்டு நிமிடத்திற்கு உள்ளிருந்து எந்த சப்தமும் கேட்கவில்லை. மறுபடியும் மூன்று நான்கு முறை இடைவெளிவிடாமல் அமிழ்த்தினாள். உள்ளே ப்ளேட்டோன்று தரையில் விழும் சப்தம் கேட்டது. மேலும் ஒரு நிமிட காத்திருப்பிற்குப்பின் கதவு திறக்கப்பட்டது. திறந்த மாத்திரத்தில் குப்பென்று அடித்த புகைமணம் அவளை நிலைகுலையச்செய்தது. அவள் உள்ளே நுழைந்துகொள்ள அவன் கதவைச்சத்திவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான். அவனைத்தொடர்ந்து அவளும் உள்ளே போனாள். அவன் இருந்த அறை புகைமண்டலமாயிருந்தது. உள்ளே கால் வைத்ததும் அளவுக்கு இருமியது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

 

"காலைலயே ஆரம்பிச்சிட்டியா?" அவன் படுத்திருந்த கட்டிலில் அவனருகே அமர்ந்துகொண்டபடி கேட்டாள். சிக்கப்பேரிய கண்களால் அவனைப்பார்த்தவாறு "நீ என்ன இந்நேரத்துக்கு வந்திருக்கே? ஷூட்டில்லே?" என்றான்.

 

"அந்த சிடுமூஞ்சி சோடாபுட்டி தொரத்திவிட்டிரிச்சி. அதுக்கு சின்ன பொண்ணுங்களா வேணுமாம்."

 

அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அவனுடைய முகம் அவளை நோக்கித்திரும்பியிருந்தபொழுதும் அவன் வேறு எதையோ பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது.

 

"என்ன அப்படி பாக்கறே? வேலை இல்லையா உனக்கு இன்னைக்கு?"

 

"குடிக்கிறிய?"

 

"அய்யே. கலங்கார்த்தாலேயேவா. வேண்டா."

 

அவன் எழுந்து அமர்ந்தான். அவளை மெல்லத்தள்ளி படுக்கையில் கிடத்தினான். உடுத்தியிருந்த லுங்கியை கழட்டி கீழேபோட்டுவிட்டு அவள் மேல் படுத்து அவனுடைய உடலால் அவளுடைய உடலை அழுத்தினான். நெருங்கி வந்த அவனுடைய உதட்டைக் கடித்துவிட்டு "எப்பவுமே இந்த நெனப்பு தானா உனக்கு?" என்றாள் அவள். அவள் மேல் சிறிது நேரம் உறைந்துகொண்டிருந்தவன் சட்டென்று விலகிப் படுத்துக்கொண்டான். அவள் அவனை நெருங்கி அவனை உயிர்ப்பிக்க முயன்றாள். அந்த இடம் அமைதியாயிருக்க அவனுடைய மூச்சு விடும் சப்தமும் சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சுவாரஸ்யமில்லாமல் படுத்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. நூற்றியைம்பது டிக்கிற்குப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டு அவள் பின்வாங்கினாள். அவன் சுவர்பக்கமாய் திரும்பிப் படுத்துக்கொண்டான். அவள் அவன் கலைத்திருந்த அவளுடைய உடைகளை சரிசெய்துகொண்டு அவனருகே படுத்துக்கொண்டாள். ஏதோ ஒரு வீட்டிலிருந்து குக்கரின் சப்தமும் ஒரு குழந்தையின் அழுகையும் கேட்டது. ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தவள் படுக்கை மெலிதாய் குலுங்குவதையுணர்ந்து திரும்பிப்பார்த்தாள். அவனுடைய முதுகு அசைந்துகொண்டிருந்தது.

 

"விடுயா. செக்ஸ் மட்டும்தானா உலகத்துல? வேற எவ்ளோயிருக்கு."

 

பட்டென்று எழுந்து அமர்ந்த அவன் பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தான்.

 

"பொட்ட நாயே." என்றான் உஷ்ணமாய் அவளை பார்த்தவாறு. அவனுடைய உடல் கோபத்தில் மெலிதாய் நடுங்கிக்கொண்டிருந்தது.

 

அவளுடைய கன்னம் அவன் அறைந்த இடத்தில் எரியத்தொடங்கியது. வலது கையால் தொட்டுப்பார்த்தாள். சுட்டுக்கொண்டிருந்தது. மெதுவாய் கன்னத்தை விரல்களால் தடவியவாறு அவன் கண்களைப்பார்த்து "நானா? நீயா?" என்றாள் அவள்.


Thursday, October 14, 2021

ஐந்தாவது கொலை - Chapter 2

 அடுத்த ஒரு வாரத்தில் வித்யாசாகரும் வாசுதேவனும் சென்னைக்குச் சென்று அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவயானவற்றையெல்லாம் எடுத்துவந்தார்கள். கெளதம் நாயர் ஏற்பாடு செய்திருந்த ஆள் சிம்ஸ் பார்க்கிலிருந்து நடந்துபோகக்கூடிய தூரத்தில் அவர்கள் தங்குவதற்கு கட்டேஜொன்றை முடிவுசெய்து கொடுத்தான். சுற்றிலும் தோட்டத்துடன் ஐந்தாறு பெரிய அறைகளுடனிருந்தது காட்டேஜ். எல்லா ஜன்னல்களிலிருந்தும் தொலைவில் நீல நிற மலையும் அதன் சரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளும் தெரிந்தன. சமையலுக்கும் மற்ற உதவிகளுக்குமாய் ஒரு வடநாட்டுப் பையனையும் அமர்த்தியிருந்தான்.

 

வாசுதேவன் ஒரு பெரிய அறையில் ஆங்கில துப்பறியும் படங்களில் வருவதுபோல் சுவர்களில் சார்ட் பேப்பர் ஒட்டி பீளமேடு ஜெயராஜ் வழக்கு தொடர்பான விவரங்களை அதில் எழுதிவைத்திருந்தான்.

 

ஒரு வெள்ளிக்கிழமையின் காலை வடநாட்டுப் பையன் செய்துகொடுத்த ப்ரெட் டோஸ்டையும் சூடான தேநீரையும் சாப்ப்பிட்டுவிட்டு இருவரும் சோம்பேறித்தனமாய் எழுந்துவரும் சூரியனின் இளஞ்சூட்டில் வெளியே புல்வெளிப்பரப்பில் இடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

 

எதிரே தெரிந்த மலைமுகட்டைப் பார்த்தவாறு ஆழ்ந்த சிந்தனையிலிருந்த வித்யாசாகரிடம்

 

"எங்கே தொடங்கறது வித்யா? என்றான் வாசுதேவன்.

 

"ரெண்டு விதமா பார்க்கலாம் வாஸ். ஒண்ணு பீளமேடு ஜெயராஜ் வழக்குலயிருந்து தொடங்கலாம். அதை தொடர்ந்து வந்து அதுல ஏதாவது ஒரு வகைல இயல்பா மாயாவோட கொலை வந்து இணையுதான்னு பார்க்கலாம். இல்லை அந்த வழக்கை முழுவதுமா மறந்திட்டு மாயாவோட கொலையை ஒரு தனிச்சம்பவமா பார்க்கலாம். அப்படி பார்க்கும்போது ஒண்ணு தானாவே அது ஜெயராஜ் வழக்கிலபோய் முட்டி நிக்கறதுக்கான வாய்ப்பிருக்கு. இல்லைனா வேற ஏதாவது புதுசா தெரியவரலாம்."

 

"போலீசும் சிபிஐயும் முதலாவது முறைலேதான் அணுகியிருப்பாங்க. ஜெயராஜ் வழக்கோட கொடூரமும் அதன் விளைவா அதுக்குக் கிடைத்த மீடியா கவனமும் விசாரணையை அதை மையமா வாசிச்சுதான் நகர்த்தியிருக்கும். அதனால நீ சொல்லறபடி மாயாவோட கொலையை ஜெயராஜ் வழக்கைத் தவிர்த்திட்டு ஒரு தனிச்சம்பவமா பார்க்கறதுதான் சரியாய் வரும்னு தோணுது."

 

"ஹும். கெளதம் நாயர் கொடுத்திருக்கிற மெட்டீரியல்ஸ்ல மாயா தொடர்பானவற்றையெல்லாம் மொதல்ல தனியா தொகுத்துக்கலாம். அதுலேயிருந்து அவளோட வாழக்கையைப்பத்தின ஒரு உருவம் கிடைக்குதான்னு பார்ப்போம்."

 

மதியம் இரண்டு மணி வரை அவர்கள் மாயா தொடர்பாய் நாளிதழ்களிலும் வாரயிதழ்களிலும் ஏழாண்டுகளுக்குமுன் வந்திருந்த அனைத்துச் செய்திகளையும் படிப்பதில் ஆழ்ந்திருந்தார்கள். மதிய உணவிற்கான அழைப்பு அவர்கள் கவனத்தைக் கலைத்து அவர்களை நிஜத்திற்கு மீட்டுவந்தது. வாசுதேவன் எழுந்து சோம்பல்முறித்தான்.

 

"ஒரு நிகழ்கால சம்பவத்தை பத்திரிகைல படிக்கும்போது தெரியறதில்லை வித்யா. இப்படி விலகி நிண்ணு பார்க்கும்போதுதான் எவ்வளவு முன்னுக்குப்பின் முரணான உண்மையோட எந்தத்தொடர்புமில்லாத விஷயங்கள் செய்தியா தரப்படுதுனு புரியுது." என்றான். வித்யாசாகரும் அவன் படித்துக்கொண்டிருந்த செய்தித்துணுக்கை முடித்துவிட்டு எழுந்தான்.

 

வடநாட்டுப் பையன் நேர்த்தியாய்ச் சமைத்திருந்த தென்னிந்திய உணவை இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டபின் வாசுதேவன் சிறிதுநேரம் உறங்கினான். வித்யாசாகர் வீட்டிற்குவெளியே புல்வெளிப்பரப்பில் அமர்ந்து தொலைவில் தெரிந்த மலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். வானம் மேகங்களில்லாமல் சலவைசெய்து காயப்போட்ட நீலநிறச்சேலைபோலிருந்தது. சூரியனின் ஒளிபட்டு மலைகளின் முகடுகள் துளங்கிக்கொண்டிருந்தன.

 

வாசுதேவன் எழுந்துகொண்டதும் மீண்டும் இருவரும் மாயா குறித்த செய்திகளில் மூழ்கினார்கள். வாசித்தவற்றிலிருந்து முரணான விஷயங்களையும் திரும்பச்சொல்லப்பட்டவற்றையும் நம்பகத்தன்மையற்ற செய்திகளையும் களைந்தபின் மெல்ல மெல்ல மாயாவைக்குறித்த சித்திரமொன்று அவர்கள் மனதில் உருவம்பெறத்தொடங்கியது. மாலையில் தேநீர் அருந்திவிட்டு குளிர் மெல்ல இறங்கிக்கொண்டிருந்த குன்னூர் தெருக்களில் நடந்துகொண்டு இருவரும் படித்தவற்றை தொகுத்துக்கொண்டார்கள்.

 

"கெளதம் நாயர் சொன்னதுபோல் இது ஒரு கேரக்டர் அசாசினேஷன்தான் வித்யா. எத்தனை விதமான அபத்தமான செய்திகள். எந்த ஆதரமுமில்லாம ஜோடிக்கப்பட்ட ஸ்பெகுலேஷன்ஸ். வெளியிட்ட பத்திரிக்கையேகூட அதுகுறித்து எந்தவிதமான ஃபாலோஅப்பும் செய்ய முயற்சிக்காத அளவுக்கு கீழ்த்தரமான சென்சேஷனலிஸ்ட்டிக் புல்ஷிட்."

 

"ஹும். பொண்ணு அழகாயிருந்திருக்கா. சின்னவயசு வேற. அது மக்கள்கிட்ட ஒரு விதமான ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கும். அதுக்கு பத்திரிக்கைகள் தீனி போட்டிருக்கு. ஒரு கட்டத்துல எல்லாருக்கும் அலுத்துப்போயிருக்கும். அப்படியே அடுத்த செய்திக்குத் தாவியிருப்பாங்க."

 

"இதுல ஏதாவது நாம கவனமா பார்க்கவேண்டியது இருக்கா?"

 

"இதுல சொல்லியிருக்கற பல விஷயங்களும் தொடர்குற்றங்களுக்குத்தான் பொருந்தும். தனிச்சம்பவங்களுக்கில்லை. இதுல ஏதாவது ஒண்ணு மாயாவோட கொலைக்கான காரணமாயிருந்தா அதுக்கு அடுத்துவந்த காலகட்டத்துல அதே மாதிரியான கொலைகள் நடந்திருக்கும். ஆனா அப்படி எதுவும் நடந்ததா தெரியலை."

 

"அந்த அரசியல் பிரமுகர்?"

 

"மாயாவோட தொலைபேசிலயிருந்து அவரோட பிஏவை அழைத்திருக்கறதுக்கான ஆதாரம் கிடைச்சிருக்கு. அதனடிப்படைல புனையப்பட்ட கதையாயிருக்கத்தான் வாய்ப்பு அதிகம். அவரோட தரப்பிலேயிருந்து அது ஏதோ கம்யூனிட்டி சர்டிபிகேட் தொடர்பான அழைப்புதான்னு விளக்கம் கொடுத்திருக்காங்க. எதிர்க்கட்சி சார்புகொண்ட ஒரு பத்திரிக்கைல மட்டும்தான் இந்த செய்தி வந்திருக்கு. மத்த எந்த பத்திரிக்கையும் இத சீரியஸா எடுத்துக்கிட்டதா தெரியலை. அதே மாதிரிதான் மற்ற தியரீஸும். எல்லாமே ஒரு பத்திரிக்கை மட்டும் எடுத்துக்கிட்ட ஆங்கில்."

 

"அப்படிப்பார்த்தா எல்லா பத்திரிக்கைகளும் எடுத்துக்கிட்ட ஆங்கில் பீளமேடு ஜெயராஜ் மட்டும்தானே? அந்த வழக்கோட தொடர்புபடுத்திதான் தொண்ணூறு சதவிகிதம் செய்திகளும் வந்திருக்கு."

 

"அதுக்கான காரணம் போலீசும் பின்னாடி சிபிஐயும் மாயா வழக்கை அந்த திசைல நகர்த்தினதுதான். எல்லா செய்திகளும் போலீஸ் ப்ரெஸ் கான்ஃபரென்ஸ்லயிருந்தும்  உயரதிகாரிகளோட பேட்டிகளிலிருந்தும் கிடைத்த தகவல்கள்தான். எந்தப்  பத்திரிக்கையுமே தாமாக இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் மூலமா கண்டுபிடிச்ச தகவல்களா எதுவுமில்லை."

 

"கெளதம் நாயர் சொன்னபடி ஜெயராஜால கொல்லப்பட்ட மற்ற பெண்களுக்கும் மாயாவுக்கும் குறிப்பிடும்படியான சில வித்தியாசங்கள் இருந்திருக்கு."

 

"அதே நேரத்துல அவளோட உடலுறுப்புகள் ஜெயராஜ் வீட்டிலேயிருந்து கிடைச்சிருக்கறதும் நிரூபிக்கப்பட்டிருக்கு. அதை அவ்வளவு லேசுல நிராகரிச்சிடமுடியாது. மாயாவோட உறவினர்களோட ரத்த மாதிரிகள் எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் மூலமா உறுதிப்படுத்தியிருக்காங்க. அது எல்லாமே ஜோடிக்கப்பட்டாதாயிருக்கறதுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு வாஸ்."

 

"ஏதோ ஒரு வகைல ஜெயராஜுக்கு இதுல தொடர்பிருக்கு. ஆனா அது அவனோட மற்ற விக்டிம்ஸோட இருந்த அதே வகையான தொடர்பு இல்லை."

 

பேச்சு சுவாரஸ்யத்தில் நடந்து நிறைய தூரம் வந்துவிட்டதையும் இருட்டத்துவங்கியிருந்ததையும் உணர்ந்து இருவரும் காட்டேஜை நோக்கித் திரும்பினார்கள். ஐம்பது மீட்டர் மாத்திரமே சாலை நேர்கோட்டில் சென்றது. அதன்பின் இடப்பக்கமோ வலப்பக்கமோ முழுவதுமாய் வளைந்து கண்களிலிருந்து மறைந்தது. குளிரும் இப்பொழுது சற்று அதிகரித்திருந்தது. சாலையோரக்கடையொன்றில் வாசுதேவன் நிர்பந்திக்க அவர்கள் தேநீர் அருந்தினார்கள். அவர்கள் காட்டேஜை நெருங்கியபொழுது வடநாட்டுப் பையன் எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான். மொழிச்சிக்கல் இருந்த காரணத்தால் அவர்களுக்குள் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமலிருந்தது. அவன் கையசைவுகளால் எதுவோ சொல்ல முற்பட்டான். இரவு உங்களைக் குத்த நீளமான கத்தியொன்று வாங்கி வருகிறேன் என்பதுபோலான பொருள் கிடைத்தது அவன் கையசைவிலிருந்து.

 

***

 

இரவு உணவுக்குப்பின் வாசுதேவன் முன்னறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாசாகர் மற்றொரு அறையில் மாயாவைப்பற்றின செய்திகளை வாசித்திகொண்டிருந்தான். 'வித்யா. வித்யா.' என்று உரத்தக்குரலில் பரபரப்பாய் வாசுதேவன் அழைப்பதைக்கேட்டு முன்னறைக்கு விரைந்தான் வித்யாசாகர். வாசுதேவனின் கண்கள் தொலைக்காட்சித் திரையில் நிலைத்திருந்தன.

 

"என்ன வாஸ்?"

 

"வித்யா. இந்த படத்துல இப்போ ஒரு காட்சி வந்தது. அதுல பின்னணில நின்னிட்டிருத்த ஒரு பொண்ணு ஜெயராஜ் வழக்குல ரெண்டாவதா கொல்லப்பட்ட சுபாங்கற பொண்ணு."

 

"சோ?" என்றுவிட்டு குழப்பமாய் அவனைப்பார்த்தான் வித்யாசாகர்.

 

"கெளதம் நாயர் இயங்கின படம் வித்யா." என்றான் வாசுதேவன்.

 

"ஆர் யூ ஷுவர்?"

 

"ரெண்டு வினாடி வந்த காட்சிதான். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போலிருக்கு. பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து முகம் மனசில பதிஞ்சிருந்ததால சட்டுனு புடிகிடைச்சுது. உன்னை கூப்பிட்டு காமிக்கறதுக்குள்ள காட்சி மாறிடுச்சு."

 

"இதே படம் ஆன்லைன்ல இருக்கானு பாரேன்."

 

"ஹும்."

 

வித்யாசாகர் அவனுடைய அறைக்குச்சென்று மீண்டும் செய்தித்துணுக்குகளில் ஆழ்ந்தான். வெளியே ஆழமான நிசப்தம். கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்ததால் அறைகளுக்குள் குளிர் இப்பொழுது அதிகமாயில்லை. இருந்தும் வெளியேயுள்ள குளிரை பார்வையாலேயே உணரமுடிந்தது. வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு அடுப்பங்கரையிலேயே வடநாட்டுப் பையன் படுத்துவிட்டான். பெரிய ஃப்ளாஸ்க்கொன்றில் அவர்களுக்கு தேநீர் போட்டு வைத்திருந்தான். இருக்கையில் அமர்ந்தபடி வசித்துக்கொண்டிருந்த வித்யாசாகருக்கு மெல்ல உறக்கம் தட்டத்துவங்கியது. கையில் பற்றியிருந்த காகிதங்கள் கீழே விழுந்து இறைந்தன. நேரம் பார்க்க இரண்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அடுக்கிவைத்துவிட்டு முன்னறைக்கு வந்தான். 

வாசுதேவன் இருளில் கணினித் திரையைப்பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வித்யாசாகர் அவன் தோளைத்தொட திட்டுகிட்டுதிரும்பினான். அவன் பார்த்துக்கொண்டிருந்த படத்தை சற்று பின்னகர்த்தி ஒரு காட்சியில் திரையை உறையவிட்டுக் காண்பித்தான்.

 

திரையில் பின்வரிசையில் நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு "ஆமா. அவ தான்." என்றான் வித்யாசாகர்.

 

"க்ரெடிட்ஸ்ல பேரும் இருக்கு. சுபா தணிகாசலம்."

 

"ஹும். கெளதம் நாயருக்கே கூட தெரியாத ஒரு கோயின்ஸிடென்ஸா இருக்கும் வாஸ்."

 

"வித்யா. கடந்த ஆறு மணி நேரமா ஆன்லைன்ல கிடைச்ச கெளதம் நாயரோட எல்லா படத்தையும் விரைவா ஓட்டிப்பார்த்தேன். இங்க பாரு." என்றுவிட்டு அவன் எடுத்துவைத்திருந்த ஸ்க்ரீன் ஷாட்ஸை காண்பித்தான்.

 

"கொல்லப்பட்ட ஒன்பது பேர்ல ஆறு பேர் கெளதம் நாயரோட இதுவரை நான் பார்த்த படங்கள்ல சின்ன சின்ன வேஷம் பண்ணிருக்கறவங்க."

 

வித்யாசாகருக்கு அந்தத் தகவலை எப்படி புரிந்துகொள்வதென்று உடனே பிடிபடவில்லை.  வாசுதேவன் வித்யாசாகரை ஏறிட்டுப்பார்த்தான். அவனளவுக்கே வித்யாசாகரும் குழப்பத்திலிருந்தது அவனுடைய முகத்தில் அந்த இருண்ட அறையிலும் தெரிந்தது. ஜன்னலில் யாரோ கல்லெடுத்து அடிப்பதுபோல் ஓசைகேட்டது. எந்தவித முன்னறிவிப்புமின்றி மழையொன்று துவங்கி கனமாக பெய்துகொண்டிருந்தது.