Monday, February 28, 2022

ஐந்தாவது கொலை - Chapter 5

 சுபா மாயாவைத் துரைப்பாக்கத்திலிருந்த ஃப்ளாட்டிற்கு அழைத்து வந்தபொழுது நேரம் இரவு எட்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்து. மதிய நேரம் போலில்லாமல் இப்பொழுது ஆள் நடமாட்டமிருந்தது. நிறைய பேர் இவர்களிருவரையும் வெறித்தபடி கடந்துசென்றார்கள். 

 

“இப்போ தான் ஷூட் முடிஞ்சு வந்திருப்பாரு. இந்த நேரத்துல வந்தாத்தான் நம்ம பேசரது எதுவும் நினைவுல நிக்கும். பொகை விட அரம்பிச்சிட்டா அப்புறம் எல்லம் சித்தன் போக்கு சிவன் போக்குதான். கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்தாலும் ரொம்ப எல்லாம் வரம்பு மீராது. தைரியமா பேசு.”

 

கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு சுபா அமைதியானாள். மாயா தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டாள். கதவை திறந்த அவன் சுபாவையும் மாயாவையும் மாறிமாறி பார்த்துவிட்டு சுபாவின்மேல் பார்வையை நிறுத்தினான்.

 

“சொல்லியிருந்தேனே. மாயா. படத்துல நடிக்க சான்ஸ் தேடிட்டிருக்கா.” என்றாள் சுபா.

 

கதவை அகலமாய் திறந்து பிடித்துக்கொண்டு ‘வாங்க’ என்றான் அவன்.

 

அவர்கள் உள்ளே நுழையவும் சோஃபாவைச் சுட்டிக்காண்பித்துவிட்டு கதவை அடைக்கப்போனான்.

 

"நீங்க பேசிக்கிட்டிருங்க. எனக்கு கொஞ்சம் வெளி வேலையிருக்கு." என்றாள் சுபா. அவள் வெளியேறியதும் கதவை அடைந்தவன் மாயவைப்பார்த்து 'உக்காரு' என்றுவிட்டு எதிர்புறமிருந்த ஒரு அறையில் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்.

 

மாயா அவள் அமர்ந்திருந்த அறையை விழிகளைச் சுழற்றிப்பார்த்தாள். தரை சற்று நேரம் முன்பு துடைக்கப்பட்டதுபோல் ஈரமாயிருந்தது. அவளுக்குப் பின்புறச் சுவற்றிலிருந்த புத்தக அலமாரியில் நிறைய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மாயா எதிர்புறமிருந்த கதவைப் பார்த்துச் சற்று தங்கிவிட்டு எழுந்து புத்தக அலமாரியை நெருங்கினாள். அதிகமும் சினிமா தொடர்பான புத்தகங்கள். கொஞ்சம் உலக இலக்கியம்.

 

அவள் சிட்னி லூமெட்டின் மேக்கிங் மூவீசை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது கதவு திறக்கப்படும் சப்தம்கேட்டு அதிர்ந்தாள். செய்யக்கூடாத எதையோ செய்து மாட்டிக்கொண்டவள்போல ஒருவித வெட்கத்துடனும் அச்சத்துடனும் எதிரே நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவளுடைய காரணமில்லாத கலவரத்தைக்கண்டதும் அவனுடைய உதட்டில் மெலிதான புன்முறுவல் மலர்ந்தது. அதைக்கண்டதும் அவளும் மெல்லப் புன்னகைத்தாள்.

 

"பொரட்டிப் பார்க்கத்தானே எடுத்தே? திருடப்பார்த்தமாதிரி எதுக்கு இப்படி பதட்டப்படறே?" என்றான் அவன் சிரித்தவாறு.

 

"இல்லை. படிச்சிக்கிட்டிருந்தப்போ திடீர்னு கதவு திறந்ததிலே..." என்றாள் அவள் மெல்லிய குரலில். அவன் அதற்குள் சோஃபாவைச் சுற்றிக்கொண்டு அவளருகே வந்திருந்தான். அவள் கையில் பற்றியிருந்த புத்தகத்தைப்பார்த்து 'படிச்சிருக்கியா?' என்றான் அவன்.

 

"இல்லை. ட்வெல்வ் ஆங்கிரி மென் பார்த்திருக்கேன்."

 

அவன் சற்றுநேரம் பார்வையை அவள்மேல் நிறுத்திவைத்தான். மாயா வெட்கப்படுவதையுணர்ந்து அவன் விலகிச்சென்று சோஃபாவில் அமர்ந்துகொண்டான். 'உட்காரு' என்றான் அவளிடம் எதிர்புறமிருந்த இருக்கையைக் காட்டி. மாயா தயங்கியபடி உட்கார்ந்தாள். அவன் அவளைப் பார்த்தவாறு சிக்ரெட்டொன்றை எடுத்து உதட்டிற்குக்கொண்டுபோனான். அவளுடைய முகத்தில் மெலிதான மாறுதலொன்றைக் கவனித்தவன் சிகரெட்டைப் பெட்டியில்போட்டுச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டான். இன்னும் அவளைப் பார்த்தவாறிருந்தான்.

 

"சிட்னி லூமெட் படமெல்லாம் பாக்கறே. என்ன வயசு உனக்கு?" என்றான் அவன்.

 

"இருபத்திமூணு."

 

"எந்த ஊரு?"

 

"கோயம்பத்தூர்."

 

"எத்தனை நாளா சான்ஸ் தேடிக்கிட்டிருக்கே?"

 

"ஒரு ஆறு மாசமா."

 

"எதுக்கு படத்துல நடிக்கணும்?"

 

"சின்ன வயசிலேயிருந்தே சினிமாமேல ஒரு க்ரேஸ். இத்தனை வேறவேற கலைகள் சேர்ந்து ஒரு படைப்பா உருமாறற அந்த மேஜிக்மேல ஒரு பெரிய ஈர்ப்பு. அதைப் பக்கத்துல இருந்து பார்க்கணும்னும் அதுல ஒரு பகமாயிருக்கணும்னும் ஒரு கனவு."

 

சினிமாவைப் பற்றிப் பேசத்துவங்கியதும் அதுவரையிலிருந்த படபடப்பும் வெட்கமுமெல்லாம் விலகி அவள் தெளிவாகவும் கண்களில் கனவுடனும் பேசத்துவங்கினாள். ஜீன் ரென்வா விட்டோரியோ டி சீக்காவைப்பற்றியெல்லாம் ஒரு இருபத்திமூன்று வயதுப்பெண் பேசுவதைக்கேட்டு அவன் வியப்பில் ஆழ்ந்து அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் எதிரே அவன் இருக்கும் உணர்வேயில்லாமல் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். சட்டென்று அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தினாள். மீண்டும் முகத்தில் வெட்கம் படர்ந்தது.

 

அவள் கேட்காமலேயே அவன் தன்னைப்பற்றிச் சொல்லத்தொடங்கினான். படபடப்பாகவும் அதிகம் கோர்வையில்லாமலும் அவன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவாறு மாயா அமர்ந்திருந்தாள். சினிமாவைப் பற்றி அவன் பேசத்துவங்கியதும் அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஐரோப்பிய சினிமாவை எப்படி அதன் வரலாற்றுப் பின்னணியையும் கலாச்சார பின்புலத்தையும் புரிந்துகொண்டு பார்க்கவேண்டுமென்பதை அவன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கொண்டிருந்தபொழுது அவள் சற்றே தலையுயர்த்தி உதடுகள் சிறிது பிரிந்தபடியிருக்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவனுடைய இடவலமாய் அசைந்துகொண்டிருந்த கண்களையும் நீளமான விரல்களையும் பார்த்தபடி பெரும் வியப்பிலும் கனவிலும் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். அவன் பேசுவதைக் கேட்பது ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் அதே பரவசத்தை அவளில் உண்டுபண்ணியது. இடையில் ஒரு முறை தன்னிச்சையாய் சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்தவன் எதுவோ நினைவில் வர மீண்டும் அதை சட்டைப்பைக்குள்ளேயே போட்டான்.

 

தாழ்வாய் பறந்தபடி கடந்து சென்ற ஒரு விமானத்தின் சாப்பிட்டதால் அவன் பேச்சின் கோர்வை அறுபட்டது. நேரம் பார்த்தான். பத்தேமுக்கால் மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. 'நீ சாப்டியா?' என்றான் மாயாவைப் பார்த்து. அவள் இல்லை என்னும்படி தலையசைத்தாள். அவன் 'வா' என்றுவிட்டு எழுந்து கதவைநோக்கி நடடக்கத்துவங்கினான்.

 

பாண்டியன் சாலையை விட்டுவிட்டு சற்று சுற்றிக்கொண்டு ஷோலிங்கநல்லூர் வழியாக அவன் ஈ.சி.ஆர் நோக்கி வண்டியை செலுத்திக்கொண்டிருக்க மாயா அருகில் அமர்ந்திருந்தாள். கடற்கரையிலுருந்த உணவகமொன்றின்முன் வண்டியை நிறுத்தினான். கடலைப் பார்த்தபடி அமர்ந்து அவர்கள் சாப்பிட்டார்கள். சாப்பிட்டுமுடித்ததும் அவன் மீண்டுமொருமுறை 'வா' என்றுவிட்டு நடக்க மாயா தொடர்ந்தாள்.

 

அந்த உணவகத்தைச் சுற்றிக்கொண்டு அவர்கள் கடற்கரையை அடைந்தார்கள். அவன் எதையோ தேடுவதுபோல கடலைப் பார்த்தபடி நின்றிருந்தான். கடல் அதிக இரைச்சலில்லாமலிருந்தது. மாயாவிற்கு ஒரே நேரத்தில் குளிர்வதுபோலவும் வியர்ப்பதுபோலவுமிருந்தது. சிறிது நேரம் அப்படியே மௌனமாய் நின்றிருந்தவன் ஒருமுறை திரும்பி மாயவைப் பார்த்துவிட்டு மீண்டும் கடலைப் பார்த்தவாறு 'ஐ திங்க் ஐ ஹாவ் ஃபாளன் ஃபார் யூ' என்றான்.

 

அவனுடைய படபடப்பையும் வெட்கத்தையும் அவளை கவரவும் மகிழ்விக்கவும் அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் எல்லாம் பார்த்து மாயா ஏறக்குறைய இதை எதிர்பார்த்திருந்தாள். அவன் மறுபடியும் அவள் பக்கம் திரும்பியபொழுது அவள் அவனைப் பார்த்தபடி மெலிதாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

 

அடுத்த நாள் காலை சுபா மாயாவை அழைத்தாள். "என்ன நேத்து சத்தத்தையே காணோம்? ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரா?" என்றாள்.

 

"ஆமாம்." என்றாள் மாயா சிரித்தபடி.


                                                                    *** 


அவன் மூடிய கண்களினூடாக இருண்ட வனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். விழிகளை எல்லா திசைகளிலும் நகர்த்தி அந்த இருள் பரப்பின் முடிவைத் தேடினான். அடர்ந்த கருமைநிறம் முடிவில்லாமல் விரிந்துகிடந்தது. விரித்துப்போட்ட கரும் பட்டுத்துணிபோலிருந்த இருளின் மென்மையை அவனால் உணரமுடிந்தது. பூமியைப்போலவே வானத்திற்கும் மணமிருந்தது. அவன் முகத்தை சற்று மேல்நோக்கி உயர்த்தி அந்த மணத்தால் அவன் நுரையீரலை நிரப்பிக்கொண்டான். இப்பொழுது வலப்புற ஓரத்தில் வெளிச்சப்பொட்டொன்று தோன்றியது. மெல்ல மெல்ல வெளிச்சத்திலும் அளவிலும் அதிகரித்து அது ஒரு நட்சத்திரமானது. அந்த நட்சத்திரம் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலிருந்தது. அவனுடைய உதடுகளும் மெல்ல விரிந்தன. அவனும் நட்சத்திரத்தைப் பார்த்துச் சிரித்தான். சிறிது நேரத்தில் மேலும் பல வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றி நட்சத்திரங்களாயின. அவன் பத்துக்கொண்டிருந்தபொழுதே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தோன்றி இருளப்பரப்பை முழுவதுமாய் நிறைத்தன. அவன் அதுவரையிலும் உணர்ந்திராத ஆழ்ந்த அமைதியையும் மனம் நிரம்பி வழிவதுபோலான சந்தோஷத்தையும் உணர்ந்தான். வானத்தின் இருண்மையே மறந்துபோய்விடும்படியாயிருந்த நட்சத்திரங்களின் காளியாட்டதைக் கண்டவாறு அவன் கண்களையடைத்துப் படுத்திருந்தான். வானத்தின் மணத்துடன் சேர்ந்து இப்பொழுது நட்சத்திரங்களின் மணமும் அவன் நுரையீரலுக்குள் நுழைந்துகொண்டது. அந்த மணம் அவன் நாசித்துவாரங்களைத் தொட்டுச் சிலிர்க்கச்செய்து பின் மெல்ல உள்நுழைவதை அவனால் உணரமுடிந்தது. பல நாட்கள் ஆண்டுகள் யுகங்களென்று அவன் முடிவில்லாத ஆனந்தத்தில் திளைத்துக்கிடந்தான்.

அப்படி அவன் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தபொழுது நட்சத்திரமொன்று உதிர்வதைக் கண்டான். சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்ட பொட்டொன்று விடுபட்டு விழுவதைப்போல அவன் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு கணத்தில் அந்த நட்சத்திரம் வானத்திலிருந்து விடுபட்டு கீழ்நோக்கி நகரத்துவங்கியது. அவன் மனம் பதைபதைத்து. அது ஒரு காட்சிப்பிழையாக இருக்கக்கூடுமென்று நினைத்து மேலும் அப்படி அவன் நட்சத்திரங்கள் நிறைந்த வனத்தைப் பார்த்தபடி படுத்திருந்தபொழுது நட்சத்திரமொன்று உதிர்வதைக் கண்டான். சுவற்றில் ஒட்டிவைக்கப்பட்ட பொட்டொன்று விடுபட்டு விழுவதைப்போல அவன் சிறிதும் எதிர்பாராத ஒரு கணத்தில் அந்த நட்சத்திரம் வான்பரப்பிலிருந்து விடுபட்டு கீழ்நோக்கி நகரத்துவங்கியதுகவனமாக கண்களை இறுகமூடிக்கொண்டு பார்த்தான். ஆனால் தெளிவாக நட்சத்திரம் கீழ்நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரிந்தது. அதன் வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டிருந்தது. அவன் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே அவனுடைய மூடிய கண்களுக்கு முன்பாகவே அந்தத் துயரம் நடந்து முடிந்தது. வானத்தின் சிறிய பரப்பொன்று வெறுமையானது. பல யுகங்களாய் அவனுக்கும் வானத்துக்கும் பரிச்சயமான எப்பொழுதும் சிரித்தபடியிருந்த நட்சத்திரமொன்று இப்பொழுது இருக்கவில்லை. அவன் கரங்களை உயர்த்தி தடுக்க முயன்றும் அவனால் அதன் வீழ்ச்சியை தடுக்க முடியாமல் போனது அவனை முடிவில்லாத வேதனையில் தள்ளியது. அவனுடைய முகத்தில் அந்த வேதனை தோன்றி மெல்லப் படர்ந்தது. இருள் பரப்பில் தோன்றிய முதல் நட்சத்திரம் அது என்பதை உணர்நதவன் கடுமையான சோர்வுற்றான். இப்பொழுது அந்த முதல் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மேலும் பல நட்சத்திரங்கள் வானிலிருந்து கீழ்நோக்கி வீழ்ந்துகொண்டிருந்தன. அவன் செய்வதறியாமல் ஆற்றாமையில் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


சிம்ஹத்தின் மேல் இடக்காலின்மேல் வலங்காலிட்டு அமர்ந்திருந்த தேவியிடம் அவன் வானிலிருந்து நட்சத்திரங்கள் உதிர்வதுபற்றி முறையிட்டான். உடலிலிருந்த தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும் விதமாய் கண்ணீர் விட்டு நட்சத்திரங்களை காக்கும்படி தேவியிடம் மன்றாடினான். உலகாளும் அம்மன் அவனிடம் கருணைகொண்டாள். நட்சத்திரங்களைக் காக்க அவனுக்கு ஓர் வழி சொல்லித்தந்தாள்.


"ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் ஒன்பது சுமங்கலிப் பெண்களைக் கொன்று அவர்களுடைய மாமிசத்தை எனக்குப் படைத்து அதை ப்ரசாதமாய் உட்கொண்டால் வானில் நட்சத்திரங்கள் உதிர்வது நிற்கும்."


அவன் கண்ணீர் விடுவதை நிறுத்தினான். முகம் எதிரேயிருந்து ஒளியூட்டப்பட்டதுபோல பிரகாசமானது. உடல் சட்டென லேசானதுபோலிருந்தது. எத்தனையோ வருடங்களாய் தலையால் முட்டிக்கொண்டிருந்த சுவரொன்று திடீரென இடிந்து வீழ்ந்து அவன் கண்முன்னால் நீண்ட நிலப்பரப்பும் நீல நிற வானமும் விரிந்தது. அவன் தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். தலையை இடவலமாய் அசைத்தபடி நிறையநேரம் அப்படியே படுத்துக்கிடந்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து நின்றான்.


                                                                    ***


அடுத்த ஒரு வாரத்திற்கு குறிப்பிடும்படியாய் எதுவும் நடக்கவில்லை. சுவரொன்றில் முட்டிக்கொண்டதைப்போல விசாரணை ஓரிடத்தில் நின்றுவிட்டது. வித்யாசாகர் மாயாவை மறந்து பீளமேடு ஜெயராஜ் வழக்கு குறித்த செய்திகளையும் ஆவணங்களையும் படிப்பதில் மூழ்கிப்போனான். வாசுதேவனுக்கு பீளமேடு ஜெயராஜ் வழக்கில் ஒரு திரைப்படத்துறை தொடர்பு இருப்பதாகவும் ஏதோ ஒரு வகையில் அந்தத் தொடர்பை மாயாவின் கொலையால் விளக்க முடியுமென்றும் தோன்றியது. அவன் அந்தத் திசையிலேயே அதிகம் சிந்தித்துவந்தான். புதன்கிழமையின் மாலை. வித்யாகரும் வாசுதேவனும் சிம்ஸ் பார்க்கில் அமரிந்திருந்தார்கள்.


"வாஸ்." எதையோ ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்த வித்யாசாகர் நினைவுகளிலிருந்து விடுபட்டு வாசுதேவனின் பக்கம் திரும்பி அவனை அழைத்தான்.


"ஹும்."


"வாஸ். ஒரு வாரமா பீளமேடு ஜெயராஜால கொல்லப்பட்ட பெண்களோட தகவல்களையெல்லாம் அலசிக்கிட்டிருந்தேன். ஐ ஃபௌண்ட சம்திங் ஸ்ட்ரேன்ஜ்."


வாசுதேவன் அவனை கேள்விக்குறியுடன் பார்த்தான்.

 

"போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட்ஸ்ல விக்டிம்ஸ் கொல்லப்பட்டிருக்கக்கூடிய நேரமும் தேதியும் கிடைச்சுது. எல்லாருமே வெள்ளிக்கிழமைல கொல்லப்பட்டிருக்காங்க."

 

"ஸோ?"

 

"கொல்லப்பட்ட எல்லாருமே பெண்கள். அதுவும் மாயாவை தவிர்த்திட்டுப் பார்த்தா திருமணமான பெண்கள்."

 

வாசுதேவன் வித்யாசாகர் என்ன சொல்லவருகிறான் என்பது புரியாமல் குழப்பத்துடனேயே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாசாகருமேகூட அதிகம் தெளிவில்லாமல் உரத்து சிந்திப்பதுபோலவே பேசிக்கொண்டிருந்தான்.

 

"அதுவுமில்லாம இதுல மனித மாமிசம் அறுத்தெடுக்கப்பட்டு தின்னப்பட்டிருக்கக்கூடிய ஒரு கோணமுமிருக்கு. கேன் யூ சீ சம்திங்?" என்றான் வாசுதேவனிடம். அவன் இல்லை என்பதுபோல தலையசைத்தான். இப்பொழுது அவனுடைய ஆர்வம் கூடியிருந்தது.

 

"வெள்ளிக்கிழமை. சுமங்கலிகள். மனிதமாமிசம். சீ?"

 

"..."

 

"இது ஏதோ வழிபாட்டுக்காக செய்யப்பட்ட கொலைகள் மாதிரி படலை? நரபலி மாதிரி. எதுவோ வேண்டுதல் நிறைவேற செய்தது மாதிரி?"

 

"இந்த மூணு அம்சங்களை மட்டும் வச்சு அப்படி ஒரு முடிவுக்கு வந்திட முடியுமா?"

 

"வெறுமனே மனித மாமிசத்துக்காக செய்யப்பட்ட கொலைகளாயிருந்தா அதுல இப்படி ஒரு ஒழுங்கு இருந்திருக்காது வாஸ். இதுல விக்டிம்ஸோட தேர்வுலயிருந்து கொல்லப்பட்ட நாள் தேதினு எல்லாத்துலயும் ஒரு ஒழுங்கு இருக்கிற மாதிரி படுது. எந்தவித படபடப்புமில்லாம நிதானமா ஒருவித தெளிவோடயும் அமைதியோடயும் செய்யப்பட்ட மாதிரியிருக்கு."

 

"எல்லா சைக்கோ கில்லிங்ஸ்லயும் அப்படித்தானே வித்யா? ஏதோ ஒருவகை பாட்டர்னும் ஒரு சிக்னேச்சரும் இருக்குமே?"

 

வித்யாசாகர் இந்த எளிமையான விளக்கத்தை யோசித்திராதவன்போல மெலிதாய் திடுக்கிட்டான். மீண்டும் நினைவுகளில் ஆழிந்துபோனான். எதிரில் தெரிந்த நீல நிற மலையை வெறித்தபடியிருந்தான். சற்று நேரத்திற்குப்பின் கொஞ்சம் தெளிவுற்றவனாய் வாசுதேவனை ஏறிட்டான்.

 

"நான் சொல்லறது வேற வாஸ். விக்டிம் ப்ரொஃபைலிங் பத்தி மட்டுமே சொல்லலை நான். ஒரு குறிப்பிட்ட நாள்ல தொடங்கி ஒரு இலக்கை அடைஞ்சதும் கொலைகள் நிறுத்தப்பட்டிருக்கு. அதுக்கப்புறம் அதுமாதிரி கொலைகள் எதுவும் நடக்கலை. கொலைகளுக்கு நடுவுல இருந்த இடைவெளிகூட சீராயிருந்திருக்கு. எல்லாமே ஒரு வழிபாட்டு ஒழுங்கோட செய்யப்பட்ட மாதிரி தெரியுது."

 

"கொலைகள் நின்னதுக்கான காரணம் ஜெயராஜோட தற்கொலைதானே?"

 

"ஹும். ஏதோ ஒரு கணக்கு முடிஞ்சதும் கொலைகளும் நின்னிருக்கு. ஜெயராஜும் தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கான்."

 

"என்ன கணக்கு?"

 

"மொத்த கொலைகளாயிருக்கலாம்."

 

"ஜெயராஜோட மனைவியையும் அவளோட தங்கையையும் சேர்த்து மொத்தமா பத்துபேர் கொல்லப்பட்டிருக்காங்க."

 

"ஹும்."

 

"நீ சொல்லற வெள்ளிக்கிழமை சுமங்கலி நரபலி தியரிக்கு பத்தவிட ஒன்பது தானேதானே சரியா வரும்?"

 

வித்யாசாகர் மீண்டுமொருமுறை திடுக்கிட்டான்.