அடுத்த ஒரு வாரத்தில் வித்யாசாகரும் வாசுதேவனும் சென்னைக்குச் சென்று அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவயானவற்றையெல்லாம் எடுத்துவந்தார்கள். கெளதம் நாயர் ஏற்பாடு செய்திருந்த ஆள் சிம்ஸ் பார்க்கிலிருந்து நடந்துபோகக்கூடிய தூரத்தில் அவர்கள் தங்குவதற்கு கட்டேஜொன்றை முடிவுசெய்து கொடுத்தான். சுற்றிலும் தோட்டத்துடன் ஐந்தாறு பெரிய அறைகளுடனிருந்தது காட்டேஜ். எல்லா ஜன்னல்களிலிருந்தும் தொலைவில் நீல நிற மலையும் அதன் சரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளும் தெரிந்தன. சமையலுக்கும் மற்ற உதவிகளுக்குமாய் ஒரு வடநாட்டுப் பையனையும் அமர்த்தியிருந்தான்.
வாசுதேவன் ஒரு பெரிய அறையில் ஆங்கில துப்பறியும்
படங்களில் வருவதுபோல் சுவர்களில் சார்ட் பேப்பர் ஒட்டி பீளமேடு ஜெயராஜ் வழக்கு
தொடர்பான விவரங்களை அதில் எழுதிவைத்திருந்தான்.
ஒரு வெள்ளிக்கிழமையின் காலை வடநாட்டுப் பையன்
செய்துகொடுத்த ப்ரெட் டோஸ்டையும் சூடான தேநீரையும் சாப்ப்பிட்டுவிட்டு இருவரும் சோம்பேறித்தனமாய்
எழுந்துவரும் சூரியனின் இளஞ்சூட்டில் வெளியே புல்வெளிப்பரப்பில் இடப்பட்டிருந்த
இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.
எதிரே தெரிந்த மலைமுகட்டைப் பார்த்தவாறு ஆழ்ந்த
சிந்தனையிலிருந்த வித்யாசாகரிடம்
"எங்கே தொடங்கறது வித்யா? என்றான் வாசுதேவன்.
"ரெண்டு விதமா பார்க்கலாம் வாஸ். ஒண்ணு பீளமேடு
ஜெயராஜ் வழக்குலயிருந்து தொடங்கலாம். அதை தொடர்ந்து வந்து அதுல ஏதாவது ஒரு வகைல
இயல்பா மாயாவோட கொலை வந்து இணையுதான்னு பார்க்கலாம். இல்லை அந்த வழக்கை முழுவதுமா
மறந்திட்டு மாயாவோட கொலையை ஒரு தனிச்சம்பவமா பார்க்கலாம். அப்படி பார்க்கும்போது
ஒண்ணு தானாவே அது ஜெயராஜ் வழக்கிலபோய் முட்டி நிக்கறதுக்கான வாய்ப்பிருக்கு.
இல்லைனா வேற ஏதாவது புதுசா தெரியவரலாம்."
"போலீசும் சிபிஐயும் முதலாவது முறைலேதான்
அணுகியிருப்பாங்க. ஜெயராஜ் வழக்கோட கொடூரமும் அதன் விளைவா அதுக்குக் கிடைத்த
மீடியா கவனமும் விசாரணையை அதை மையமா வாசிச்சுதான் நகர்த்தியிருக்கும். அதனால நீ
சொல்லறபடி மாயாவோட கொலையை ஜெயராஜ் வழக்கைத் தவிர்த்திட்டு ஒரு தனிச்சம்பவமா
பார்க்கறதுதான் சரியாய் வரும்னு தோணுது."
"ஹும். கெளதம் நாயர் கொடுத்திருக்கிற
மெட்டீரியல்ஸ்ல மாயா தொடர்பானவற்றையெல்லாம் மொதல்ல தனியா தொகுத்துக்கலாம்.
அதுலேயிருந்து அவளோட வாழக்கையைப்பத்தின ஒரு உருவம் கிடைக்குதான்னு
பார்ப்போம்."
மதியம் இரண்டு மணி வரை அவர்கள் மாயா தொடர்பாய்
நாளிதழ்களிலும் வாரயிதழ்களிலும் ஏழாண்டுகளுக்குமுன் வந்திருந்த அனைத்துச்
செய்திகளையும் படிப்பதில் ஆழ்ந்திருந்தார்கள். மதிய உணவிற்கான அழைப்பு அவர்கள்
கவனத்தைக் கலைத்து அவர்களை நிஜத்திற்கு மீட்டுவந்தது. வாசுதேவன் எழுந்து
சோம்பல்முறித்தான்.
"ஒரு நிகழ்கால சம்பவத்தை பத்திரிகைல
படிக்கும்போது தெரியறதில்லை வித்யா. இப்படி விலகி நிண்ணு பார்க்கும்போதுதான்
எவ்வளவு முன்னுக்குப்பின் முரணான உண்மையோட எந்தத்தொடர்புமில்லாத விஷயங்கள்
செய்தியா தரப்படுதுனு புரியுது." என்றான். வித்யாசாகரும் அவன்
படித்துக்கொண்டிருந்த செய்தித்துணுக்கை முடித்துவிட்டு எழுந்தான்.
வடநாட்டுப் பையன் நேர்த்தியாய்ச் சமைத்திருந்த
தென்னிந்திய உணவை இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டபின் வாசுதேவன்
சிறிதுநேரம் உறங்கினான். வித்யாசாகர் வீட்டிற்குவெளியே புல்வெளிப்பரப்பில்
அமர்ந்து தொலைவில் தெரிந்த மலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். வானம் மேகங்களில்லாமல்
சலவைசெய்து காயப்போட்ட நீலநிறச்சேலைபோலிருந்தது. சூரியனின் ஒளிபட்டு மலைகளின்
முகடுகள் துளங்கிக்கொண்டிருந்தன.
வாசுதேவன் எழுந்துகொண்டதும் மீண்டும் இருவரும்
மாயா குறித்த செய்திகளில் மூழ்கினார்கள். வாசித்தவற்றிலிருந்து முரணான
விஷயங்களையும் திரும்பச்சொல்லப்பட்டவற்றையும் நம்பகத்தன்மையற்ற செய்திகளையும்
களைந்தபின் மெல்ல மெல்ல மாயாவைக்குறித்த சித்திரமொன்று அவர்கள் மனதில்
உருவம்பெறத்தொடங்கியது. மாலையில் தேநீர் அருந்திவிட்டு குளிர் மெல்ல
இறங்கிக்கொண்டிருந்த குன்னூர் தெருக்களில் நடந்துகொண்டு இருவரும் படித்தவற்றை தொகுத்துக்கொண்டார்கள்.
"கெளதம் நாயர் சொன்னதுபோல் இது ஒரு கேரக்டர்
அசாசினேஷன்தான் வித்யா. எத்தனை விதமான அபத்தமான செய்திகள். எந்த ஆதரமுமில்லாம
ஜோடிக்கப்பட்ட ஸ்பெகுலேஷன்ஸ். வெளியிட்ட பத்திரிக்கையேகூட அதுகுறித்து எந்தவிதமான
ஃபாலோஅப்பும் செய்ய முயற்சிக்காத அளவுக்கு கீழ்த்தரமான சென்சேஷனலிஸ்ட்டிக்
புல்ஷிட்."
"ஹும். பொண்ணு அழகாயிருந்திருக்கா. சின்னவயசு
வேற. அது மக்கள்கிட்ட ஒரு விதமான ஆர்வத்தையும் கிளர்ச்சியையும்
உண்டுபண்ணியிருக்கும். அதுக்கு பத்திரிக்கைகள் தீனி போட்டிருக்கு. ஒரு கட்டத்துல
எல்லாருக்கும் அலுத்துப்போயிருக்கும். அப்படியே அடுத்த செய்திக்குத்
தாவியிருப்பாங்க."
"இதுல ஏதாவது நாம கவனமா பார்க்கவேண்டியது இருக்கா?"
"இதுல சொல்லியிருக்கற பல விஷயங்களும்
தொடர்குற்றங்களுக்குத்தான் பொருந்தும். தனிச்சம்பவங்களுக்கில்லை. இதுல ஏதாவது
ஒண்ணு மாயாவோட கொலைக்கான காரணமாயிருந்தா அதுக்கு அடுத்துவந்த காலகட்டத்துல அதே
மாதிரியான கொலைகள் நடந்திருக்கும். ஆனா அப்படி எதுவும் நடந்ததா தெரியலை."
"அந்த அரசியல் பிரமுகர்?"
"மாயாவோட தொலைபேசிலயிருந்து அவரோட பிஏவை
அழைத்திருக்கறதுக்கான ஆதாரம் கிடைச்சிருக்கு. அதனடிப்படைல புனையப்பட்ட கதையாயிருக்கத்தான்
வாய்ப்பு அதிகம். அவரோட தரப்பிலேயிருந்து அது ஏதோ கம்யூனிட்டி சர்டிபிகேட்
தொடர்பான அழைப்புதான்னு விளக்கம் கொடுத்திருக்காங்க. எதிர்க்கட்சி சார்புகொண்ட ஒரு
பத்திரிக்கைல மட்டும்தான் இந்த செய்தி வந்திருக்கு. மத்த எந்த பத்திரிக்கையும் இத
சீரியஸா எடுத்துக்கிட்டதா தெரியலை. அதே மாதிரிதான் மற்ற தியரீஸும். எல்லாமே ஒரு
பத்திரிக்கை மட்டும் எடுத்துக்கிட்ட ஆங்கில்."
"அப்படிப்பார்த்தா எல்லா பத்திரிக்கைகளும்
எடுத்துக்கிட்ட ஆங்கில் பீளமேடு ஜெயராஜ் மட்டும்தானே? அந்த வழக்கோட தொடர்புபடுத்திதான் தொண்ணூறு சதவிகிதம் செய்திகளும்
வந்திருக்கு."
"அதுக்கான காரணம் போலீசும் பின்னாடி சிபிஐயும்
மாயா வழக்கை அந்த திசைல நகர்த்தினதுதான். எல்லா செய்திகளும் போலீஸ் ப்ரெஸ்
கான்ஃபரென்ஸ்லயிருந்தும் உயரதிகாரிகளோட
பேட்டிகளிலிருந்தும் கிடைத்த தகவல்கள்தான். எந்தப் பத்திரிக்கையுமே தாமாக இன்வெஸ்டிகேட்டிவ்
ஜர்னலிசம் மூலமா கண்டுபிடிச்ச தகவல்களா எதுவுமில்லை."
"கெளதம் நாயர் சொன்னபடி ஜெயராஜால கொல்லப்பட்ட
மற்ற பெண்களுக்கும் மாயாவுக்கும் குறிப்பிடும்படியான சில வித்தியாசங்கள்
இருந்திருக்கு."
"அதே நேரத்துல அவளோட உடலுறுப்புகள் ஜெயராஜ்
வீட்டிலேயிருந்து கிடைச்சிருக்கறதும் நிரூபிக்கப்பட்டிருக்கு. அதை அவ்வளவு லேசுல
நிராகரிச்சிடமுடியாது. மாயாவோட உறவினர்களோட ரத்த மாதிரிகள் எடுத்து டிஎன்ஏ டெஸ்ட்
மூலமா உறுதிப்படுத்தியிருக்காங்க. அது எல்லாமே ஜோடிக்கப்பட்டாதாயிருக்கறதுக்கான
வாய்ப்பு மிக மிகக் குறைவு வாஸ்."
"ஏதோ ஒரு வகைல ஜெயராஜுக்கு இதுல தொடர்பிருக்கு.
ஆனா அது அவனோட மற்ற விக்டிம்ஸோட இருந்த அதே வகையான தொடர்பு இல்லை."
பேச்சு சுவாரஸ்யத்தில் நடந்து நிறைய தூரம்
வந்துவிட்டதையும் இருட்டத்துவங்கியிருந்ததையும் உணர்ந்து இருவரும் காட்டேஜை
நோக்கித் திரும்பினார்கள். ஐம்பது மீட்டர் மாத்திரமே சாலை நேர்கோட்டில் சென்றது.
அதன்பின் இடப்பக்கமோ வலப்பக்கமோ முழுவதுமாய் வளைந்து கண்களிலிருந்து மறைந்தது.
குளிரும் இப்பொழுது சற்று அதிகரித்திருந்தது. சாலையோரக்கடையொன்றில் வாசுதேவன்
நிர்பந்திக்க அவர்கள் தேநீர் அருந்தினார்கள். அவர்கள் காட்டேஜை நெருங்கியபொழுது
வடநாட்டுப் பையன் எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான். மொழிச்சிக்கல் இருந்த
காரணத்தால் அவர்களுக்குள் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமலிருந்தது. அவன்
கையசைவுகளால் எதுவோ சொல்ல முற்பட்டான். இரவு உங்களைக் குத்த நீளமான கத்தியொன்று
வாங்கி வருகிறேன் என்பதுபோலான பொருள் கிடைத்தது அவன் கையசைவிலிருந்து.
***
இரவு உணவுக்குப்பின் வாசுதேவன் முன்னறையில்
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். வித்யாசாகர் மற்றொரு அறையில்
மாயாவைப்பற்றின செய்திகளை வாசித்திகொண்டிருந்தான். 'வித்யா. வித்யா.' என்று உரத்தக்குரலில் பரபரப்பாய் வாசுதேவன்
அழைப்பதைக்கேட்டு முன்னறைக்கு விரைந்தான் வித்யாசாகர். வாசுதேவனின் கண்கள்
தொலைக்காட்சித் திரையில் நிலைத்திருந்தன.
"என்ன வாஸ்?"
"வித்யா. இந்த படத்துல இப்போ ஒரு காட்சி வந்தது.
அதுல பின்னணில நின்னிட்டிருத்த ஒரு பொண்ணு ஜெயராஜ் வழக்குல ரெண்டாவதா கொல்லப்பட்ட
சுபாங்கற பொண்ணு."
"சோ?" என்றுவிட்டு குழப்பமாய்
அவனைப்பார்த்தான் வித்யாசாகர்.
"கெளதம் நாயர் இயங்கின படம் வித்யா."
என்றான் வாசுதேவன்.
"ஆர் யூ ஷுவர்?"
"ரெண்டு வினாடி வந்த காட்சிதான். ஜுனியர்
ஆர்ட்டிஸ்ட் போலிருக்கு. பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து முகம் மனசில
பதிஞ்சிருந்ததால சட்டுனு புடிகிடைச்சுது. உன்னை கூப்பிட்டு காமிக்கறதுக்குள்ள
காட்சி மாறிடுச்சு."
"இதே படம் ஆன்லைன்ல இருக்கானு பாரேன்."
"ஹும்."
வித்யாசாகர் அவனுடைய அறைக்குச்சென்று மீண்டும் செய்தித்துணுக்குகளில் ஆழ்ந்தான். வெளியே ஆழமான நிசப்தம். கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்ததால் அறைகளுக்குள் குளிர் இப்பொழுது அதிகமாயில்லை. இருந்தும் வெளியேயுள்ள குளிரை பார்வையாலேயே உணரமுடிந்தது. வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு அடுப்பங்கரையிலேயே வடநாட்டுப் பையன் படுத்துவிட்டான். பெரிய ஃப்ளாஸ்க்கொன்றில் அவர்களுக்கு தேநீர் போட்டு வைத்திருந்தான். இருக்கையில் அமர்ந்தபடி வசித்துக்கொண்டிருந்த வித்யாசாகருக்கு மெல்ல உறக்கம் தட்டத்துவங்கியது. கையில் பற்றியிருந்த காகிதங்கள் கீழே விழுந்து இறைந்தன. நேரம் பார்க்க இரண்டு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அடுக்கிவைத்துவிட்டு முன்னறைக்கு வந்தான்.
வாசுதேவன் இருளில் கணினித் திரையைப்பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வித்யாசாகர் அவன்
தோளைத்தொட திட்டுகிட்டுதிரும்பினான். அவன் பார்த்துக்கொண்டிருந்த படத்தை சற்று
பின்னகர்த்தி ஒரு காட்சியில் திரையை உறையவிட்டுக் காண்பித்தான்.
திரையில் பின்வரிசையில் நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு "ஆமா. அவ தான்." என்றான் வித்யாசாகர்.
"க்ரெடிட்ஸ்ல பேரும் இருக்கு. சுபா
தணிகாசலம்."
"ஹும். கெளதம் நாயருக்கே கூட தெரியாத ஒரு
கோயின்ஸிடென்ஸா இருக்கும் வாஸ்."
"வித்யா. கடந்த ஆறு மணி நேரமா ஆன்லைன்ல கிடைச்ச
கெளதம் நாயரோட எல்லா படத்தையும் விரைவா ஓட்டிப்பார்த்தேன். இங்க பாரு."
என்றுவிட்டு அவன் எடுத்துவைத்திருந்த ஸ்க்ரீன் ஷாட்ஸை காண்பித்தான்.
"கொல்லப்பட்ட ஒன்பது பேர்ல ஆறு பேர் கெளதம் நாயரோட இதுவரை நான் பார்த்த படங்கள்ல சின்ன சின்ன வேஷம் பண்ணிருக்கறவங்க."
வித்யாசாகருக்கு அந்தத் தகவலை எப்படி புரிந்துகொள்வதென்று உடனே பிடிபடவில்லை. வாசுதேவன் வித்யாசாகரை ஏறிட்டுப்பார்த்தான். அவனளவுக்கே வித்யாசாகரும் குழப்பத்திலிருந்தது அவனுடைய முகத்தில் அந்த இருண்ட அறையிலும் தெரிந்தது. ஜன்னலில் யாரோ கல்லெடுத்து அடிப்பதுபோல் ஓசைகேட்டது. எந்தவித முன்னறிவிப்புமின்றி மழையொன்று துவங்கி கனமாக பெய்துகொண்டிருந்தது.