அந்தச் சிறிய அறைக்குள்ளிருந்த எதுவுமே
கண்ணுக்குத் தெரியாதபடி அந்த அறையில் கண்கூசச்செய்யும் ஒளி நிறைந்திருந்தது. அவன்
அந்த அறையின் ஒரு ஓரத்தில் சுவற்றோடுஒட்டிப் படுத்திருந்தான். கால்மூட்டுகளை
நெஞ்சோடு அணைத்து இறுகப்பற்றியிருந்தான். கண்களை மூடியிருந்தும் அந்த ஒளி அவனுடைய
இமைகளைத்துளைத்துக்கொண்டு கண்களுக்குளே ஊடுறுவுவதுபோல் உணர்ந்தான். இமைகளே
இல்லாததுபோலிருந்தது. வெண்மையான அந்த ஒளி மெல்ல நிறம்மாறி சிகப்புவண்ண ஒளியானது.
கண்களைத்திறக்காமலேயே அவனால் அந்த வண்ணமாறுதலை உணரமுடிந்தது. செந்நிற ஒளிக்கடலில்
இப்பொழுது வெள்ளைக் குமிழ்கள் தோன்றின. தோன்றிய குமிழ்கள் இணைந்து சதுரங்களும்
வட்டங்களும் செவ்வகங்களும் முக்கோணங்களுமாயின. பின் அந்த வடிவங்களெல்லாம் காற்றால்
அலைக்கழிக்கப்பட்டதுபோல் சுழன்று சுழன்று ஒளிக்கடலில் மிதந்தன. சிறிது நேரத்தில்
இல்லாத அந்தக் காற்று சட்டென்று ஓய்ந்ததுபோல எல்லா வடிவங்களும் உறைந்துபோய்
அந்தரத்தில் நின்றன. அவன் அடுத்து என்ன நடக்கபோகிறதென்பதை அறிந்திருந்தான். அதை
ஒரே நேரத்தில் அஞ்சுவதுபோலவும் எதிர்நோக்குவதுபோலவும் மாறியது அவன் முகம்.
இப்பொழுது தொலைவில் மிகத்தொலைவில் எங்கோயிருந்து அவனுக்கு மட்டும் ஒரு ஒலி
கேட்டது. இரண்டு பித்தளைக்கிணங்களை முட்டவைத்ததுபோலான ஒலி. அந்த ஒலி அவன்
படுத்திருந்த தரைக்குகீழேயிருந்து வருவதுபோல அதைக்கேட்க தரையோடு காதை மெல்ல அழுத்தினான். பத்து வினாடிகளுக்கு
ஒன்றென்று சீராகவும் மிகமென்மையாகவும் ஒலித்ததை கேட்டவாறு அவன் படுத்திருந்தான்.
சிவந்த ஒளிக்கடலில் தோன்றிய வடிவங்களும் அந்தரத்தில் நின்றபடி அவனுடன் அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாய் தோன்றியது அவனுக்கு. பத்துவிநாடிகளுக்கு ஒருமுறை ஒலித்துக்கொண்டிருந்த ஒலி இப்பொழுது இடைவெளிகுறைந்து ஒலிக்கத்தொடங்கியது. ஒன்பது எட்டு ஏழு ஆறு ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மண்டையைப் பிளக்கச்செய்யும் ஒலியாய் அது மாறுமென்பதையும் அவன் அறிந்திருந்தான். இருந்தும் அவனுடைய வலக்காதை பலமாக தரையில் அழுத்தினான். ஒலிகளுக்கு இடையேயான இடைவெளி இப்பொழுது மிகமிகக் குறைந்திருந்தது. ஒரு வினாடிக்கு நூறு முறையென ஒலித்தது. அந்த நூறையும் அவனால் துல்லியமாய் கேட்கமுடிந்தது. ஒலி கனத்து கனத்து வந்து முடிவாய் ஒலியும் ஒரு வடிவமாய் மாறியது. வடிவமாய் மாறிய ஒலி ஒரு நெற்றிப்பொட்டைப்போலிருந்தது.
சிவந்த ஒளிபரப்பில் அசைவற்று நின்றிருந்த
வடிவங்கள் இப்பொழுது மெல்ல அசையத்தொடங்கின. மேலும் கீழுமாய் இடவலமாய் நகர்ந்தன.
எந்த வடிவமும் இன்னொரு வடிவத்தை தொட்டுவிடாதபடி மிகக்கவனமாக நகர்ந்தன. நேரம்
கடக்கக்கடக்க நகர்தலின் வேகம் அதிகரித்துவந்தது. ஒரே விதமாய் நகர்ந்துகொண்டிருந்த
வடிவங்கள் இப்பொழுது ஒழுங்கற்று நகர்ந்தன. ஒன்றோடொன்று முட்டிக்கொண்டன. வினாடிகள்
நிமிடங்கள் மணிகள் நாட்கள் என நீண்டது அந்த நகர்தல். அவன் கண்களை இறுகமூடி அதைப்
பார்த்துக்கொண்டிருந்தான். ஒளிவடிவங்களின் காலத்திற்கு வெளியேயுள்ள ஒரு பரப்பில்
முடிவற்றதாய் நடந்துகொண்டிருந்த ஒளிவடிவங்களின் நடனம் சட்டென்று நின்றது.
எல்லாவற்றையும் இருள் தின்றுவிட்டிருந்தது. தரைப்பரப்பிற்குக்கீழே
மிகமிக ஆழத்தில் ஒளியும் ஒலியும் நுழையமுடியாத ஒரு இடத்தில இப்பொழுது இருந்தான்
அவன். பல நாட்கள் புலன்களின் சலனமேயில்லாத வெளியொன்றில் காத்துக்கிடந்தான். மிக மெலிதாய்
மீண்டும் பித்தளைக்கிணங்கள் முட்டிக்கொள்ளும் ஒலி எழதுவங்கியபொழுது புளிப்பான
எதையோ கடித்துவிட்டதுபோல் அவனுடைய முகம் இறுகியது. ஒலிகளுக்கிடையேயான இடைவெளி
குறைந்துகொண்டும் சப்தம் கூடிக்கொண்டும்வர சிவந்த ஒளிப்பரப்பில்
வெள்ளைநிறக்கோடுகளாலான ஒரு பெண்ணுருவம் கொஞ்சம் கொஞ்சமாக உருவம்பெறத்துவங்கியது.
சிம்ஹத்தில் இடக்காலின்மேல் வலங்காலிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணுருவம். நான்கு
கரங்களில் மூன்றில் ஆயுதங்களைப்பற்றி ஒன்றை செந்நிற உள்ளங்கை தெரியும்படியாய்
வைத்திருக்கும் பெண்ணுருவம். அவன் மார்புக்கூட்டின் எலும்புகள் நொறுங்கிவிடும்படியாய்
கால்மூட்டுகளை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான். அந்தப் பெண்ணுருவுவம் இரண்டாய்
நான்காய் பதினாறாய்ப் பல்கி அவனைச் சூழ்ந்தது. முதலில் அவன் நிலையாயிருந்து
உருவங்கள் சுழலுவதுபோலவும் பின் உருவங்கள் நினலயிருந்து அவன் சுழலுவதுபோலவும்
உணர்ந்தான். வினாடிகள் நிமிடங்கள் மணிகள் நாட்கள் இப்படிக்கழிந்தபின் மீண்டும்
சட்டென்று ஒளியும் ஒலியுமற்ற வெளியொன்றில் வீசப்பட்டான். பல ஆண்டுகள் அங்கேயே
படுத்திருந்தான்.
***
இரவு அதற்குப்பின் வித்யாசாகரும் வாசுதேவனும்
அதிகம் பேசிக்கொள்ளவில்லை. வாசுதேவன் படுத்ததும் உறங்கிவிட்டான். வித்யாசாகர்
நிறைய நேரம் விழித்திருந்தான். முடிவாக அவனுக்கு உறக்கம் தட்டியபொழுது மெல்ல
விடிந்துகொண்டிருந்தது. மதியம் பனிரெண்டு மணியைக் கடந்தபின் தான் வித்யாசாகர்
எழுந்தான். வாசுதேவன் மடிக்கணினியில் ஆழிந்திருந்தான். மதிய உணவை முடித்துக்கொண்டு
வீட்டிற்குவெளியே புல்வெளிப்பரப்பில் அமர்ந்துகொண்டார்கள். முன்தினம் இரவு பெய்த
மழைக்குப்பின் குளிர் சற்றுக் குறைந்திருந்தது.
"இது என்ன வித்யா கதையே
மொத்தமா கெளதம் நாயரை சுத்தி திரும்பிடுச்சு?" என்றான் வாசுதேவன்.
"முதல்ல எனக்கும் குழப்பமாத்தான்
இருந்துது வாஸ். ஆனா யோசிச்சுப் பார்த்ததுல எதுவோ ஒரு வகைல இது எதிர்பார்ததுதான்னு
தோணிச்சு. சொல்லப்போனா தனக்கு எந்தவித தொடர்புமில்லாத ஒரு வழக்குல கெளதம் நாயர்
இவ்வளவு ஆர்வம் கட்டியிருந்தாருன்னாதான் நாம ஆச்சர்யப்படணும்."
"ஆனா இது என்ன வகையான
தொடர்பயிருக்கும்? நாம இதுவரைக்கும் படிச்ச
பத்திரிக்கைச் செய்திகள் எதுலயும் கொல்லப்பட்டவங்களுக்கு இப்படி ஒரு
திரைப்படத்துறைத் தொடர்பு இருப்பதா படிச்ச ஞாபகமில்லை."
"அதுக்குக்காரணம் எல்லாருமே
ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ்தான். சின்ன சின்ன வேஷங்கள்ல மூணோ நாலோ படங்களுக்குமேல
நடிச்சிருக்கறதா தெரியலை. அப்படி நடிச்சவங்களுக்குக்கூட சினிமால நடிக்கறதுக்கான
நிஜமான ஆசை இருந்துதா இல்லை அவங்களுக்கு சினிமாத்துறைலயிருந்த ஏதாவது தொடர்புமூலமா
வெறுமனே ஒரு ஆர்வத்துல ஒரு விளையாட்டுபோல இந்தப் படங்கள்ல தோன்றியிருக்காங்களானும்
தெரியலை."
"ஹும். எப்படியிருந்தாலும்
இவங்க எல்லாருக்குமே ஏதோ வகைல சினிமாத்துறையோட ஒரு தொடர்பிருந்திருக்கு."
"ஹும்."
“கௌதம் நாயர் இதுல எங்க வரார்?”
"தெரியலை. அந்த ஆறு
பெண்களும் தோன்றியிருக்கற படங்கள்ல அவங்க வெறுமனே கிரௌட் ஷாட்ஸ்ல பாக்கிரௌண்ட்லதான்
நிறுத்தப்பட்டிருக்காங்க. டயலாக்ஸ் எதுவும் இல்லை. அதனால அவங்களோட தேர்வுல கௌதம்
நாயருக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்க வாய்ப்பு குறைவுதான். அதுல சில
ஷாட்ஸெல்லாம் அவர் இயக்கியிருக்கறதுக்கான வாய்ப்பு கூட இல்லை. அதெல்லாம் பொதுவா
அஸிஸ்டண்ட்ஸ் பண்ணற வேலை."
"அப்படினா ஜெயராஜ் வழக்குல
கொல்லப்பட்ட ஏறக்குறைய எல்லா பெண்களுமே அவரோட படத்துல தோன்றியிருக்காங்கங்கறது
அவருக்கு தெரிஞ்சிருக்காதுனு சொல்லறியா?"
"தெரியமாயிருக்கறதுக்கான
வாய்ப்பு இல்லாமயில்லைனு சொல்லறேன்."
"அவர்கிளிடயே
கேட்டுப்பார்த்திடலாமே?"
"கேக்கலாம். அவராவே தொடர்புல
வரேன்னு சொல்லியிருக்காரு. இப்போதைக்கு நாமளா இதைப்பத்திப்போய் கேட்கவேண்டாம்.
அவரா கூப்பிடும்போது பார்த்துக்கலாம். அவர் குடுத்திருக்கற மெட்டீரியல்ஸ் இன்னும்
பாதி கூட படிச்சு முடிக்கல்லை. அதையெல்லாம் முழுசா படிச்சு முடிச்சப்புறம் அதுவரைக்கும்
அவர் தொடர்புல வரலைனா நாமளாப்போய்ப் பேசலாம். நீ ஆன்லைன்ல கொஞ்சம் தேடிட்டிரு இந்த
சினிமாத்துறை ஆங்கில்லே."
வெயில் சற்றுக்கூடியிருக்க அவர்கள் வீட்டிற்குள்
வந்தார்கள். வித்யாசாகர் உள்ளறைக்குச்சென்று செய்திவாசிப்பில் மூழ்கினான்.
வாசுதேவன் முன்னறையில் வந்து மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.
***
துரைப்பாக்கம் குருநானக் கல்லூரி வளாகத்திற்குள்
திரைபடப்படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. காலை ஒன்பதரைக்கெல்லாம்
முடிந்திருக்கவேண்டிய வேலை இன்னும் துவங்கியிருக்கவில்லை. தொலைபேசியை எடுக்காத
கதாநாயகியைத் தேடி ப்ரொடக்ஷன் வாகனம் போயிருந்தது. கேட்டிற்கு வெளியேயும்
மதிற்சுவரின் மேலேயும் கூட்டம் கூடியிருந்தது. உதவிவேலைகளுக்கு வந்திருந்தவர்களும்
ஜுனியர் ஆர்டிஸ்ட்களும் ஷாமியான பந்தலுக்கடியில் அமர்ந்து பொங்கலும்
உளுந்துவடையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ப்ரொடக்ஷன் ஆள் ஒருவன் அவர்களை
அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்.
"சீக்கிரமா முடிங்கப்பா. லைட்டிங் சரிபார்க்க
கேமராமேன் கூப்பிடுறாரு."
"உக்கும். மதியானம் மூணு மணிக்கு நடக்கப்போற
கூத்துக்கு நிம்மதியா சோறு துண்ணவிடாம இம்சை பண்ணறானுங்க." என்றவாறு பேப்பர்
தட்டில் மிஞ்சியிருந்ததை அள்ளி வாயில்போட்டுக்கொண்டு கைகழுவ விரைந்தார்கள்.
ஃபிரேமை மானிட்டரில் சரிபார்த்துக்கொண்டிருந்த
தடித்த கண்ணாடியணிந்த ஒருவன் எழுந்து சத்தம் போட்டான்.
"யாருய்யா ப்ரொடக்ஷன் மேனேஜர்? இப்படி எல்லா ஷாட்லயும் பாக்கிரௌண்ட்ல எதுக்குயா ஒரே ஆளுங்களா நிப்பாட்டி
எழவெடுக்கறீங்க? டைரக்டர் கவனிச்சிட்டாருன்னா என்னோட
தலியறுப்பாரு."
"ரெகமெண்டேஷன்ல வந்த ஆளுங்க சார்."
"என்ன மயிறு ரெகமெண்டேஷன்? காலேஜ் ஷாட்ல பின்னாடி பூரா பெரிய பொம்பளைங்களா நிப்பாட்டி வச்சிருக்கே. அறிவு
வேண்டாமா? அனுப்பிவிட்டிட்டு சின்ன பொண்ணுங்களா கூட்டியா
டக்குனு. உசுர எடுக்காதே. ஓடு."
சட்டென்று வேலையில்லாமல் ஆனதில் அவளுக்கு அன்றைய
மிச்சப்பொழுதை என்ன செய்வதென்று பிடிபடவில்லை. பாதி சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது
எழுப்பிவிட்டிருந்தார்கள். பசித்தது. கையில் பணமும் அதிகம் இருக்கவில்லை. அங்கேயே
சிறிது நேரம் சுற்றிக்கொண்டிருந்தவளுக்கு சீக்கிரமே அலுத்துப்போனது.
கூட்டத்தைக்கண்டந்து வெளியே ரோட்டிற்கு வந்தாள். அவள் ரோட்டைத் தொட்ட அதே
வினாடியில் அவளருகே ஷேர் ஆட்டோவொன்று நிறுத்தத்திற்கு வர அதிகம் யோசிக்காமல் ஏறி
அமர்ந்து ஒக்கியத்தில் இறங்கிக்கொண்டாள். அதுவரை காரிலேயே வந்திருந்த அந்தத்தெரு
பகல் வெளிச்சத்தில் வேறுமாதிரியாய்த் தெரிந்தது. மேலும் கீழுமாய் மூன்று நான்கு
முறை நடந்த பிறகுதான் ஒருமாதிரி பிடிகிடைத்தது. இரண்டு திருப்பங்கள் திரும்பி
ஐந்து நிமிடம் நேராக நடந்து அந்தக் காட்டிடத்தையடைந்தாள். பதினைந்து
அபார்ட்மெண்ட்களைக் கொண்ட சிறிய குடியிருப்பு. கேட் திறந்துகிடந்தது. வாட்ச்மேனைக்
காணவில்லை. அவள் விரைவாய் கேட்டைக் கடந்து உள்ளே போனாள். லிஃப்ட் நான்காவது தளத்திலிருந்து.
காத்திருக்காமல் படியேறத்துவங்கினாள். முதல் தளத்தில் எதிர்ப்பட்ட ஒரு நடுத்தர வயது
ஆள் இவளை மேலும்கீழுமாய்ப் பார்த்தவாறு கடந்து சென்றான். இரண்டாவது மாடியில்
வலப்புறம் கடைசியாயிருந்த பிளாட்டிற்குமுன் நின்று அழைப்புமணியை அமிழ்த்தினாள்.
இரண்டு நிமிடத்திற்கு உள்ளிருந்து எந்த சப்தமும் கேட்கவில்லை. மறுபடியும் மூன்று
நான்கு முறை இடைவெளிவிடாமல் அமிழ்த்தினாள். உள்ளே ப்ளேட்டோன்று தரையில் விழும்
சப்தம் கேட்டது. மேலும் ஒரு நிமிட காத்திருப்பிற்குப்பின் கதவு திறக்கப்பட்டது.
திறந்த மாத்திரத்தில் குப்பென்று அடித்த புகைமணம் அவளை நிலைகுலையச்செய்தது. அவள்
உள்ளே நுழைந்துகொள்ள அவன் கதவைச்சத்திவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே போய்விட்டான்.
அவனைத்தொடர்ந்து அவளும் உள்ளே போனாள். அவன் இருந்த அறை புகைமண்டலமாயிருந்தது.
உள்ளே கால் வைத்ததும் அளவுக்கு இருமியது. கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
"காலைலயே ஆரம்பிச்சிட்டியா?" அவன் படுத்திருந்த கட்டிலில் அவனருகே
அமர்ந்துகொண்டபடி கேட்டாள். சிக்கப்பேரிய கண்களால் அவனைப்பார்த்தவாறு "நீ
என்ன இந்நேரத்துக்கு வந்திருக்கே? ஷூட்டில்லே?" என்றான்.
"அந்த சிடுமூஞ்சி சோடாபுட்டி
தொரத்திவிட்டிரிச்சி. அதுக்கு சின்ன பொண்ணுங்களா வேணுமாம்."
அவன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அவனுடைய
முகம் அவளை நோக்கித்திரும்பியிருந்தபொழுதும் அவன் வேறு எதையோ
பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது.
"என்ன அப்படி பாக்கறே? வேலை இல்லையா உனக்கு இன்னைக்கு?"
"குடிக்கிறிய?"
"அய்யே. கலங்கார்த்தாலேயேவா.
வேண்டா."
அவன் எழுந்து அமர்ந்தான். அவளை மெல்லத்தள்ளி
படுக்கையில் கிடத்தினான். உடுத்தியிருந்த லுங்கியை கழட்டி கீழேபோட்டுவிட்டு அவள்
மேல் படுத்து அவனுடைய உடலால் அவளுடைய உடலை அழுத்தினான். நெருங்கி வந்த அவனுடைய
உதட்டைக் கடித்துவிட்டு "எப்பவுமே இந்த நெனப்பு தானா உனக்கு?" என்றாள் அவள். அவள் மேல் சிறிது நேரம்
உறைந்துகொண்டிருந்தவன் சட்டென்று விலகிப் படுத்துக்கொண்டான். அவள் அவனை நெருங்கி
அவனை உயிர்ப்பிக்க முயன்றாள். அந்த இடம் அமைதியாயிருக்க அவனுடைய மூச்சு விடும்
சப்தமும் சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன்
சுவாரஸ்யமில்லாமல் படுத்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. நூற்றியைம்பது
டிக்கிற்குப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டு அவள் பின்வாங்கினாள். அவன் சுவர்பக்கமாய்
திரும்பிப் படுத்துக்கொண்டான். அவள் அவன் கலைத்திருந்த அவளுடைய உடைகளை
சரிசெய்துகொண்டு அவனருகே படுத்துக்கொண்டாள். ஏதோ ஒரு வீட்டிலிருந்து குக்கரின்
சப்தமும் ஒரு குழந்தையின் அழுகையும் கேட்டது. ஜன்னலுக்கு வெளியே
பார்த்துக்கொண்டிருந்தவள் படுக்கை மெலிதாய் குலுங்குவதையுணர்ந்து
திரும்பிப்பார்த்தாள். அவனுடைய முதுகு அசைந்துகொண்டிருந்தது.
"விடுயா. செக்ஸ் மட்டும்தானா
உலகத்துல? வேற எவ்ளோயிருக்கு."
பட்டென்று எழுந்து அமர்ந்த அவன் பளாரென்று அவள்
கன்னத்தில் அறைந்தான்.
"பொட்ட நாயே." என்றான்
உஷ்ணமாய் அவளை பார்த்தவாறு. அவனுடைய உடல் கோபத்தில் மெலிதாய் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவளுடைய கன்னம் அவன் அறைந்த இடத்தில்
எரியத்தொடங்கியது. வலது கையால் தொட்டுப்பார்த்தாள். சுட்டுக்கொண்டிருந்தது.
மெதுவாய் கன்னத்தை விரல்களால் தடவியவாறு அவன் கண்களைப்பார்த்து "நானா? நீயா?" என்றாள் அவள்.