Tuesday, October 26, 2021

ஐந்தாவது கொலை - Chapter 4

வித்யாசாகரும் வாசுதேவனும் சிம்ஸ் பார்க்கில் அமர்ந்திருந்தார்கள். வாசுதேவன் கனமான ஸ்வெட்டரும் குல்லாவும் அணிந்திருந்தான். டிசம்பர் மாதக் குன்னூரில் குளிர் அவனை வேரோடு உலுக்கிக்கொண்டிருந்தது. வித்யாசாகர் கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருந்தான். கண்ணெட்டும் தூரம்வரை புல்வெளிப்பரப்பு நீண்டுகிடந்தது. அதிகமாய் கூட்டமிருக்கவில்லை. குன்னூருக்குள் எங்குபோனாலும் தொடர்ந்துவந்து அவர்களின் எதிரே அமர்ந்துகொண்டு விழித்துப்பார்க்கும் நீலநிற மலை இங்கேயும் வந்திருந்தது. 


"ஜெயராஜ் வழக்குல கொல்லப்பட்ட பெண்கள் தோன்றின படங்களோட கிரெடிட்ஸையெல்லாம் எடுத்தேன் வித்யா." என்றவாறு ஸ்வெட்டருக்குள் கைவிட்டு சட்டை பாக்கட்டிலிருந்து காகிதமொன்றையெடுத்து வித்யாசாகரிடம் நீட்டினான். 


"அந்த படங்கள்ல இன்ஃப்லுவென்ஸ் இருக்கக்கூடிய ஆட்கள். தயாரிப்பாளர்கள் அஸிஸ்டண்ட்ஸ் ப்ரொடக்ஷன் மேனேஜர். இப்படி ஏதோ ஒரு வகைல அந்த பெண்களோட தேர்வுல பங்கிருக்க வாய்ப்புள்ளவங்க."


"குட்." என்றவாறு அந்தக் காகிதத்தில் பார்வைபோட்டான் வித்யாசாகர். 


"கௌதம் நாயரோட படங்கள்ல பெரும்பாலும் முக்கிய பொறுப்புக்கள்ளயிருப்பவங்கயெல்லாம் அவரோட பெருபாலான படங்கள்ல சேர்ந்து வேலைபார்த்திருக்காங்க."


"ஹும்."


"இந்த ஆறு பெண்களும் தோன்றியிருக்கற படங்களை மட்டும் எடுத்துப்பார்தப்போ ஒரு மூணு பேரு கிடைச்சுது. ஒரு இசையமைப்பாளர். ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர். அப்புறம் ஒரு ப்ரொடக்ஷன் மானேஜர். இந்த மூணு பேர்ல யாருக்கு வேணும்னாலும் அந்தப் பெண்களோட தேர்வுல தொடர்பிருக்கலாம்."


"இண்டரெஸ்டிங். இசையமைப்பளருமா?"


"மீட்டூ மூவ்மென்ட்லயெல்லாம் பேரு அடிபட்ட ஆள்." என்று கண்ணைச் சிமிட்டினான் வாசுதேவன். 


"ஹும். ஜெயராஜுக்கு ஏதாவது சினிமா தொடர்பு இருந்திருக்குமா?"


"சினிமா பார்க்கிறதைத்தவிர வேற எந்தத் தொடர்பும் இருந்ததா தெரியல்லை. கௌதம் நாயரோட சொற்கள்ள சொல்லணும்னா ஒரு சராசரி ஆளுமை. கோயமுத்தூரைவிட்டு சென்னைக்கேகூட அதிகம் போயிருக்கறதுக்கான வாய்ப்பு கம்மி."


"அப்படினா சினிமா துறைல இருக்கற ஒரு ஆள் ஏதோ வகைல ஜெயராஜால கொல்லப்பட்ட எல்லா பெண்களோடயும் தொடர்புலயிருந்திருக்கான். அவனுக்கும் ஜெயராஜுக்கும் என்ன தொடர்புன்னு பாக்கணும் இல்லையா?"


"ஆமாம். ஆனா அதே நேரத்துல இது முழுக்கவே ஒரு கோயின்ஸிடென்ஸாவும் இருக்கலாம். இந்த ஆறு பெண்களைத்தவிரவும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்தப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. வேற ஏதோ ஒரு அடிப்படையில ஜெயராஜ் அவனோட விக்டிம்ஸை தேர்ந்தெடுத்தப்போ ஒரு ரேண்டம் கோயின்ஸிடென்ஸாவும் இந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்."


                                                                            ***


அவன் படுக்கையில் படுத்திருந்தான். அஞ்சியபடியே கண்களைத்திறந்து சுவரைப்பார்த்தான். எதிர்புறச்சுவரிலிருந்து யாரோ டார்ச்லைட் அடிப்பதுபோல ஒரு ஒளிவட்டம் தெரிந்தது சுவற்றில். இருண்டிருந்த அறையை எந்தவிதத்திலும் ஒளியூட்டவில்லை அந்த வட்டம். இருந்தும் கண்களை வலிக்கச்செய்யும் ஒளியைப்பார்த்துவிட்டதைப்போல அவன் கண்களை இறுகமூடிக்கொண்டான். போர்வையை இழுத்து தலையை முழுவதுமாய் மூடிக்கொண்டான். எடைமிகுந்த மௌனம் அந்த அறையில் நிறைந்திருந்தது. அவனால் நிறையநேரம் அப்படியிருக்கமுடியவில்லை. போர்வைக்குள் மூச்சுமுட்டுவதாயுணர்ந்தான். போர்வையை அகற்றச்சொல்லி அவனுடைய உள்ளுணர்வு மெதுவாக அவனை உலுக்கத்துவங்கியது. உடலில் வியர்வைத்துளிகள் எதுவும் இருக்கவில்லை. இருந்தும் வியர்ப்பதுபோலிருந்தது. உடலின் அசவுகர்யங்களெல்லாம் வெறும் சாக்குகளென்பதையும் அவனுக்குள் கண்களைத்திறந்து சுவற்றைப்பார்ப்பதற்கான ஆர்வம் கூடிக்கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருந்தான். அவனுடைய அச்சமே ஒரு வகையில் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை தூண்டியது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் தோற்கப்போகிறோம் என்பதை அறிந்திருந்தும் அவன் அந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான். கண்களை இறுக மூடி போர்வைக்குள் புதைந்துகிடந்தான். நேரமும் நகராமல் அவனுடைய அடுத்த அசைவிற்காய் காத்திருப்பதுபோலிருந்தது அவனுக்கு. தோற்றுவிட்ட பாவனையுடன் அவன் மெதுவாக போர்வையை கழுத்துவரை இறக்கிவிட்டான். மிகமெதுவாக கண்களைத்திறந்து சுவற்றைப்பார்த்தவன் அதிர்வுற்றான். சுவர் இருண்டிருந்தது. எந்த ஒளிவட்டமுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அவன் தன்னை ஒரு கோழைபோலுணர்ந்தான். ஒளிவட்டதை அஞ்சி நிறையநேரம் போர்வைக்குள் புதைந்துகிடந்த கோழைத்தனத்தின்மேல் அருவருப்பு எழுந்தது. இரவு முழுவதும் கண்ணடைக்கப்போவதில்லையென்று உறுதிபூண்டான். இனி காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை.


                                                                    ***


"வாஸ். கௌதம் நாயர் ஒருவேளை மாயாவைக் கொண்ணது ஜெயராஜ் இல்லை இன்னொறாள்னு நம்ம ஆர்வத்தைக்கூடறதுக்காகவும் சொல்லியிருக்கலாமில்லயா? நிஜத்தில் அவருக்குத்தெரியவேண்டியது எப்படி மாயா ஜெயராஜ்கிட்ட மாட்டினாங்கறதா இருக்கலாமில்லயா?"


"எதுனால அப்படி சொல்லறே?"


"நம்மளோட இந்த ரெண்டாவது ஆள் தியரி கௌதம் நாயர் எழுப்பின சந்தேகத்தோட அடிப்படைலதான் பலமா நிக்கறமாதிரி தெரியலையா?


"ஆனா இந்த கொலைகள்ல ஒரு சினிமா ஆங்கிள் இருக்கே வித்யா. அதை வேற எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ண முடியும்?"


"சினிமா ஆங்கிலே கூட இந்த வழக்கு கௌதம் நாயர் மூலமா வந்ததாலதானே நம்ம கண்ணுல பட்டுச்சு. கௌதம் நாயர் ஒரு திரைத்துறை ஆளுமையா இல்லமாயிருந்திருந்தா நாம இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்துக்கு வந்திருப்போமா இந்த வழக்குல?"


"மே பி நாட். ஆனா இது இதுவைரக்கும் நமக்குதெரிஞ்சு யாரும் பார்க்காத ஒரு கோணம்தானே இந்த கேஸ்ல?"


"இது ஒரு தப்பான கோணம்ங்கறதாலயும் யாரும் பார்க்கமாயிருந்திருக்கலாமில்லயா?


                                                                        ***


ஓபராய் ஷெராட்டனின் பால் ரூமில் வருடாவருடம் தென்னிந்தியாவில் நவம்பர் மாதத்தில் நடக்கும் வைர நகை தயாரிப்பளர்களின் இரண்டு நாள் எக்ஸ்போ நடந்துகொண்டிருந்தது. இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்வான ஃபாஷன் ஷோ முடிந்திருக்க மதுபான விநியோகம் தொடங்கியிருந்தது. மங்கலாக ஒளியூட்டப்பட்டிருந்த அறையில் போடப்பட்டிருந்த மேஜைகளும் நாற்காலிகளும் பள்ளிக்குழந்தைகளைப்போல் வெள்ளையுடையணிந்து உட்கார்ந்திருந்தன. நன்றாக மழித்த முகங்களுடனும் பெரிய தொப்பைகளுடனுமிருந்த வடநாட்டு வைர நகைத் தயாரிப்பாளர்கள் ஃபாஷன் ஷோவில் பங்கெடுத்த சில பெண்களுடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். பால் ரூமிற்க்கு வெளியேயிருந்த காரிடோரில் நின்று கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த மாயாவை அவள் நெருங்கிவந்தாள். கையில் புன்கைந்துகொண்டிருக்கும் சிகரட். 


"ஹலோ."


"ஹாய்."


"சேட்டுங்கப்பூரா உன்னையே சுத்திசுத்தி வந்தாங்க. நீ இங்க தனியா ஃபோன பார்த்திட்டு நிக்கறே?" என கண்ணடித்தாள் அவள். மாயா மெலிதாய் புன்னகைத்தாள். 


அவள் சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து கீழுதட்டைச் சற்று வலப்புறமாய் நகர்த்திவிட்டு புகையை வெளியேற்றினாள். பால் ரூமின் தடித்த கதவை யாரோ திறக்க உள்ளிருந்து இசை கேட்டு கதவு அடைபட்டதும் நின்று அந்த இடம் மீண்டும் அமைதியில் ஆழ்ந்தது. 


"உன்னை மாடலிங் இவண்ட்ஸ்ல அதிகம் பார்த்ததில்லையே? பை தி வே ஐ ஆம் வாமிகா." அவள் நீட்டிய காரத்தைப்பற்றி "மாயா" என்றாள் மாயா. அவள் தலைமுடிக்கு தங்கநிறச்சாயம் அடித்திருந்தாள்.


"நான் சென்னைக்கு வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது."


"ஓ. வேர் ஆர் யூ ஃப்ரம்?"


"கொயம்பத்தூர்."


"வாட்? இட்ஸ் ஸச் ஏ டெட் சிட்டி. அங்க என்ன பண்ணிட்டிருந்தே?" மாயா புன்னகைத்தாள். 


"பொறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். படிப்பு முடிச்சிட்டு இப்போ வேலை கிடைச்சு சென்னை வந்தேன்."


"என்ன வேலை?"


"ஹெச்பீல ப்ரொக்ராமர்."


"வாட் த ஃபக்! அப்புறம் எதுக்கு ஐயாயிரம் ரூபாய்க்காக இந்த சேட்டுங்ககிட்ட லோல்பட வந்தே?"


"என்னக்கு படத்துல நடிக்கணும். ஆட்ஸ் அப்புறம் இந்த மாதிரி ஷோஸெல்லாம் பண்ணினா அந்த எக்ஸ்போஷர்ல சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க."


"யார் சொன்னாங்க?" அவள் மாயாவின் முகத்தினருகே நெருங்கிவந்து கேட்க அவள் வாயிலிருந்து வோட்காவின் மணம் வந்தது. மாயா புரியாமல் அவளைப் பார்த்தாள்.


"அதெல்லாம் பெருமாள் கோவில்ல காச்ச்சேரி பண்ணிகிட்டே ஏ ஆர் ரஹ்மான் அதைக் கேட்டு அவரோட படத்துல பாடக் கூப்பிடுவாருனு வெயிட் பண்ணறமாதிரி. சினிமா ஒரு தனி உலகம். அந்த உலகமும் வெளி உலகமும் சந்திச்சுக்கறது ரொம்ப ரேர். உனக்கு சினிமா ஆசையிருந்தா சினிமா உலகத்துக்குள்ளபோய்த்தான் வாய்ப்பு தேடணும். இப்படி சம்பந்தமில்லாத எடத்துல நின்னுட்டிருந்தேனா உன்னோட நேரம்தான் வீணாகும். யூ சீம் லைக் ஏ குட் கிட்." மாயாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 


"என்னோட ஸ்நேகிதி ஒருத்தி இருக்கா. சினிமால சின்ன சின்ன வேஷம் பண்ணறவ. அவ ஒருத்தனப்பத்தி சொல்லியிருக்கா. துரைபாகத்துல இருக்கான். கஞ்சா கேஸ். ஆள புடிச்சுப்போச்சுன்னா உதவி பண்ணுவான். பெரிய டைரக்டர்ஸ்ட்ட எல்லாம் அசிஸ்டண்டா வர்க் பண்ணறவன். உன்னோட நம்பர் குடு. நான் அவளைக் கூப்பிட்டுப்பேசச் சொல்லறேன். யூ சீம் லைக் ஏ குட் கிட்." என்றாள் அவள் இரண்டாவது முறையாக மாயாவின் கன்னத்தை மெதுவாக வருடியவாறு.