Thursday, April 1, 2010

பின் ஒரு மழை நாளில்




பதின்மூன்றாம் நாள் காரியமெல்லாம் முடித்து சாஸ்திர சம்ப்ரதாய வழக்கங்களின் ப்ரகாரம் கல்பனாவை வழியனுப்பி வைத்தாகிவிட்டது. அக்னி ஜ்வலைகள் அவளின் உடலை தம்மோடு ஐக்கியமாக்கிக்கொண்டுவிட்டன. ஒப்பற்ற அந்த சங்கமத்தின் சாட்சிய சந்ததிகளாய் எலும்பு மிச்சங்கள். நதியின் ப்ரவாகத்தில் கரைக்கும் பொருட்டு சாம்பலாய் மண்பானையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கல்பனா. மண்ணில் புதைக்கும் முன் நடுங்கும் விரல்களால் அந்த பானையின் உடலை தொட்டுப்பார்த்தான் ப்ரகாஷ். உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள மெதுவாய் அவள் பெயரை உச்சரித்தான். உடலும் மனமும் சோர்ந்திருந்தன.

சிதையில் கிடத்தப்பட்டிருந்த அவன் மனைவி. மனதில் கல்வெட்டாய் பதிந்துபோயிருந்த கடைசியாய் அவன் பார்த்த அவளது உருவம். அவளது முகம் மூடப்பட்ட கடைசி விநாடி வரை இமைகொட்டாமல் அவளை மனதில் வாங்கிக்கொண்டான்.

அத்தனையும் முன்னரே திட்டமிட்டு வைக்கப்பட்ட விஷயம் போல் நடந்து முடிந்துவிட்டன. இந்த பதின்மூன்று நாட்களும் ஒரு இயந்திரம்போல் இயங்கினான் ப்ரகாஷ். தன்வசமில்லாத எதுவோ ஒரு சக்தி அவனை செலுத்துவதாய்பட்டது. இடையிடையே இவையாவும ஒரு கனவாய் இருக்கக்கூடாதா என்ற எண்ணம எழுந்தது. நடு இரவில் அதிர்ந்து எழுந்து கண்டவை யாவும் கனவு என்று உணரும் அந்த முதல் வினாடிக்காய் காத்திருப்பது போல் பட்டது. நிமிடங்களும் நாட்களும் கடந்து செல்ல பதின்மூன்று நாட்களாகியும் அந்த விநாடி வரவில்லை.

அவன் கேட்ட நேரத்தில் கிடைக்காத தனிமை இப்பொழுது அவனை சூழ்ந்திருக்கிறது. அவள் சடலத்தை கட்டிக்கொண்டு அழநினைத்த போதும் அவள் விரல்களை பற்றி கண்களில் ஒற்றிக்கொள்ள நினைத்தபோதும் அவள் பெயரை கத்தி மார்பில் அறைந்துகொண்டு கதற நினைத்தபோதும் கிடைக்காத தனிமை இப்பொழுது இம்சையாய் தலை கனக்க வைக்கிறது.

“கல்பனா.” என்று மெதுவாக கூப்பிட்டுப்பார்க்கிறான் அவள் அருகில் எங்கோ இருபது போன்ற உணர்வில். பதில் இல்லை.

“எங்கே போய்விட்டாய் கல்பனா? நீ பக்கத்தில் எங்கோதான் இருப்பதுபோல் இருக்கிறது. உன்னால் என்னை பார்க்கமுடிகிறதா? அவன் விட்டத்தைப்பார்த்துக் கேட்கிறான். பதில் இல்லை.

அயர்ச்சியில் படுகையில் படுத்து அவள் சேலையொன்றை உடலில் போர்த்திக்கொள்கிறான். அவன் மனதில் அவர்கள் முதன்முதலாய் சந்தித்த தினம் விரிகிறது.





ஒரு புதன்கிழமையின் மாலை. வெளியே மழை வரும் போலிருந்தது. வானில் யாரோ பாதி வரைந்து புறக்கணித்துப்போன ஓவியங்களாய் மேகக்கூட்டங்கள். அந்த பத்துக்குப்பத்து அறையில் இடப்பட்டிருந்த சோபாவில் ப்ரகாஷ் அமர்ந்திருந்தான். அருகே அம்மா. எதிரே சுப்ரா மாமா. ப்ரகாஷிற்கு முன்தினம் இரவு படுக்கையில் படுத்து செய்த ஒத்திகையெல்லாம் பயன்தராமல் பரபரப்பாய் உணர்ந்தான். மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியையும் மீறி அரும்பிய வியர்வை துளிகளை கைகுட்டையால் துடைத்துக்கொண்டான். அவன் பரபரப்பை கவனித்த சுப்ரா மாமா “பொண்ணை கூப்பிடலாமே.” என்றார் அருகே அமர்ந்திருந்த வரதராஜனை பார்த்து.

“சரோஜா. கல்பனாவை அழைச்சிட்டு வா.” வரதராஜன் பக்கத்துக்கு அறையை பார்த்துக் குரல் கொடுத்தார்.

“தோ.” என்று பதில் குரல் வந்தது அறையிலிருந்து.

“அது பாருங்கோ. பொம்மனாட்டிகளுக்கே அலங்காரம் பண்ணிக்கணும்னா நாழியாகும். அதுவும் இது மாதிரி ஒரு மங்களகார்யம்னா கேக்கணுமா?” வரதராஜன் வாய்மொழிய “வாஸ்தவம். வாஸ்தவம்.” என்றுவிட்டு சுப்ரா மாமா பலமாய் சிரித்தார்.

ப்ரகாஷ் குரல் வந்த அறை நோக்கிப் பார்வையை திருப்புகிறான். சிவப்பு வர்ணத் திரைச்சீலை இடப்பட்டிருகிறது அந்த அறையில். அறைக்குள்ளிருந்து மல்லிகைப்பூவின் வசம் புறப்பட்டு வந்து அவன் நாசியை தீண்டுகிறது. வளையல்களின் சிணுங்கல் சப்தம் கேட்கிறது. தொடர்ந்து பட்டுச்சேலை சரசரக்கும் சப்தம். திரைச்சீலை விலக்கப்படுவதை உணர்ந்து ப்ரகாஷ் பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். அவள் அறையில் நுழைந்திருக்க வேண்டும். அறை முழுவதும் மல்லிகைப்பூவின் மணம்.

“பெரியவங்களை நமஸ்காரம் பண்ணிக்கோமா.” பெண் குரல்.

அவள் வளையல்கள் சப்திக்க விழுந்து வணங்குகிறாள் ப்ரகாஷ் விழிகளை உயர்த்திப்பார்க்க அவள் சடைப்பின்னலும் அதில் சூடியிருந்த மல்லிகைச்சரமும் தான் அவன் பார்வையில் முதலில் விழுந்தன. மஞ்சள் வர்ண பட்டுச் சேலை கட்டியிருந்தாள்.

அவள் எழுந்து கொள்ள ஒரு விநாடி அவள் முகம் பார்த்துப் பின் உள்ளங்கையை பார்த்துக்கொண்டான் ப்ரகாஷ். புகைப்படத்தை விட நேரில் சற்று நிறம் கூடுதலாய் தெரிந்தாள்.

“என்னம்மா படிச்சிருக்கே?” அருகில் அமர்ந்திருந்த அம்மா கேட்க “பி.ஏ..” என்றாள் அவள். ப்ரகாஷ் மீண்டுமொருமுறை அவள் நின்றிருந்த திசையில் பார்வை போட அவள் புன்னகைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

“எல்லாருக்கும் காப்பி கொடுமா.” என்றுவிட்டு தாய் அவளிடம் தட்டை கொடுக்க அவ்ள் அனைவருக்கும் தந்துவிட்டு கடைசியாய் ப்ரகாஷிடம் வந்தாள். தட்டிலிருந்த கடைசி டம்ளரை எடுத்து அவனிடம் கொடுக்க அவன் வாங்கிக்கொண்டபொழுது அவள் விரலை மெலிதாய் தொட நேர்ந்தது. அவன் நிமிர்ந்து பார்க்க அவள் முகத்தில் வெட்கப்பூ பூத்திருப்பது தெரிந்தது.

“நீயும் உட்கார்ந்துக்கோமா.” என்று ப்ரகாஷின் அம்மா சொல்ல அவள் ப்ரகாஷின் எதிரே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“பாட்டு கத்துண்டிருக்கியாமா?”

“உம்” என்றாள் அவள்.

“ஒரு பாட்டு பாடேன்.”

அவள் தாயை பார்க்க தாய் ‘பாடு’ என்பது போல் தலையசைக்க சாமஜவரகமானா பாடினாள். ப்ரகாஷ் சின்னச் சின்ன இடைவெளிகளில் அவள் மேல் பார்வை போட்டான். தாளம் போடும் அவள் கையை கவனித்தான். பாதங்களை கவனித்தான். உதடுகளை கவனித்தான். அரை நிமிடம் கனவில் மூழ்கி மீண்டு வந்தபொழுது அவள் பாட்டை முடித்துக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்து ப்ரகாஷும் கல்பனாவும் தனித்து விடப்பட்டார்கள். துண்டு துண்டாயில்லாமல் இப்போது அவளை முழுவதுமாய் பார்க்க முடிந்தது. இமை கொட்டாமல் அவளை பர்ர்த்துக்கொண்டிருந்தான் ப்ரகாஷ். அவள் படிப்பு பற்றி கேட்டான். அவன் படிப்பு பற்றி சொன்னான். வானிலை பற்றி பேசினான். அவள் அப்பாவின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் உள்ள தூரத்தை கேட்டு தெரிந்து கொண்டான். பேசுவதற்கு விஷயம் எதுவும் கிடைக்காமல் போக அவள் அப்பா அலுவலகத்திற்கு என்ன வாகனத்தில் பயணிப்பார் என்ற அதிமுக்கியமான விஷயத்திற்கும் பதில் கேட்டு பெற்றுக்கொண்டான். தொடர்ந்து அந்த வாகனத்தின் மற்ற விபரங்களை கேட்கும்முன் வாயிலருகே சுப்ரா மாமாவின் செருமல் சப்தம் கேட்டது.

அவன் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வரும்முன் “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றான். அவள் முகத்தில் இரண்டாவது முறையாய் ஒரு வெட்கப்பூ மொட்டுவிட்டு உடனே மலர்ந்தது. வெளியே மழை பெய்ய தொடங்கியிருந்தது





ப்ரகாஷின் கண்ணீர் அவன் முகத்தில் போர்த்தியிருந்த அவள் சேலையை நனைத்தது. அந்த புதன்கிழமையின் மாலையில் மஞ்சள் வர்ணப்பட்டுச்சேலையில் பார்த்த கல்பனாவின் நினைவு மீண்டும் மீண்டும் மனதில் வந்து மனதை பாரமக்கியது. இடையிடையே அவன் எத்தனை முயற்சித்தும் தடுக்க இயலாமல் சிதையில் கிடத்தப்பட்டிருந்த அவளது உருவமும் நினைவில் வந்தது.

வாக்கியம் முடிவுபெரும் முன்னரே வைத்த முற்றுப்புள்ளி போல வாழ்ந்து முடிக்கும் முன்னரே வந்த அவள் மரணம் அவனை புரட்டி போட்டது. வாழ்கையை குறித்தும் மரணத்தை குறித்தும் மனதில் எழுந்த கேள்விகள் தலையை கனக்கச்செய்தன. கல்பனா என்பது பதின்மூன்று நாட்களுக்கு முன் விறகில் கிடத்தி எரித்த அந்த உடல் மட்டும் தானா? மண்ணில் புதைத்து வைத்திருக்கும் அவள் சாம்பலையும் ஆற்றில கரைத்தால் கல்பனா முழுவதுமாய் அழிந்துபோவளா? அவள் கனவுகளையும் இரசனைகளையும் எண்ணங்களையும் தீயில் சுட்டு காற்றோடும் நீரோடுமாய் கரைத்துவிட முடியுமா?

கண்கள் பாரமாகி தலை சுற்றுவது போலிருந்தது. பசித்தது இருந்தும் சாப்பிட தோன்றவில்லை. நிறைய நேரம் விட்டத்தை பார்த்து படுதிருந்தவன் மாலை நேரத்தில் உறங்கிப்போனான்.





“பாலகுமாரனோட எழுத்து பிடிக்கும். ராத்திரி நேரத்துல கர்நாடக சங்கீதம் கேக்க பிடிக்கும். கால் வலிக்கிரவரைக்கும் நடக்கப் பிடிக்கும். இப்படி நிறைய. உனக்கு என்ன பிடிக்கும்?” அவனுக்கு பிடித்தவற்றை சொல்லிவிட்டு ப்ரகாஷ் அவளை அவர்கள் முதலிரவில் கேட்டான்.

“மழை பிடிக்கும்.” என்றாள் அவள்.

“மழையா?”

“ஆமாம். மழை ரொம்ப பிடிக்கும்.”

அவள் மழை குறித்து வர்ணிக்க ப்ரகாஷ் லயித்துப்போய் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கதை பேசிக்கொண்டிருந்தாள். தொடர்ந்து வந்த நாட்களில் அவள் ப்ரகாஷிற்கு வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை அறிமுகப்படுதினாள். அவன் அதுவரை பார்த்திராத பல அழகுகளை காண்பித்தாள். கேட்டிராத பல சப்தங்களை கேட்கவைத்தாள் உணர்ந்திராத பல சுகங்களை உணரச்செய்தாள். அவனுக்கு தாயக தாரமாக தோழியாக ஆசானாக பல அவதாரங்கள் எடுத்தாள்.

வானில் கரிய மேகங்கள் திரண்டு வரும் நாட்களில் அவள் சந்தோஷமாய் ஜன்னலருகே மிகவும் பிடித்த ஒரு நபரின் வருகைக்குக் காத்திருப்பது போல் மழைக்காக காத்திருப்பாள். ஜன்னலின் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி வெகுநேரம் காத்திருப்பாள். மழையின் முதல் துளி எதிர்பாராத தருணத்தில் புறங்கையில் ‘சொட்’ என விழ முகம் பூரித்துப்போவாள். மெதுவாய் பாட்டுப்பாடுவாள். ப்ரகாஷ் அவளை சந்தோஷமாய் வினோதமாய் பார்த்துக்கொண்டிருப்பான்.





ப்ரகாஷிற்கு நள்ளிரவு தாண்டி உறக்கம் கலைந்தது. ஜன்னலில் யாரோ கல் வீசி எறிவது போல் சப்தம் கேட்டு எழுந்துபோய் திறந்து பார்க்க மழை பெய்துகொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்ட கை நனைந்தது. ஜன்னல் கம்பிகளில் அவள் வாசம். மழையில் அவள் வாசம். அந்த சிறிய வாழ்க்கையை கூட எவ்வளவு நிறைவாய் மகிழ்வாய் வாழ்ந்திருக்கிறாள். எத்தனை ஆழமாய் வாழ்க்கையை இரசித்துச் சுவைத்திருக்கிறாள். பலருக்கு கற்றை கற்றையான பணமும் ஆடம்பரமும் புகழும் பதவியும் தந்துவிடாத சந்தோஷத்தையும் மனநிறைவையும் கல்பனாவிற்கு இந்த மழைத்துளிகளால் தரமுடிந்தது.

அந்த இரசனைகள் எப்படி இறந்து போயின? அந்த சந்தோஷங்கள் எப்படி சாம்பலாயின? மீன்றும் கேள்விகளின் இம்சை. மழை நின்று வெகு நேரமாகியும் ப்ரகாஷ் கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டி வைத்திருந்தான்.





“வாழ்க்கைல ஒரு மனுஷனுக்கு கிடைக்கக்கூடிய இணையில்லாத இன்பமும் ஒப்பற்ற செல்வமும் ஒரு குழந்தைதான். அந்த சந்தோஷத்தை என்னால உங்களுக்கு குடுக்க முடியாம போயிடுச்சே. என்னை மன்னிப்பீங்களா ப்ரகாஷ்?” அவள் கண்கலங்கிக் கேட்டள். திருமணமாகி மூன்றாண்டுகளாகியும் கல்பனா கருத்தரிக்காத காரணத்தால் மருத்துவரிடம் போய் இருவரும் சோதனை செய்து பார்த்தார்கள். பல சோதனைகளுக்குபின் கல்பனாவிற்கு இயற்கையாகவோ செயற்கையாகவோ கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

“சீச்சீ. என்ன இது சின்ன பொண்ணு மாதிரி அழுதுகிட்டு. என் கல்பனாவே எனக்கு ஒரு குழந்தைதானே. நமக்கு எதுக்கு இன்னொண்ணு?” அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“உங்க பெருந்தன்மை உங்களால இப்படி எளிதா சொல்லிட முடிஞ்சுது. ஆனா என்னால என்னை மன்னிக்கவே முடியாது ப்ரகாஷ்.”

“பெருந்தன்மை இல்ல கல்பனா. உன் மேல நான் வச்சிருக்கிற அன்பு. எனக்கு நீ தான் உயர்வான செல்வம் இணையில்லாத இன்பம். உன்னை தவிர உன்னோட இந்த அன்பை தவிர எனக்கு வேற எதுவும் வேண்டாம்.” அவன் அவளை நெருங்கி வந்து அணைத்துக்கொள்ள அவள் இன்னும் அதிகமாய் அழுதாள்.

ப்ரகாஷ் பவவிதமாய் ஆறுதல் சொல்லியும் அவள் குற்ற உணர்வில் தவித்தாள். தலையணை நனையும்படியாய் இரவுகளில் அழுதாள்.

அந்த நிகழ்விலிருந்தும் அதன் அதிர்விலிருந்தும் மீண்டு வர சில மாதங்களாயின. ஒருவிதமாய் அவர்கள் தங்களை தேற்றிக்கொண்டு ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்த பொழுதுதான் அந்த இடி இறங்கியது.

சில நாட்களாய் அத்தனை வருட மணவாழ்வில் கண்டிராத ஒரு வாட்டத்தை ப்ரகாஷ் கல்பனாவின் முகத்தில் கண்டான். அடிக்கடி சோர்ந்துபோய் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டாள் அவள் பட்டுக்கொண்டிருந்த வேதனை அவள் மறைக்க முயன்றும் முடியாமல் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ப்ரகாஷ் தவித்துப்போனான்.

“கவலைப்படாதீங்க ப்ரகாஷ். சீக்கிரம் குணமாயிடுவேன்.” அவள் அவனுக்கு தனக்கே நம்பிக்கையில்லாமல் ஆறுதல் சொன்னாள்.

பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ப்ரகாஷை தனியை அழைத்து “கர்பப்பை புற்று நோய். குணமடையும் வாய்ப்பு குறைவு” என்றார்கள்.

செய்தியை அவளிடம் சொல்லும் பொறுப்பு ப்ரகாஷிடம் விடப்பட்டது. மருத்துவமனையில் “டெஸ்ட்ல எந்த ப்ராப்ளவும் இல்லை.” என்று சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்துவந்தான். அவன் சொன்ன செய்தியின் பலத்தில் அவள் சற்று தெம்பாய் உணர்ந்தாள். “எந்த ப்ரச்சனையும் இல்லாம இருந்தா மருதமலைக்குப் போறதா வேண்டிக்கிட்டிருந்தேன் ப்ரகாஷ். வியாழகிழமை லீவ் போட்டா போயிட்டு வந்திறலாம்.” என்றாள். ப்ரகாஷ் அவளை கட்டிக்கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுதான். அவள் வற்புறுத்தி கேட்க விஷயத்தைச் சொன்னான். அவள் மெலிதாய் புன்முறுவல் பூத்தாள்.

தொடர்ந்து வந்த நாட்கள் ப்ரகாஷிற்கு நரகமாயிருந்தது. கல்பனா வெடித்து அழுதிருந்தால் கூட அவனுக்கு இத்தனை வேதனையாய் இருந்திருக்காது. மாறாக அவள் அவனை ஒரு புன்முறுவலுடன் எதிர்கொண்டு வதைத்தாள். மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தாள். எங்கோ பயணம் போக காத்திருப்பது போல் இருந்தது அவள் நடந்துகொண்ட விதம். நிறைய கவிதை எழுதினாள் எழுதியதில் பிடித்ததை ப்ரகாஷிற்கு வாசித்துக் காண்பித்தாள் உலகத்தையும் வாழ்வையும் மாறாத நேசத்துடன் இரசித்துச்சுவைத்தாள். மழைக்காலத்தின் வரவிற்காய் காத்திருக்கத்துவங்கினாள். இடையே கீமோதெரப்பி ரேடியோதெரப்பி எல்லாம் பயன் தராமல் அவள் உடல்நலம் மெல்ல மெல்ல மோசமானது.

மழைக்காலம் வந்தும் மழை பிடிக்கவில்லை.

“மழை காலம் தொடங்கி இத்தனை நாளாகியும் மழை பெய்யலையே. எனக்கு கடைசியா ஒரு தடவை மழை பெய்யறதை பாக்கணும் ப்ரகாஷ்.’

நாட்கள் கடந்து சென்றன. ப்ரகஷிற்கு பதற்றமாயிருந்தது. கல்பனாவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலை அவன் மனதை அரித்து.

அடிக்கடி மொட்டை மடிக்குப்போய் வானத்தைப்பார்த்தான்.

“இன்னும் இருபது நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பில்லை.” வானியல் நிபுணர்கள் தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்தார்கள்.

செய்தி கேட்ட கல்பனாவின் முகம் வாடிப்போனது. ப்ரகாஷ் பதறினான். “இறைவா. ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு.” கண்ணடைத்துப் ப்ரார்த்தனை செய்தான்.

வானியல் நிபுணர்களின் கணிப்பைப் பொய்யாக்கி அன்று இரவு கரிய மேகங்கள் திரண்டு வந்தன. படுக்கையில் படுத்திருந்த ப்ரகாஷ் இடி இடிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தான். முதல் துளி அவன் முகத்தில் விழுந்தது. கண்ணில் நீர்கோர்க்க படுக்கையறைக்கு வந்தான். கல்பனா உறக்கத்திலிருந்தாள். அவளை மெதுவாய் உலுக்கி எழுப்பி அவள் கண்களை தன் கைகளால் பொத்தி ஜன்னலருகே அழைத்து வந்தான். கைகளை அகற்ற மெதுவாய் பெய்துகொண்டிருந்த மழையை கண்டு அவள் துள்ளிக் குதித்தாள். அவனை கட்டி முத்தமிட்டாள்.

“ப்ரகாஷ். கடைசியா ஒரு தடவை போய் மழைல நனைஞ்சிட்டு வரட்டுமா? ரொம்ப ஆசையா இருக்கு.”

ப்ரகாஷ் அவளை தடுக்கவில்லை.

கல்பனா வெளியே வந்தாள். வீதியில் இறங்கினாள். மழைத்துளிகள் அவளை நிமிடத்தில் ஈரமாக்கின. அவள் கைகளை விரித்து மெதுவாய் தன்னைத் தானே சுற்றி வந்தாள். ப்ரகாஷ் அவளை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு பிறகு ப்ரகாஷ் வற்புறுத்த அவள் மழைக்கு பிரியாவிடை கொடுத்து வீட்டிற்குள் வந்தாள்.

“இனி சந்தோஷமா கெளம்பலாம் ப்ரகாஷ் எனக்கு.” என்றாள்.

அடுத்து வந்த நாட்களில் அவள் உடல்நலம் மிக மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். “Critical condition. We will lose her any time.” என்றார்கள் மருத்துவர்கள்.

“இன்னும் ஒரு நாள்.” தினமும் இதே பிரார்த்தனையில் இருந்தான் ப்ரகாஷ். அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

“போகாதே கல்பனா.” உறங்கிக்கொண்டிருந்த அவள் செவியில் சொன்னான்.

அடுத்த நாள் அதிகாலையில் அவள் உயிர் பிரிந்தது. இறக்கும் முன் அவள் ப்ரகாஷை பார்த்து புன்முறுவல் பூத்து கேட்டாள்.

“என்னை மறந்திட மாட்டிங்களே?”






பருத்திக்கொட்டையிலிருந்து வெடித்துச்சிதறிய பஞ்சு போல் நாட்கள் பறந்து சென்றன. உறவினர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலும் காலம் இட்ட மருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக விதியின் வலிமையும் ப்ரகாஷை மறுமணம் முடிக்கவைத்தன. மகேஷ்வரி திருமணமான ஒரு வருடத்திலேயே கவிதாவை அவனுக்கு பெற்றுத்தந்தாள். வாழ்க்கை இவ்வாறாய் வேறொரு பாதையில் வேறொரு காலகட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதும் கூட இடையிடையே அவனுக்கு கல்பனாவின் நினைவு வந்தது. அவள் நினைவு வந்ததும் மரணம் குறித்த கேள்விகள் எழுந்தான்.






கல்பனா இறந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் ஒரு மழை நாளில்.

“என்ன இப்படி தொப்பலா நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க. கொஞ்சம் நேரம் ஆஃபீஸ்லயே இருந்திட்டு மழை நின்னப்புறம் கிளம்பிருக்கலாமே. உடம்புக்கு வந்திடுச்சுனா?” மகேஷ்வரி பதற்றமாய் அருகில்வந்து தலை துவட்டிவிட்டாள்.

“கவி எங்கே?”

“தோ. அந்த ரூம்ல விட்டுச் சாத்தியிருக்கேன். மழைல போய் ஆடணம்னு ஒரே அடம். இங்க விட்டிட்டு நான் சமையல் வேலையா இருந்திட்டா வெளிய ஓடிடுவானு பூட்டி வச்சிருக்கேன்.”

ப்ரகாஷ் உடைகளை மாற்றிக்கொண்டு கவிதா இருந்த அறை கதவை திறந்து உள்ளே நுழைகிறான். ஜன்னல் கம்பிகளிநூடே கைகளை நீட்டி அமர்ந்திருக்கிறது குழந்தை. அதன் பிஞ்சு விரல்களை நனைதுக்கொண்டிருக்கிறது மழைநீர்.

“கவிதா.”

அவள் திரும்புகிறாள். முகத்தில் குதூகலம். கண்கில் ஆனந்தம். அவளை பார்த்த மாத்திரத்தில் ப்ரகாஷின் மனதில் கல்பனாவின் முகம் தோன்றி மறைய அவன் அதிர்கிறான்.

“பாருங்கப்பா அம்மா வெளிய போகவிடாம பூட்டி வச்சிருக்காங்க. எனக்கு மழைல விளையாடணும்பா. ப்ளீஸ்.” குழந்தை ஏக்கமாய் கேட்டது.

“ப்ரகாஷ். கடைசியா ஒரு தடவை போய் மழைல நனைஞ்சிட்டு வரட்டுமா? ரொம்ப ஆசையா இருக்கு.”

ப்ரகாஷ் கவிதாவின் கரத்தை பற்றி அறையை விட்டு வெளியே அழைத்து வருகிறான். மகேஷ்வரி ஆச்சர்யமாய் பார்த்து நிற்க அவளை கடந்து வீட்டை விட்டு வெளியே தெருவிற்கு வருகிறான். கவிதாவின் கரத்தை மெல்ல விடுவிக்கிறான். கவிதா கைகளை விரித்துக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறாள்.

சரசரவென மழை துளிகள் கவிதாவின் மேல் விழுந்து அவளை நனைக்கின்றன. அவள் மகிழ்ச்சியில் நடனமாடுகிறாள். ப்ரகாஷ் அவளை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

“கல்பனா” மெதுவாக. மிக மெதுவாக அழைக்கிறான்.

கவிதா புன்முறுவல் பூத்த முகத்துடன் அவனை திரும்பிப்பார்க்கிறாள்.

மழை பலமாய் பெய்துகொண்டிருக்க அத்தனை வருடங்களாய் தன்னுள் எழுந்து இம்சித்த வினாக்களுக்கு விடை கிடைத்த சந்தோஷத்தில் ப்ரகாஷின் மனம் லேசாகிறது. மேற்கு திசையில் பலமாய் இடி இடிக்கிறது.



Some essense of individual life exists even after death. It may leave the corporal form that has perished, but it may re-enter the known world in a similar or different physical guise.