Wednesday, April 7, 2010

பூஞ்சோலை என்றொரு கிராமம்




இரயில் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டிருந்ததை உணர்ந்து நான் என் பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு ஆயத்தமானேன். நேரம் அதிகாலை நான்கு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.

கதவருகே நின்றுகொள்ள காற்று முகத்தில் அறைந்தது. தொலைவில் வெளிச்சப் புள்ளிகளாய் வீடுகளும் தொழிற்சாலைகளும் கடந்து சென்றன. விரைவு வண்டி ஒன்றிற்கு வழிகொடுத்துவிட்டு இரயில் மீண்டும் வேகம் பிடித்தது. பத்து நிமிட பயணத்திற்கு பிறகு நிறுத்தத்திற்கு வர நான் இறங்கிக்கொண்டேன். தரையில் கால்பதித்த மாத்திரத்தில் மனதில் ஒரு சந்தோஷ அலை அடித்து ஓய்ந்தது.

அந்த அதிகாலை நேரத்தில் இரயில் நிலையம் வெறிச்சோடியிருந்தது. விளக்குக்கம்பத்தின் அடியில் தெருநாய் ஒன்று சுருண்டு படுத்திருந்தது.

இன்னும் மூன்று மணிநேர பயணத்தில் ஒரு மோகம் நிறைவேறப்போகிறது. பல வருடங்களாய் மனம் கொண்டிருக்கும் தாகம் இன்று தணியப்போகிறது. போர்ட்டர் ஒருவன் நெருங்கிவந்தான்.

“எங்க சார் போகணும்?”

“பூஞ்சோலை.”

“முதல் பேருந்து கிளம்பிக்கிட்டிருக்கும். வாங்க புடிச்சிடலாம்.” என்று கூறி பெட்டிகளை வாங்கிக்கொண்டான்.

முதலிலெல்லாம் பூஞ்சோலைக்கு பேருந்து வசதி கிடையாது. நடந்து தான் கிராமம் வரை செல்ல வேண்டும். சற்று வசதி படைத்தவர்கள் மாட்டு வண்டியில் பயணப்படுவார்கள். கிராமம் வரை நடந்து செல்வதே ஒரு சுகமான அனுபவம். குறுகிய பாதையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் மரங்கள். உடலை உரிமையோடுத் தொட்டுச்செல்லும் குளிர்காற்று. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை. எங்கும் ஒரு சுகமான அமைதி.

சின்ன வயதில் அந்த பாதையில் நிறைய நடந்திருக்கிறேன். கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு அண்ணனின் தோளில் ஏறி அமர்ந்துகொள்வேன். வழியோர மாமரத்திலிருந்து காய் பறித்து ஒரு கடி கடித்து தூர வீசிவிடுவேன். சுமைகள் இல்லாத சுகமான காலம்.

போர்ட்டரின் பின்னால் நடந்து வந்து ஒரு பேருந்தில் எறியிருந்ததை உணர்ந்து அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினேன். கண்டக்டரிடம் பூஞ்சோலை கேட்க “கிராமத்துக்குள்ள போகாது சார். ஒரு ஒண்ணரை கிலோமீட்டர் நடக்கணும்.” என்றுவிட்டு சீட்டை கிழித்துத்தந்தான். நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் கிராமத்தை ஊடுறுவவில்லை. ஒரு ஒன்றரை கிலோமீட்டர் தள்ளியே நிற்கின்றன. சிரித்துக்கொண்டேன்.

முப்பது வருடங்களாயிற்று நான் பிறந்த இந்த மண்ணைப்பார்த்து. இந்த இடைவெளியில் மனதில் ஒட்டாத மேம்போக்கான ஒரு வாழ்க்கை. இப்பொழுது அந்த கிராமத்து நினைவுகளை அசைபோடும்பொழுது மனம் லேசாகிறது. வாழ்க்கை என் காலடியில் இருப்பதை உணராது ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் சென்று தேடிக்கொண்டிருந்திருக்கிறேன். பல வருடங்களாயிற்று ‘கிராமம் வரை ஒரு எட்டு போய் பார்க்கவேண்டும்’ என்று நினைக்கத்துவங்கி. எல்லா வருடமும் கடைசி நேரத்தில் தட்டிப்போய்விடும். இந்த முறை எந்த சிக்கலுமில்லாமல் இத்தனை தூரம் வந்தாயிற்று. என் நினைவுகளின் கோர்வையை முகத்தில் ‘சுரீர்’ என்று அறைந்த காற்று கலைத்தது. பேருந்து புறப்பட்டிருந்தது.


தொடரும்.....

No comments:

Post a Comment