
அப்பண்ணாவின் பதினாறாவது வயதில் அவன் தந்தை அவனுக்கு ஒரு இரும்பினாலான பெட்டியை கொடுத்தார். மூன்று நான்கு முறை வர்ணம் தீட்டப்பட்டிருந்ததால் அது ஒரு கலவையான நிறத்தில் இருந்தது. அப்பண்ணா முதன்முதலாய் அந்த பெட்டியை திறந்து பார்த்தபொழுது அதற்குள் நிறைய எறும்புகள் இருந்தன. அவை குறுக்கும் நெடுக்குமாய் அந்த பெட்டியே உலகமென்று வலம்வந்துகொண்டிருந்ததை பார்க்க வேடிக்கையாயிருந்தது. அப்பண்ணா அந்த எறும்புகளை வெளியேற்றாமல் பெட்டியை மூடினான்.
நாளடைவில் அப்பண்ணாவிற்கு தன் வாழ்க்கையில் அவன் பொக்கிஷமாய் கருதிய எல்லாவற்றையும் அந்த பெட்டியில் போட்டு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெட்டியிலிருந்த எறும்புகள் எந்தவொரு பொருளையும் ஒருபோதும் நாசம் செய்ததில்லை. அவற்றிற்கு அந்த பொருட்கள் அப்பண்ணாவிற்கு எத்தனை உயர்வானவை என்று தெரிந்திருந்தது போல் நடந்துகொண்டன.
மனம் பாரமாயிருக்கும்பொழுது அப்பண்ணா பெட்டியை திறந்து வைத்து அந்த எறும்புகளை பார்த்துக்கொண்டிருப்பான். சில எறும்புகள் இவன் பெட்டி திறந்ததும் ஒளிந்துகொள்ளும். மற்றவை ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நேர்க்கோட்டில் சரசரவென்று ஏதோ அவசர வேலையாய் போவது போல் ஊர்ந்து போய்க்கொண்டிருக்கும். அதை பார்த்திருக்கும் அப்பண்ணாவின் மனம் லேசாகும். காகிதத் துணுக்கையோ மாரத்துண்டையோ மற்ற எதையோ சுமந்து நடந்து போய்கொண்டிருக்கும் சில எறும்புகள்.
அவனுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது அவன் அந்த பெட்டிக்குள் கொஞ்சம் சர்க்கரை போடுவான். சர்க்கரை பெட்டிக்குள் விழுந்த சிரிது நேரத்திற்க்கெல்லாம் எறும்புகள் கூட்டமாய் கூடிவிடும். வழக்கமாய் இவன் பெட்டி திறக்கும் பொழுது ஒளிந்துகொள்ளும் எறும்புகள் கூட அவசரமாய் வெளியே வந்து சர்க்கரையை மொய்க்கும். அப்பண்ணா அவற்றை மகிழ்ச்சியாய் பார்த்திருப்பான்.
அப்பண்ணாவிற்கு திருமணமான பிறகும் ஏறும்புகளுடனான அந்த நெருக்கம் நீடித்தது. அவன் மனைவிக்கு அவன் வாரத்தில் ஒருமுறை அந்த இரும்புப்பெட்டியை திறந்து வைத்து வெறித்துப்பார்ப்பதும் உரக்கச் சிரிப்பதும் வினோதமாய் பட்டது. அவள் ஒருமுறை அப்பண்ணா வீட்டில் இல்லாதபோது அந்த பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதென்று பார்க்க முயற்சித்தபொழுது அதில் மொய்த்திருந்த எறும்புகள் அவள் விரல்களை கடித்தன. அவள் படாறென பெட்டியைச் சாத்திவிட்டு கையை உதறியபடி ஓடினாள். அதற்குப்பின் அவள் அந்தப் பெட்டியை திறக்க முயற்சிக்கவேயில்லை. அவர்களது நாற்ப்பது வருட திருமண வாழ்வில் அவளால் அப்பண்ணாவிற்கும் அந்த எறும்புகளுக்குமிடையேயிருந்த நெருக்கத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்து கொள்ளாமலே அவள் இறந்துபோனாள்.
அப்பண்ணாவிற்கு மூன்று மகன்கள். எல்லோரும் வளர்ந்து அவரவர் வழியில் போய்விட்டார்கள். மனைவி இறந்த பின் அப்பண்ணா தனிமையில் வாடினான். உடம்பிற்கு வந்து பார்த்துக்கொள்ள ஆளில்லாமல் இறந்துவிடுவோமோ என்ற பயம் மனதை ஆட்கொண்டது. மகன்கள் மாதமொருமுறை வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தப் போக்குவரத்தும்கூட அப்பண்ணாவின் பெயரிலிருந்த வீட்டிற்காகவும் கொஞ்சம் நிலத்திற்காகவும் தான் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. இரண்டு மூன்று முறை மகன்கள் சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதித்தருமாறு சூசகமாய் கேட்டார்கள். அப்பண்ணாவிற்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. அப்படிச் செய்தால் மகன்களில் போக்குவரத்து முழுவதுமாய் நின்றுவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான். தான் தனித்துவிடப்பட்டிருபதாகவும் சொத்துக்கள் முழுவதையும் தானமாய் கொடுக்கப்போவதாகவும் சொன்னான். சொத்திற்காகவாவது மகன்கள் பாசமாயிருக்க மாட்டார்களா என்று ஏங்கினான்.
இரகசியமாய் சொத்துக்கள் எல்லாவற்றையும் சமமாய் மூன்று மகன்களில் பெயரிலுமாக்கி உயில் ஒன்றை எழுதினான் அப்பண்ணா. அதை அவனது இரும்புப்பெட்டிக்குள் அவனது மற்ற பல பொக்கிஷங்களுடன் போட்டு வைத்தான். எறும்புகள் அதை சுற்றிச் சுற்றி வந்தன. அவன் கைகளை பெட்டிக்குள் போட எறும்புகள் அவன் விரல்களில் குருகுருப்பாய் ஊர்ந்தன. அவை அவனை வருடிக்கொடுப்பது போலவும் ஆறுதல் சொல்வது போலவும் இருந்தது அப்பண்ணாவிற்கு. கொஞ்சம் சர்க்கரை எடுத்துப் பெட்டிக்குள் போட எறும்புகள் எல்லாம் கூட்டமாய் அதை மொய்த்தன.
அப்பண்ணாவிற்கு எண்பத்திரண்டு வயதாகியும் அவன் இழுத்துக்கொண்டு கிடக்க மகன்கள் எரிச்சலானார்கள். சொத்தும் தராமல் செத்தும் தொலையாமல் கிழம் இழுத்துக்கொண்டு கிடக்கிறதே என்று கடுப்பானார்கள். அவன் செவிபடவே முணுமுணுத்தார்கள். மீண்டுமொருமுறை சொத்து பற்றி கேட்க அப்பண்ணா முடியாது என்று சொல்ல “செத்துப்போ கிழமே.” என்று கத்தினார்கள்.
அன்று இரவு அப்பண்ணா பெட்டி திறந்து அதற்குள் கைவிட்டபடி செத்துப்போனான்.
கொஞ்சம் நாட்களுக்குப் பின் மகன்கள் அப்பண்ணாவின் பெட்டி படுக்கைகளை எல்லாம் துழாவினார்கள். கடைசியாய் அவனது இரும்புப் பெட்டியை திறந்தார்கள். அதிலிருந்து அப்பண்ணா திருமணத்தன்று அணிந்திருந்த பட்டு வேஷ்டி அவன் அப்பா அம்மாவின் புகைப்படம் அவன் மனைவியின் தாலி இப்படி ஒவ்வொன்றாய் கிளறி எடுத்தார்கள். பெட்டிக்குள் இருந்த அத்தனை பொருட்களும் எந்த சேதமும் இல்லாமல் இருந்தன. அப்பண்ணா மகன்களின் பெயரில் எழுதிவைத்திருந்த உயிலை மட்டும் எறும்புகள் சுத்தமாய் கடித்து நாசம் செய்திருந்தன. பெட்டிக்குள் கொஞ்சம் சர்க்கரை கிடந்தது. இருந்தும் ஒரு எறும்பு கூட தட்டுப்படவில்லை.
No comments:
Post a Comment