Monday, April 5, 2010

அவன், அவள், இன்னொருவன்.





பாலா கையில் ஒரு பளபளப்பான கத்தி வைத்திருந்தான். சமையலறையில் முதுகு காட்டி நின்றிருந்த ப்ரியாவை மெல்ல நெருங்கினான். கண்களில் நீர் கோர்த்திருந்தது.

பாலாவினுடையது ஒரு காதல் திருமணம். ப்ரியா ஒரு பேரழகி. ஐந்தடி ஐந்தங்குலத்தில் வெண்ணையில் செதுக்கியெடுத்த சிற்பம் போலிருப்பாள்.

மூன்று வருடங்களுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் பாலாவின் ஓவியக் கண்காட்சி ப்ரியா வரவேற்பாளினியாய் பணிபுரியும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. பாலாவே முன்னால் நின்று ஏற்பாடுகளனைத்தும் செய்ததில் அடிக்கடி ப்ரியாவை சந்தித்துப் பேச நேர்ந்தது. ஏற்பர்டுகளுக்காய் முப்பது தினங்களும் கண்காட்சிக்காய் பதினைந்து தினங்களுமாக தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அவர்கள் சந்தித்ததில் ப்ரியவிற்கு அவனை பிடித்துப்போனது.

அவளுக்கு அவன் ஓவியங்கள் எதுவும் புரியவில்லை. கழுதையா குதிரையா என்று நிறைய நேரம் உற்றுப்பார்த்தும் விளங்கவில்லை. சில படங்கள் அவன் தூங்கும்பொழுது தவறுதலாய் கை தட்டி சாயம் காகிதத்தில் விழுந்ததுபோலிருந்தது. பாலா ஒவ்வொரு ஓவியம குறித்தும் ஒரு மணிநேரம் விளக்கிச் சொன்னான். அவன் விளக்கங்கள் ஓவியங்களை விட குழப்பமாயிருந்தன.

பாலா அவளை விட உயரம் கம்மி. கலைந்த தலையும் சீர்திருத்தாத தாடியுமாய் தடித்த கண்ணாடியிலிருப்பான். ப்ரியாவை அவன்பால் எது ஈர்த்தது என்று இருவருக்கும் பிடிபடவில்லை. இருந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆந்திராவில் ரௌடியாயிருக்கும் அப்பா திருமணமாகாத தங்கை ஜாதகம் பார்த்து குறை சொல்லும் பெரியப்பா என்று எந்த சினிமா சிக்கலும் இல்லாததால் அவர்கள் சந்தித்து ஆறு மதங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

பாலாவிற்கு ஓவியங்களிலிருது குறைவான வருமானமே வந்ததால் ப்ரியா தொடர்ந்து வேலை செய்ய நேர்ந்தது. அத்திபூத்ததுபோல வந்த ஓரிரு வாய்ப்புகளில் சொற்பமான பணமே கிடைத்தது. தன் கலைத்திறனுக்கு ஒரு வடிகால் கிடைக்காததும் ப்ரியாவின் வருமானத்தில் வாழ்வதும் பாலாவின் தன்னம்பிக்கையை குலைத்தது. அது நிலைமையை மேலும் பழாக்கியது.

எங்கெங்கோ அலைந்து திரிந்தும் பயனேதும் இல்லாமல் அன்று மதியம் வீடு திரும்பியபொழுது வாசலில் ஒரு கார் நிற்பது பார்த்து தயங்கிச் நிற்க ப்ரியவும் இன்னொருவனும் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அவசரமாய் புறப்பட்டார்கள். பாலாவிற்கு வியர்த்தது

யார் அவன்? ப்ரியா எதற்கு இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாள்? எதற்கு அவனை வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்? ஏன் அவசரமாய் கிளம்பினார்கள்? கேள்விகள் மனதை அரித்தன. அவன் தன் குழப்பத்தை ஒரு காகிதத்தில் இறக்கினான். மஞ்சளும், சிவப்பும், கருப்புமாய் ஒரு ஓவியம வரைந்தான். நீண்ட நேரம் அதையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாலையில் அவள் வீடு திரும்பினாள். காலையில் வைத்திருந்த பொட்டு இப்பொழுது இல்லை. சேலை கொஞ்சம் கசங்கியிருந்தது. அவள் வழக்கமான நலவிசாரிப்புகளுக்குபின் சமையலறையில் நுழைந்தாள்.

இருவரும் அதிகம் பேசாமல் சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்தார்கள். அவள் தலை வலிக்கிறது என்றுவிட்டு சீக்கிரமே தூங்கிப்போனாள். பாலாவிற்கு தூக்கம் வரவில்லை. சந்தேகம் மனதை அரித்துச்சுவைதது. தன்னை விட அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்தது தவறோ? மதியம் அவளுடன் பார்த்தவன் எப்படி இருந்தான்? நல்ல நிறம் போலிருந்தது. அவளை விட உயரம். உயர்ரக கார் அது. உடன் பணிபுரிபவனா? இல்லை வேறு ஏதேனும் வழியில் பழக்கமா?. எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காமல் பாலா உறங்கிப்போனபொழுது நேரம் அதிகாலை மூன்று மணி.

பதினோரு மணிக்கு பாலா எழுந்தபொழுது அவள் வேலைக்குப் போயிருந்தாள். சாப்பாட்டு மேஜையில் அவனுக்கான உணவும் காகிதத்தில் சில குறிப்புகளும் எழுதி வைத்திருந்தாள்.

அவன் மேலும் ஒரு ஓவியம வரைய துவங்கி பாதியில் கிழித்துப்போட்டான். மாலை நான்கு மணிக்கு அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கு போனான். ரிஸெப்ஷனில் அவள் இல்லை.

“பர்சனல் வேலையா வெளிய போயிருக்காங்க.”

“எப்ப போனாங்க?”

“இரண்டு மணிநேரம் இருக்கும்.”

அவன் திரும்பி வீடு வந்தான். சந்தேகம் இப்பொழுது ஆத்திரமாய் மாறியிருந்தது

மாலை ஏழு மணிக்கு அவள் வீடு திரும்பினாள். இன்றும் சேலை கசங்கியிருந்தது.

கைப்பையை தூர வீசிவிட்டு அவனை வந்து அணைத்துக்கொண்டாள்.

“ஒரு குட் நியூஸ் பாலா.” என்றள்.

“நேஷனல் ஆர்ட் காலரில மாடர்ன் ஆர்ட் பெய்ன்டிங் எக்ஸிபிஷன் ஒண்ணு போடப்போறாங்க. இது உங்களுக்கான அழைப்பு.” என்று விட்டு அவனிடம் ஒரு காகிதத்தை தந்தாள். “காலரி க்யுரேட்டரை நேத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க பெய்ன்டிங்ஸை காட்டினேன். அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இன்னைக்கு வந்து இன்விடேஷன் வாங்கிக்கச் சொன்னார்.” சொல்லிவிட்டு அவள் உடை மாற்றி சமையல் அறையில் நுழைந்தாள்.

பாலா கையில் ஒரு பளபளப்பான கத்தி வைத்திருந்தான். சமையலறையில் முதுகு காட்டி நின்றிருந்த ப்ரியாவை மெல்ல நெருங்கினான். கண்களில் நீர் கோர்த்திருந்தது. அவள் வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். அவள் அருகே நெருங்கி “நான் நறுக்கித்தரட்டுமா ப்ரியா?” என்றான்.

2 comments: